பொருள்தீர்ந்த பொச்சாந்தும் ... குறள் 199
21/11/2021 (271)
யார், யார் பயனிலசொல்ல மாட்டார்கள் என்று எடுத்து கூறுகிறார் நம் பேராசான். முதலில் சான்றோர்கள் என்றார் (197), அடுத்ததாக அரும் பயன் ஆயும் அறிவினார் என்றார் (198), மேலும் தொடர்கிறார்…
எதிலேயும் ஒரு தெளிவுடன் வருவதை உணர்பவர்கள் மறந்தும்கூட பயன் இல்லாத சொற்களைப் பேசமாட்டாங்களாம்.
நமக்கு நன்றாகத் தெரிந்தப் பாடல் “யாதும் ஊரே, யாவரும் கேளிர் …”
அதில் நம் கணியன் பூங்குன்றப் பெருமகனார் இறுதியாக சொல்வது என்னவென்றால்
“…
காட்சியில் தெளிந்தனம் ஆகையில்
மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” --- புறநானுறு 192; கணியன் பூங்குன்றனார்
காட்சியில் தெளிவது ரொம்ப முக்கியம். அவர் எவ்வளவு பெரியவர் தெரியுமா அவரை மாதிரி வரமுடியுமா என்றெல்லாம் வியந்தும் பேசத் தேவை இல்லையாம்; அதே போன்று சின்னவங்களைப் பார்த்து இகழ்வது அதைவிட மோசமாம்! இரண்டுமே பயனில்லாதவைதான் என்கிறார் கனியன் பூங்குன்றப் பெருந்தகை. அப்ப சும்மாவே இருக்கனுமா என்றால் அதுதான் இல்லை. நம்ம வேலையை நாம செய்யனும் எவ்வளவு சிறப்பாக முடியுமோ அவ்வளவு சிறப்பாக. இது நிற்க.
“பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.”--- குறள் 199; அதிகாரம் – பயனில சொல்லாமை
பொச்சாந்தும் = மறந்தும்; மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் = மயக்கமில்லாத தெளிவுடன் வரப்போவதை காண்பவர்கள்; பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் =பொருள் இல்லாத சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
