மடிமை குடிமைக்கண் ... 608
03/03/2023 (729)
சோம்பிக் கிடப்பவர் “இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர்...” என்றார் குறள் 607ல்.
குறள் 604ல் சோம்பல் ஒருத்தனிடம் இருந்தாலே குடிமடிந்து குற்றம் பெருகும் என்று சொன்னார் நம் பேராசான்.
ஒரு குடும்பமோ, கூட்டமோ, குழுவோ, இனமோ சோம்பியிருந்தால் என்ன ஆகும்?
அது அவர்களை, நிச்சயமாக, வறியவர்கள் ஆக்கும்! இதுகூட பரவாயில்லை.
சோம்பலானது அவர்களை பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடுமாம்.
மனித இனம் என்பது படைப்பின் உச்சம் (Crown of creation). எது இல்லையென்றாலும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பது என்பது உயிரினும் மேலானது. ஆனால், மடிமை இருக்கிறதே, அதாங்க சோம்பல், நம்ம சுதந்திரத்தைப் பறித்து எதிரிக்கு அடிமை ஆக்கிவிடுமாம். நம்ம பேராசான் சொல்கிறார்.
“மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.” --- குறள் 608; அதிகாரம் – மடி இன்மை
ஒன்னார் = பகைவர்;
மடிமை குடிமைக்கண் தங்கின் = சோம்பலானது குடிப்பிறந்தாரிடம் தங்கிவிடின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும் = (அது) தன் குடியின் பகைவர்களுக்கு அடிமையாகச் செய்துவிடும்.
சோம்பலானது குடிப்பிறந்தாரிடம் தங்கிவிடின், அது, தன் குடியின் பகைவர்களுக்கு அடிமையாகச் செய்துவிடும்.
பல அறிஞர் பெருமக்கள், ‘குடிமைக்கண்’ என்பதற்கு ‘அரசனிடம்’ என்று பொருள் கண்டிருக்கிறார்கள். குடிமை என்பது குடி செய்தல் தன்மை. அதை மேற்கொள்பவன் அரசன். எனவே, குடிமை அரசனுக்கு ஆகி வருகிறது.
அதாவது, அரசன் சோம்பியிருந்தால் பகைவனுக்கு அடிமையாக வேண்டியதுதான் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
கும்பலாக சோம்பியிருந்தாலும், தனியாக சோம்பியிருந்தாலும் நிலைமை மோசம்தான்!
ஔவை பெருந்தகை, ஆத்திச்சூடியில் “சோம்பித் திரியேல்” என்கிறார். கொன்றைவேந்தனிலோ “ சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்” என்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
