top of page
Search

புகழின்றால் புத்தேள்நாட்டு ... 966, 1255

11/08/2022 (530)

“சூடாமணி நிகண்டு” ன்னு ஒரு நூல் இருக்கு. நிகண்டு என்றால் தமிழிலே “சொற்களஞ்சியம்” என்பார்கள். அதாவது, ஒத்த சொற்களை(synonyms) தொகுத்துத் தருவது. ஆங்கிலத்தில் dictionary, thesaurus.


Thesaurus ல் synonyms, antonyms இரண்டுமே இருக்குமே. இது தப்புன்னு தோணுமே! உங்களைப் பாராட்டிக் கொள்ளுங்கள். இது நிற்க.


ஒரு மொழியைக் கற்க முதலில் நிகண்டு படிக்க வேண்டும். நிகண்டு குறித்து நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 11/08/2021 (169).


என்ன ஆச்சரியம் பாருங்க, சரியாக ஒரு ஆண்டிற்கு முன், (11/08/2021) அதைப் பற்றி பார்த்துள்ளோம். தேடிப் பாருங்க. www.easythirukkural.com வலைதளத்தில் மிகச் சுலபம். ரொம்பவே ஈஸியாக கண்டு பிடிக்கலாம்.


இது நிற்க. எதற்கு இப்போது நிகண்டு என்றால் “புத்தேளிர்”, “புத்தேள்” என்ற சொற்களுக்கு பொருள் என்னவென்று தெரிந்து கொள்ள!


புத்தேளிர் என்றால் தேவர்களைக் குறிக்கும் சொல்லாம். தேவர்களைக் குறிக்கும் சொற்களைப் பட்டியலிடுகிறார் கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த சூடாமணி நிகண்டின் ஆசிரியப் பெருமான் மண்டல புருடர்.


தேவர் = தெய்வமாபவர்; அமரர் = போரிடுபவர்; பண்ணவர் = பண்போலும் இனியவர்; புத்தேளிர் = புதுமையானவர்; அண்டர் = வானத்திலிருப்பவர்; உம்பர் =இடைநிலத்தில் இருப்பவர்; இமையவர் = இமையாக் கண்ணர்; விபுதர் = சிறந்த அறிஞர்; இலேகர் = சிறப்பான ரேகை உடையவர்; புலவர் = நூல் அறிவுள்ளவர்; அமுதர் = அமுதம் உண்டவர்; ஆதித்தர் = அதிதியின் மக்கள். (பாடல் – 50; சூடாமணி நிகண்டு – கவிஞர்கோ கோவை இளஞ்சேரனார் பதிப்பு)


புத்தேள் நாடு என்றால் தேவர்கள் வாழும் நாடு என்றும், புதுமையான உலகம் என்றும் பொருள் கொள்ளலாம்.


அப்பாடா, ஒரு வழியாக வந்துட்டேன். இப்போது அந்தக் குறளைப் பார்க்கலாம்.


புகழின்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை.” --- குறள் 966; அதிகாரம் – மானம்


புகழின்றால் = புகழ் கிடைக்காது; புத்தேள்நாட்டு உய்யாதால் = தேவர்கள் வாழும் நாட்டிற்கு செல்ல முடியாது, வரும் புதுமையான உலகம் மதிக்காது; மற்று என் = பிறகு எதற்கு (மானத்தை விடுவது); இகழ்வார்பின் சென்று நிலை = நம் குடியை, நம்மை இகழ்வார்கள் பின் சென்று நின்று மானத்தை இழக்கும் நிலை.


நம் குடியை, நம்மை இகழ்வார்கள் பின் சென்று நின்று மானத்தை இழக்கும் நிலையை விரும்புவது ஏன்? அதனால், புகழும் கிடைக்காது, புத்தேள் நாட்டிலும் இடமிருக்காது.


இதைச் சொன்ன நம் வள்ளுவப் பெருந்தகை, நம்மை இகழ்பவர்கள் பின்னால் செல்வதும் இன்பம் என்று சொல்லியிருக்கிறார். அப்படியா என்று கேட்காதீர்கள். நாம் அதை ஏற்கனவே பார்த்துள்ளோம். - காண்க 10/03/2022 (377).


அந்த இடமே வேற. அது, இன்பத்துப் பாலில்!

அங்கே, மானம், அது, இதுன்னு பேசிட்டு இருக்கக் கூடாது. என்ன புரியுதா? என்றார் ஆசிரியர்.


நம்மாளு மைண்ட் வாய்ஸ்: “அப்போ, அங்கே செயல் மட்டும்தான் போல இருக்கு”


செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன்று அன்று.” --- குறள் 1255; அதிகாரம் – நிறையழிதல்


செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை = நம்மை வேண்டாம் என்று சொல்பவர்களிடம் மீண்டும் செல்லாமல் இருப்பதுதான் கெத்து; காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று = ஆனால், அன்பிலே கட்டுண்டவர்களுக்கு பின்னாடி போகாத கெத்து தெரியாது.

என்ன அருமையான, அழகான குறள்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.




12 views0 comments
Post: Blog2_Post
bottom of page