03/12/2022 (639)
தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முதல் மூன்று பாடல்களில் வழுவுவதற்குரிய நான்கு காரணிகளையும், நல்ல குடிப்பிறப்பில் பிறந்தாலும், நன்கு படித்தவன் ஆனாலும் குற்றமற்றவனாக இருக்க வேண்டும் என்றும் எடுத்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, குணம் நாடி, குற்றம் நாடி, அதனின் மிகை நாடி சேர்த்துக் கொள் என்றார்.
சரி, இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் என்று ஒரு கேள்வியைக் கேட்டு பதில் சொல்வது போல் அடுத்தக் குறளை வைக்கிறார் நம் பேராசான்.
“The proof of the pudding is in eating” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். “இது புட்டுதானா என்பது சாப்பிட்டுப் பார்த்தால் தெரியும்” (puddingகை புட்டுன்னு மாற்றிட்டேன்!). அதாவது, செயல் அதுதான் முக்கியம். அவனின் செயல்களை உற்று நோக்கு. உனக்கு எல்லாமே தெரிந்து விடும் என்கிறார்.
“தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.” --- திருமந்திரம், பத்தாம் திருமுறை, எட்டாம் தந்திரம், ஏழு – கேவல சகல சுத்தம், பாடல் – 2.
“எல்லாமே நாம் தான்” என்கிறார் சுருக்கமாக!
திருமூல நாயனாரை அடிச்சுக்க வேறு ஒருவர் கிடையாது. நமக்கு புரிவது போல பாடல்களை வைத்துவிடுவார். நமக்கும் புரியும். மேலும் சிந்தித்தால் உள் பொருளும், மறை பொருளும் விளங்கும்.
வாலியை மறைந்து இருந்து சாய்த்துவிடுகிறார் வில்லில் சிறந்த இராமன். அதைக்கேள்வியுற்ற வாலியின் மனைவி தாரை ஓடி வந்து வாலியின் மார்மேல் விழுந்து புலம்புகிறாள். அப்போது இராமனை நோக்கி ஒரு கேள்வியை எழுப்புகிறாள்.
வில்லில் சிறந்த வில்லியாரே, யார் யாருக்கோ நிகழும் துன்பங்களையெல்லாம் அகற்றுகிறீர், ஆனால், ஒருவரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்துள்ளீர்; அவர், அவர்கள் செய்யும் செயல்கள்தான் அவர்களைக் கணிக்கும் என்பது பொய்யா? என்கிறாள் தாரை.
'அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார்,
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்;
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்,
கருமம் கட்டளை என்றல் கட்டதோ?' கம்பர் பெருமான், கம்பராமாயனம், தாரை புலம்புறு படலம், பாடல் - 16
இந்தக் கம்பராமாயனப் பாடலுக்கு அடிப்படையோ என்று எண்ணும் விதத்தில் அமைந்துள்ளது ஐந்தாவது குறள்.
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.” --- குறள் 505; அதிகாரம் – தெரிந்து தெளிதல்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக் கல் = உயர்ந்தவனா, தாழ்ந்தவனா என்பதற்கு உரைகல்லாவது; தத்தம் கருமமே = அவர்கள் செய்யும் செயல்களே.
‘கருமமே’ என்பது தேற்றேகாரம். அதாவது, அதுதான் தம்பி, வேற ஒன்றைத் தேட வேண்டியதில்லை என்பது பொருள் என்கிறார்.
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ – நமது செயல்களால்தான் நாம் மதிப்பிடப் படுவோம்.
செயல்களைச் செப்பனிடுவோம்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
பி.கு.:
ஏகாரம் – இலக்கணக் குறிப்பு:
ஏகாரம் பல வகையில் பயன்படும். குறிப்பாக பிரிநிலை, தேற்றம் எனும் இருவகை.
‘இவனே வெற்றி பெற்றான்’ என்றால் இந்தக் குழுவில் இவன் மட்டும் வெற்றி பெற்றான் என்பதை பிரித்து எடுத்துச் சொல்லும்.
‘செய்யவே செய்தான்’ என்றால் இவன்தான் செய்தான் என்பதை உறுதி படுத்தும் தேற்றேகாரம். தேற்றம் = உறுதி.
கணிதத்தில் வரும் தேற்றங்களும் உறுதியை நோக்கித்தான்!

Comments