top of page
Search

துப்புரவு இல்லார் ... குறள் 1050

02/02/2022 (342)

நல்குரவின் பண்புகளை முதல் ஐந்து குறள்களிலும், அதனைத்தொடர்ந்து, அதன் கொடுமைகளை நான்கு பாடல்களிலும் சொன்ன நம் பேராசான் பல வகைகளில் சிந்திக்க வேண்டிய ஒரு குறளை முடிவுரையாக அமைத்துள்ளார்.


இடித்துச் சொல்வதுபோல இருக்கிறது இந்தக் குறள். ஒரு பழமொழி இருக்கு. “சோற்றுக்கு கேடு, பூமிக்கு பாரம்” என்று. இதன் பொருள், சும்மா வெட்டியாக பொழுதைக் கழிக்காதே. அதன் உள்பொருள்: ஏதாவது செய்து சொந்தக் காலில் நில்லு என்பதுதான்.


ஒரு வீட்டில் வேலை கிடைக்காத பட்டதாரி இருக்கிறார் என்றால் அவரை பெற்றவர்கள் “தண்டச்சோறு” என்று கடிந்து கொள்வார்கள் இல்லையா? இன்னும் ஒரு படி மேலே போய், நீ இருப்பதற்கு இல்லாமலே இருக்கலாம் என்றும் கடிவார்கள். அதற்குப் பொருள், அவர் அப்படியே இருந்துவிடக் கூடாது என்பதுதான். அது அவரை அவமானப்படுத்த அல்ல. அது இடித்துக்கூறுவது. அது ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதால் “சாம, தான, பேத, தண்ட” முறையில் வழி நடத்துவது. இதற்காக மனம் உடையக் கூடாது.


எங்கெல்லாம், நாம் அவமானப் படுத்தப்படுகிறோமோ, அங்கெல்லாம், நாம் மேலும் வளர, வளமான உரம் இடப்படுகிறது. அவமானப் படுத்துபவர்களுக்கு தக்க பதில் வன்முறையிலும் அல்ல, தன்னை அழித்துக் கொள்வதிலும் அல்ல. தன்ன மேலும் மெருகூட்டுவதன் மூலம்தான் அவர்களை அன்னாந்து பார்க்க வைக்க முடியும். இந்த உண்மை வரலாற்றின் வழிகளில் ஏராளம். இது நிற்க.


நாம குறளுக்கு வருவோம். உனக்கு பசிக்கு உணவு இல்லை என்றால், நீ ஏன் இன்னும் உன் ஆசைகளைத் துறக்காமல் இருக்கிறாய்? இது எந்த விதத்தில் சரி? உனக்கு என்ன கிடைக்கிறது? ஆகக் கடைசியா கீழே ஊற்றப் போகிற பழம் கஞ்சி, அதுகூட, ஆக மலிவான உப்புத்தூள், அவ்வளவுதானே?


அதற்காகவா உயிர் வாழ்கிறாய்? என்ன உன் நினைப்பு? எழு தம்பி. விழி தம்பி, உழை தம்பி. என்று நான் சொல்லலைங்க நம் வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார். இதோ, அந்தக் குறள்.


துப்புரவு இல்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று.” --- குறள் 1050; அதிகாரம் – நல்குரவு


துப்புரவு இல்லார் = ஏதும் இல்லாதார்; துவர = முற்றும்; துவரத்துறவாமை = முற்றும் துறவாமல் இருப்பது, வாழ வேண்டும் என்று ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு வழி ஏதும் செய்யாமல் இருப்பது; உப்பிற்கும் காடிக்கும் கூற்று = மற்றவர்களின் உப்பிற்கும், பழம் கஞ்சிக்கும்தான் வடிகால்.


கூற்று என்றால் எமன் என்ற பொருளையும் அறிஞர்கள் பயன் படுத்துகிறார்கள்.


“… கொடுங்கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் வேடிக்கை மனிதரைப் போலே வீழ்வேன் என நினைத்தாயோ …” என்றார் மகாகவி பாரதி.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)






17 views2 comments
Post: Blog2_Post
bottom of page