top of page
Search

நாநலம் என்னும் ... 641

11/04/2023 (768)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

சொல்வன்மையைக் (65ஆவது அதிகாரம்) குறித்துச் சொல்லத் தொடங்குகிறார்.


நலம் என்ற சொல்லுக்கு நன்றாக இருத்தல், அறம், அழகு இப்படிப் பல பொருள்கள் இருக்கின்றன.


நலம் என்பதை அழகு என்று எடுத்துக் கொண்டால், நமக்கு எது மிகுந்த அழகு தரும் என்ற கேள்விக்குப் பதிணென் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்ச மூலம் என்ற நூலில் அதன் ஆசிரியர் காரியாசான் பெருமானார் கீழ்வருமாறு சொல்கிறார்:


1) கூந்தல் ஒரு அழகுதான்; 2) கண்கவர் மார்பும் அழகுதான்; 3) நன்றாகப் பராமரிக்கப்பட்ட நகம்கூட அழகுதான்; 4) காது இருக்கிறதே அது மட்டுமென்ன அதுவும் அழகுதான்; 5) மாசற்ற பல்கூட அழகுதான் என்றாலும் இந்த அழகெல்லாம் ஒரு அழகல்ல என்கிறார் காரியாசான் பெருமானார்.


சரி, எதுதான் அழகாம் என்ற கேள்விக்குச் சொல்கிறார்:

தேர்ந்த நூல்களினாலும், அனுபவத்தாலும் பெற்ற அறிவை மற்றவர்கள் ஏற்குமாறு சொல்லும் சொல்லின் அழகு இருக்கே, அடடா, அதுதான் அழகு என்கிறார்.


‘பஞ்ச’ என்றால் ஐந்து; மூலம் என்றால் வேர்; ஐந்து சிறு வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துதான் சிறுபஞ்சமூலம். தமிழ் மருத்துவ முறையில் கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து.


அதுபோல, நம் காரியாசான் பெருமானார், ஐந்து கருத்துகளைக்கூறி அதனினும் முக்கியமானதை நமக்குத் தெரிவிக்கிறார் என்கிறார்கள்.


மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர்வனப்பும் காதின் வனப்பும் செயிர்தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல, நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு” --- பாடல் 36; சிறுபஞ்சமூலம்


உகிர் = நகம்; செயிர் தீர்ந்த பல் = மாசற்ற பல்


அதாவது நா நலம் அதுதான் அழகு என்கிறார்.


சரி, நம் பேராசான் வள்ளுவப் பெருந்தகை சொல்வதைப் பார்ப்போம்.


நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.” --- குறள் 641; அதிகாரம் – சொல்வன்மை


நாநலம் என்னும் நலனுடைமை = அமைச்சனுக்கு, சான்றோர்களால் சொல்லப்படும் சொல் அழகு பொருந்தியிருத்தல்;

அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று = அந்த சொல் அழகு, மற்றெல்லா அழகும் ஒரு சேர இருந்தாலும் ஈடாகா.



அமைச்சனுக்கு, சான்றோர்களால் சொல்லப்படும் சொல் அழகு பொருந்தியிருத்தல் மிகச் சிறந்த அழகு. மற்றெல்லா அழகும் ஒரு சேர இருந்தாலும் சொல் அழகிற்கு ஈடாகா.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page