08/10/2022 (586)
ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். அவையாவன: காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை.
யாமம் – என்பது நடுஇரவுப் பொழுது.
நடு இரவாகிவிட்டது. அவனுக்குத் தூக்கம் வரவில்லை. மடலேறுதல்தான் ஒரே வழி என்பது உறுதியாகிக் கொண்டே இருக்கிறது.
‘படல்’ என்றால் தடுப்பு. குடிசைகளைச் சுற்றி மூங்கில் தப்பைகளை நட்டு அதனை இணைத்து வேலி போன்று அமைக்கிறார்களே அதனை படல் அமைப்பு என்கிறார்கள். தட்டி, தடுக்கு என்றெல்லாம் அழைக்கப்படுவதும் அதுதான்.
‘படல்’ என்றால் உறக்கம் என்ற பொருளும் இருக்காம். இது ஆகு பெயராக இருக்கலாம்.
‘ஒல்லும்’ என்றால் ‘இயலும்’, ‘முடியும்’ என்று பொருள். நாம் ஏற்கனவே பல குறள்களில் பார்த்துள்ளோம். காண்க: 19/02/2021 (33)
“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்.” --- குறள் 33; அதிகாரம் – அறன் வலியுறுத்தல்
(ஒல்லும் = இயலும்; வகையான் =வழிகளிலெல்லாம்; ஓவாதே =ஒழியாமல், தவறாமல்; செல்லும்வாய் எல்லாம் =செயத்தகும் இடங்களிலெல்லாம்; செயல் = செய்க)
‘மன்றம்’ என்ற சொல் அமைப்பு, குழு, அரங்கம், ஊர் என்றெல்லாம் பொருள்பட பயன்படுத்தப்படுகிறது.
பேதை என்றால் அறிவு கொஞ்சம் குறைவு என்று பொருள். அதாவது மடமை.
சரி இந்த சொல் ஆராய்ச்சி போதும். நாம் இப்போ குறளுக்குள்ளே போவோம்.
“மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல் ஒல்லா பேதைக்குஎன் கண்.” --- குறள் 1136; அதிகாரம் – நாணுத் துறவு உரைத்தல்
என் கண்கள் உறக்கம் இல்லாது தவிக்கும் மடமைக்கு ஊரின் நடுவில் மடல் ஏறுதல் எப்படி என்று திட்டமிடுவதுதான் சரி.
என் கண் படல் ஒல்லா பேதைக்கு = என் கண்கள் உறக்கம் வராது தவிக்கும் இந்த மடமைக்கு;
மன்ற மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் = ஊரின் நடுவில் மடல் ஏறுதல் எப்படி என்று திட்டமிடுவதுதான் சரி.
கடைசியில் மடல் ஏறினானா? இன்னும் தெரியவில்லை!
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
コメント