top of page
Search

தெய்வத்தான் ஆற்றின் 619, 468

29/10/2022 (605)

‘முயறல்’ என்றால் ‘முயலுதல்’/ ‘மேற்கொள்ளல்’ என்று பொருள்.

‘வருத்தம்’ என்றால் ‘முயற்சி’ / ‘உழைப்பு’ என்ற பொருளும் உண்டு.

‘மெய் வருத்தக் கூலிதரும்’ –உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு அது உடலோ, மனமோ எதுவானாலும் சரி.


எல்லாம் வல்ல ஆண்டவன் / தெய்வம் / பரம் பொருள் என்பது ஒரு குறியீடு. நம் முயற்சி, மேலும் நம் அனைவரின் கூட்டு முயற்சியைவிட ஒரு பெரும் ஆற்றல் இருக்கத்தானே செய்கிறது!


அதனைத்தான் அவர் அவர்களுக்கு எட்டியவாறு உருவத்தைக் கொடுத்தோ கொடுக்காமாலோ இறை/ தெய்வம் என்று பெயரிட்டு அழைத்து வணங்குகிறோம் அல்லது மதிக்கிறோம்.


தெய்வத்தால், பேர் ஆற்றலால் எல்லாம் நிகழும் என்று எண்ணினாலும் அதனைமட்டுமே சாராது, முயல்வது என்பது அனைத்து உயிரனங்களின் இயல்பு. அதுதான் சரியும்கூட.


எல்லாம் தெய்வம் பார்த்துக் கொள்ளும் என்று சோம்பி இருந்தால் ஒன்றும் நடக்காது. தன் மட்டில் செய்யும் செயல்கள் அந்த முயற்சிக்கு, அந்தச் செயல்களுக்கு ஏற்றவாறு ஊதியத்தை நிச்சயமாகக் கொடுக்கும்.


லாட்டரிச் சீட்டே வாங்காமல் லட்சம் விழாது!


நம்மாளு: ஐயா, நீங்க சொல்வது சரி. ஆனால், நானும் எவ்வளவோ செயல்கள் / நன்மைகள் செய்கிறேன். ஆனால் ஒன்றும் பலன் இருப்பதாகத் தெரியவில்லையே?


ஆசிரியர்: தம்பி, முன்பொருமுறை வாரியார் சுவாமிகள் சொன்ன ஒரு கதையைக் கேட்டோமே உங்களுக்கு நினைவிருக்கிறதா?


நம்மாளு: கொஞ்சம் நினைவிருக்கிறது ஐயா. இருப்பினும் நீங்கள் மீண்டும் ஒரு முறை சொல்ல இயலுமா?


ஆசிரியர்: வாரியார் சுவாமிகள் ஒரு கதை சொல்லுவார். மாட்டுக்கு நாம புல்லுக்கட்டை அதன் வாய் வழியாகத்தான் கொடுக்கிறோம். ஆனால், அது பாலை தன் மடியிலிருந்து கறக்கிறது. வாய் வழியாகத்தானே உதவி செய்தோம், அதனால் அதன் உதவியாகிய பாலும் வாய் வழியாகவே வர வேண்டும் என்றும் நாம் நினைப்பதில்லை. அதேபோல், நாம் புல்லினைக் கொடுத்த உடனேயும் பாலை எதிர்பார்ப்பதில்லை. தக்கச் சமயத்தில் தகுதியானது கிடைக்காமல் போகாது என்பார் வாரியார் சுவாமிகள்.

எக்காலத்திலும் முயற்சியை மட்டும் கை விட்டுவிடுவது கூடாது.


Winners never quit; Quitters never win என்று ஒரு ஆங்கிலப் பழமொழி இருக்கிறது.


“வெற்றியாளர்கள் என்றும் தங்கள் முயற்சிகளைக் கைவிடுவதும் இல்லை; முயலாதவர்கள் என்றுமே வெற்றியாளர்களாக ஆவதுமில்லை.”


இதைத்தான் நம் பேராசான் இவ்வாறு சொல்கிறார்:


தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.” --- குறள் 619; அதிகாரம் – ஆள்வினை உடைமை


தெய்வத்தான் ஆகாது எனினும் = பேராற்றலின் கருணையினால் நற்பேறு (luck) எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் (கவலைப்படத் தேவையில்லை);

முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும் = நம் முயற்சியானது அதன் அளவிற்கு பயனைத் தராமல் போகாது.


பேராற்றலின் கருணையினால் நற்பேறு (luck) எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் கூட கவலைப்படத் தேவையில்லை. நம் முயற்சியானது அதன் அளவிற்கு பயனைத் தராமல் போகாது.


ஆனால், இந்த முயற்சியானது எப்படியென்று தெரிந்து முயற்சி செய்ய வேண்டும். அது ‘செய்து முடிக்க வேண்டும்’ என்ற முயற்சியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அந்தத் தெய்வமே வந்து துணை நின்றாலும் ஒன்றும் நடக்காது.


ஒரு வேலையைச் செய்ய வேண்டிய பருவத்தில், இடத்தில், தகுந்த வலுவுடன் செய்ய முயலவில்லை என்றால் பலர் நமக்குத் துணையாக வந்தாலும்கூட அதனால் ஒரு பயனும் இருக்காது. நான் சொல்லலைங்க நம் பேராசான் இவ்வாறு சொல்கிறார்:


ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று

போற்றினும் பொத்துப் படும்.” --- குறள் 468; அதிகாரம் – தெரிந்து செயல்வகை

ஆற்றின் வருந்தா வருத்தம் = நாம் ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணிச் செய்யாத முயற்சியில்; பலர் நின்றுபோற்றினும் பொத்துப்படும் = பலர் நமக்குத் துணையாக இருந்தாலும்கூட அந்தத் துணைகளாலும் எந்தப் பயனும் இராது.


போற்றுதல் = துணைக்கு வருதல்; பொத்துப் படும் = சிதறி விடும் / உடைந்து விடும் / ஓட்டையாயிடும்


நாம் முடிக்கனும் என்று செய்யாத முயற்சியில் பலர் நமக்குத் துணையாக இருந்தாலும்கூட அந்தத் துணைகளாலும் எந்தப் பயனும் இராது.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்






Post: Blog2_Post
bottom of page