21/01/2022 (330)
நிறைய செய்திகள். எங்கிருந்து தொடங்குவது?
உழவு என்றால் உழுதல். இது ஒரு தொடர் வினை. அதாவது தொடர்ந்து செய்வது. வடை சுடுவதுபோல ஒரு முறை நிகழ்வு அல்ல! உழவை ‘உழப்பு’ என்றும் சொல்கிறார்கள். அந்த உழப்புதான் ‘உழைப்பு’ என்ற சொல்லாக மாறி உள்ளது.
உழைப்பிற்கு முயற்சி என்று பொருள். எப்படி பாருங்க, உலகம் ஒரு வட்டம் என்பதுபோல, உழவு என்றால் முயற்சின்னு முடியுது. முயற்சி என்பதும் ஒரு தொடர் நிகழ்வுதான்.
எப்படி உழவை, உழப்பு என்று மாற்றினாய் என்று கேட்கறீங்க?அதானே? பார்ப்போம்.
பட்டிணத்தடிகள் (பட்டிணத்தார்) இயற்றிய ‘திருக்கழுமல மும்மணிக்கோவை’ என்ற நூல் பதினோராம் திருமுறையில் உள்ள பன்னிரண்டு நூல்களில் ஒன்று. அதில் பழமொழிகளோடு ஒரு பாடலைத் தொடங்குகிறார்:
“உழப்பின் வாரா உறுதிகள் உளவோ
கழப்பின் வாராக் கையறவுளவோ அதனால்
நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை …”
‘உழப்பின் வாரா’ என்பதைத்தான் இப்போது ‘உழைப்பின் வாரா’ என்று மாற்றிவிட்டோம். தப்பில்லை. பட்டிணத்தடிகள் சொல்வது உழவினால் வாராத இன்பங்கள் எதுவும் இல்லை; அதுபோல கழப்பின் வாராத் துண்பங்கள் இல்லை என்கிறார். கழப்பு என்றால் சோம்பல்.
ஆக, தொடர்ந்து மோதினால் ‘மாமலையும் ஓர் கடுகாம்’! உங்கள் கற்பனைக்கு நான் பொறுப்பல்ல.
நிலத்தை எப்படி உழவேண்டுமாம் தெரியுங்களா? ஒன்றை நான்காக்க வேண்டுமாம். கட்டி, கட்டியாக இருப்பதை தூள் தூளாக மாற்றனுமாம். அளவு இருக்கா? இருக்கு தொடியை கஃசாக மாற்றனும்.
அது என்ன ‘தொடி’ & ‘கஃசு’?
தொடி, கஃசு என்பது நிறுத்தல் அளவைகள். தொடி என்றால் ஒரு பலம்; கஃசு என்றால் கால் பலம். பலம் ~ 41.6 gm. ஒரு பலம் = 4 கஃசு. அளவைகளை விரித்தால் நீளும். குறள் இதோ:
“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.” --- குறள் 1037; அதிகாரம் – உழவு
ஒன்றை நான்காக உழுதால் பிடி எருகூட இல்லாம விளையுமாம். உழுதலின் முக்கியத்தைச் சொல்கிறார். எரு வேண்டாமா? நாளைக்குப் பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments