03/10/2021 (222)
தூதுவர்கள் இருவகை. தனது தலைமைக்கும், தனது நாட்டிற்கும், தமது இனத்திற்கும் எது நன்மை பயக்கும் என்பது அறிந்து அதற்கு ஏற்றார் போல் தான் சொல்ல வேண்டியதை வகுத்து உரைப்பவர்கள் ஒரு வகை. இவர்கள், எதிர் வரும் கேள்விகளுக்கும் தக்க பதில் சொல்ல வல்லவர்கள். இவர்களை வகுத்துரைப்பார் என்று கூறுகிறார்கள்.
இன்னொரு வகை தூதுவர்கள், சொன்ன செய்தியை அப்படியே தெரிவிக்கும் உறுதி படைத்தவர்கள். எதிர் கேள்விகளைத் தவிர்த்து விடுவார்கள். இவர்களை, வழியுரைப்பார் (கூறியது கூறுவார்) என்று சொல்கிறார்கள்.
ஆக, தூதுவர்கள் வகுத்துரைப்பார், வழியுரைப்பார் என்று இருவகை. இந்த இருவகையினருக்கும் பொதுவான பண்புகளை இந்த அதிகாரத்தின் முதல் இரண்டு குறள்களில் தெளிவு படுத்துகிறார் நம் பேராசான்.
அனைவரிடமும் முதலில் இருக்க வேண்டிய பண்பு அன்பு. இல்லறத்தின் வழியே கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் அன்புதான்.
அன்பு என்பது நமக்கு தொடர்பு உடையவர்களிடம் நாம் செலுத்தும் பரிவு, கரிசனம். தூதுவனுக்கும் இது தான் முதல் பண்பு.
நம்மாளு: நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, மாற்றானுக்கு இரண்டு கண்ணும் போகனும்ன்னு நினைத்தால் அது சரிபட்டு வராது.
இரண்டாவது பண்பு, அவன் குடும்பம் குறையில்லாக் குடும்பமாக இருக்க வேண்டுமாம். தூதுவனுக்கு இது முக்கியம் என்கிறார்.
நம்மாளு: என்னைப் பாரு, என் குடும்பத்தை ஏன் பார்க்கிற என்று கேட்கக் கூடாது. இந்த வேலை அந்த மாதிரி! மாற்றானிடம் பேசப் போகும் வேலை இது. அவன் கிண்டல் பண்ணப்படாது.
இந்த இரண்டும் மட்டுமில்லாமல், மூன்றாவதாக, தலைமையே அவனை விரும்பக்கூடிய தகுதியும் இருக்கனுமாம்.
நம்மாளு: யார் சிபாரிசும் இருக்கக் கூடாது. அதாங்க, ரெக்கமண்டேஷன்னு (recommendation) தமிழிலே சொல்வாங்களே அது கிடையாது.
“அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.” --- குறள் 681; அதிகாரம் - தூது
அன்புடைமை = தன் சுற்றத்திடம் அன்பு; ஆன்ற குடிப்பிறத்தல் = குறையில்லா குடும்பத்தில் பிறந்திருத்தல்; வேந்தவாம் பண்புடைமை = அரசனே (தலைமை) அவாவும், விரும்பும் தகுதி; தூதுரைப்பான் பண்பு = தூது செல்பவர்களுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்புகள்.
தொடர்ந்து பேசுவோம். உங்களின் கருத்துகளை கீழே உள்ள கருத்துகள் பெட்டகத்தில் (comments box) மிகவும் சுலபமாக பகிரலாம்.
நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments