நவில்தொறும் நூல்நயம் ... குறள் 783
06/12/2021 (286)
நட்பு இயற்கை, செயற்கை என்று இரண்டுவகைப் படும் என்றும், அதிலே, இயற்கை நட்பு என்பது, பிறப்பு முறையால் வருவது என்றும், ஊர் சம்பந்தத்தால் வருவது என்றும் பரிமேலழகப் பெருமான் சொன்னதைப் பார்த்தோம். அதையும் எனக்கு புரிந்த வரையில் விரிக்கிறேன்.
பிறப்பு முறையால் வரும் நட்பு என்பது சுற்றமாகும். சுற்றத்தை நாம் தேர்ந்து எடுக்க முடியாது. இருப்பினும் சுற்றத்தாறோடு நாம் நட்பாக இருப்பது அவசியம். அது குறித்து ‘சுற்றந்தழால்’ எனும் (53ஆவது) அதிகாரத்தில் நம் பேராசான் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.
‘ஊர் சம்பந்தம்’ என்பதைக் குறித்து ‘வலியறிதல்’ எனும் (48ஆவது) அதிகாரத்தில் நம் வள்ளுவப் பெருந்தகை விளக்கியுள்ளார். இது துணைவலி என்கிறார். இது நமது பகைவர்களை முன்னிட்டு அவர்களுக்கு எதிராக அணிதிரண்டு நமக்கு துணையாகும் நாடுகளாகும். அஃதாவது, நமக்கு இருக்கும் தொல்லைகளைக் கண்டு இயற்கையாகவே உதவ வரும் நல்உள்ளங்கள் இதில் அடங்கும். எனவே சுற்றமும், இந்தத் துணைவலியும் இயற்கையாகவே அமைந்து விடுகிறது.
நட்பு அதிகாரத்தில் சொல்லியிருக்கும் நட்பு நாமே உருவாக்குவது. அதனால் இது செயற்கை நட்பு என்று பகுக்கிறார் பரிமேலழகப் பெருமான். இதிலே நம்முடையப் பங்கு பெரிது. கொடுப்பதிலும், கொள்வதிலும் வளருவது இது. அதன் சிறப்பைத்தான் நட்பு அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார்.
அந்த நட்பு வளருவது எது போல இருக்கும் என்றால் ஒரு நல்ல நூலைக் கற்க கற்க (உதாரணம் – நம்ம திருக்குறள்) அது இன்பம் பயப்பதைப் போல நற்பண்புள்ளவர்களின் நட்பு பழகப் பழக இன்பம் அளிக்குமாம்.
சொன்ன செய்தி: நற்பண்பு கொண்டவர்களுடன் பழகப் பழக இன்பம். சொல்லாமல் சொன்ன செய்தி: தீப்பண்பு கொண்டவர்களின் தொடர்பைத் தொடரத் தொடர துண்பம், முழுமதி தேய்வதைப் போல!
“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தோறும்
பண்புடையாளர் தொடர்பு.” --- குறள் 783; அதிகாரம் – நட்பு
பண்புடையாளர் தொடர்பு பயில்தோறும் = பண்புடையாளர்களின் நட்பு பழகப் பழக இன்பம் தரும்; நூல் நவில்தொறும் நயம் போலும் = (அது எதுபோல என்றால்) நல்ல நூல்களைக் (செய்திகளைக்) கற்க கற்க கற்பவருக்கு இன்பம் தருவதைப் போல; நயம் = நயத்தினைச் செய்வதால் நயம், இன்பம்
நட்பை பழகுவோம், பேணுவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
