பெறாஅமை அஞ்சும், வாராக்கால் துஞ்சா ... 1295, 1179
09/03/2022 (376)
இருந்தாலும் மனசு தூங்காது, இல்லை என்றாலும் மனசு தூங்காது. அலை பாயும் மனசு எப்பவுமே நம்மை தூங்க விடுவதில்லை.
‘எது’ இருந்தாலும்? ‘எது’ இல்லை என்றாலும்?
அந்த ‘எது’ எதுவா வேண்டுமானாலும் இருக்கலாம்.
‘எது’ பணமாக இருக்கலாம், நட்பாக இருக்கலாம், நல்ல உடல் நிலையாக இருக்கலாம், உடையாக இருக்கலாம், காதலாக இருக்கலாம்…
மனசோட வேலையே இப்படி அப்படி நம்மை ஊசலாட வைப்பதுதான். நம்மை நிம்மதியாக தூங்கவிடாது. அது புரிந்துவிட்டால் ஒரு நிதானம் வரும், தெளிவு வரும்.
“நெஞ்சொடு புலத்தல்” அதிகாரம்தானே பார்த்துக்கிட்டு இருக்கோம், இப்போ எதற்கு தத்துவம்ன்னு கேட்டால் அதிலே ஒரு குறள். தோழியிடம் ‘அவள்’ சொன்னது:
“பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு.” --- குறள் 1295; அதிகாரம் - நெஞ்சொடுபுலத்தல்
அவர் வராத போது அதற்காக வருந்தியது என் மனது; இதோ இருக்கிறார் என்றாலும் எப்போது பிரிவாரோ என்று என் மனது வருந்துகிறது; வருந்துவதை நிறுத்தா என் மனது சரியான தொல்லைதான்.
பெறாஅமை அஞ்சும் = அவர் வராத போது அதற்காக வருந்தியது என் மனது; பெறின்பிரிவு அஞ்சும் = இதோ இருக்கிறார் என்றாலும் எப்போது பிரிவாரோ என்று என் மனது வருந்துகிறது; அறாஅ = வருந்துவதை நிறுத்தா; என் நெஞ்சு = என் மனது; இடும்பைத்து = சரியான தொல்லைதான்.
இதே போல இன்னுமொரு குறள், கண்விதுப்பு அழிதல் என்ற அதிகாரத்தில் இருக்கு:
“வாராக்கால் துஞ்சா வரிந்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.” --- குறள் 1179; அதிகாரம் - கண்விதுப்பு அழிதல்
அவர் வரவில்லை என்றாலும் தூங்காது; அவர் வந்துவிட்டாலும் எப்போது போய் விடுவாரோ என்று தூங்காது; அந்த இரண்டு வழியும் பெரிய துயரம் உறுகிறது என் கண்.
வாராக்கால் துஞ்சா = அவர் வரவில்லை என்றாலும் தூங்காது; வரிந்துஞ்சா = அவர் வந்துவிட்டாலும் தூங்காது; ஆயிடை = அந்த இரண்டு வழியும்; ஆர் =அரிய, பெரிய; அஞர் = துயர், துயரம்; உற்றன கண் = உறுகிறது என் கண்.
இந்த ‘அவர்’ என்ற சொல்லை எடுத்துவிட்டு நாம எந்த சொல்லை வேண்டுமானாலும் போட்டுக்கலாம். நிம்மதியிருக்க மாட்டோம் என்று நாம ஒரு முடிவாக இருக்கோம். அவ்வளவுதான். அதற்கு விடிவு தெளிவு.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
