பேதைமை ஒன்றோ ... 805, 372
27/12/2021 (306)
உரிமையால் நம்மைக் கேளாமலே நம் நண்பர்கள் சில செயல்களைச் செய்வார்கள். அதனை அப்படியே விரும்பி ஏற்றுக் கொள்வது பழமையின் இலக்கணம் என்று கூறிக்கொண்டே வருகிறார்.
சில சமயம் நாம் வருந்தும் விதமாக ஏதாவது நண்பர்கள் சில காரியங்கள் செய்து விட்டால் அதற்கு பேதைமை மட்டும்தான் காரணமாக இருக்க முடியுமா? அது உரிமையால் இருக்கலாம் என்று எடுத்துச் சொல்கிறார் நம் பேராசான்.
என்ன உரிமை? ஒன்று, நம்மிடம் நீண்ட நாள் பழகிய உரிமை; மற்றொன்று, நமக்கு ஏற்படவேண்டிய ஒன்று, உரிமையான ஒன்று அவர்களின் மூலமாக வந்து இருக்கவும் வாய்ப்பு இருக்கலாமாம். அதற்கு அவர்கள் ஒரு கருவியாகக் கூட இருக்கலாம் என்கிறார். ஆகையால் கருவியை நொந்து கொள்வதில் பயன் இல்லை என்கிறார்.
இதை நம் பேராசான் குறள் 372ல் ஊழ் எனும் அதிகாரத்தில் முன்பே தெளிவு படுத்திவிட்டார்.
“பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை.” --- குறள் 372; அதிகாரம் – ஊழ்
இழவூழ் உற்றக்கடை அறிவு அகற்றும் = ஒருவர்க்கு எல்லா அறிவு நிரம்பி இருப்பினும் இழத்தற்குரிய காலம் வந்துவிட்டால் அவனின் அறிவு நீங்கும்; ஆகல் ஊழ் உற்றக்கடை அறிவு அகற்றும் = அதே சமயம், அவனுக்கு பயன் தரக்கூடிய காலம் வந்துவிட்டால் அவனின் அறிவு விரியும்.
என்ன அழகு பாருங்க. ‘அகற்றும்’ என்ற ஒரு சொல்லுக்கு இரு வேறுபட்டப் பொருள். அதையும் ஒரே ஒருமுறை போட்டு இரு வேறு பொருள் வருவது மாதிரி செய்வதில் நம் பேராசானை அடித்துக்க முடியாது.
இது நிற்க. நாம் நம்ம பழைமைக்கு வருவோம்.
“பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.” --- குறள் 805; அதிகாரம் - பழைமை
நோதக்க நட்டார் செயின் = நாம் வெறுக்கத்தக்கன நம் நட்புகள் செய்தால்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை = (அதற்கு) பேதைமை மட்டும்தான் காரணமாக இருக்குமா? அது உரிமையால் வருவதும் கூடும்.
இந்தக் கிழமை(உரிமை)யினால்தான் வந்தது என்று பொருள் எடுக்க முடியுமா என்றால் அதுவுமல்ல. அந்த பாதிப்பு நமக்கு வர வேண்டிய ஒன்றாகக்கூட இருக்கலாம். ‘பெருங்கிழமை’ என்பதின் மூலம் அதைத்தான் உணர்த்துகிறாரா நம் வள்ளுவப் பெருந்தகை?
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
