22/11/2022 (628)
பகையைத் தாக்க, தக்க தருணத்தைப் பார்த்திருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியோடு நிறுத்தியிருந்தார்.
அதுவரை அல்ல எப்போதுமே, நமது இடத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
‘அரண்’ (75 ஆவது) என்று ஒரு அதிகாரத்தையே நம் பேராசான் தனியாக அமைத்துள்ளார். பிறகு பார்க்கலாம்.
நமது பார்வை மேல் நோக்கியே இருந்தாலும், நமது பாதம் நிலத்தில் நிலையாக இருக்க வேண்டும்!
“Being grounded” முக்கியம் என்கிறார்கள். வாழ்க்கையின் கனிகளைப் பறிக்க வேண்டுமானால், நமது வேர்கள் நன்றாக, ஆழமாக நிலத்தில் நிலை பெற்று, பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாம் வெற்றி பெறுவதற்கு அதுதான் மந்திரச் சாவி.
அதைத்தான் நம்மவர்கள் “சும்மா, பறந்திட்டு இருக்காதே” என்றும் “இருப்பதை விட்டு விட்டு பறப்பதைப் பிடிக்காதே” என்றும் சொல்கிறார்கள். இது நிற்க.
கீழே காணப் போகும் குறளுக்கு அறிஞர் பெருமக்களின் விளக்கத்தை முதலில் பார்த்துவிடலாம்.
மூதறிஞர் மு.வ.: மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப் பயன்களையும் கொடுக்கும்.
புலவர் புலியூர் கேசிகன்: மாறுகொள்ள வல்லவரான வலிமையாளருக்கும், அரணைச் சேர்ந்திருத்தலினால் உண்டாகும் வெற்றியானது பலவகைப் பயன்களையும் தரும்.
மணக்குடவப் பெருமான்: பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும். இது பகைவரிடம் அறிதலேயன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது.
பரிமேலழகப் பெருமான்: உலகம் என்பது அனைவருக்கும் சொந்தம் என்ற கொள்கையில்லா வலிமை நிறைந்த அரசர்களுக்கும் அரண் பலமாகும் என்பது பொருள் என்கிறார். உம்மை சிறப்பு உம்மை. அவர் உரை அப்படியே:
“முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும்.
(மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும்,இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின்,ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.)”
மேற்கண்ட விளக்கங்களிலில் இருந்து, சுருக்கமாக, எனக்கு என்ன புரிந்து கொள்ள முடிகிறது என்றால், “போர் செய்யும் வலிமை இருந்தாலும் நல்ல அரணும் சேர்ந்தால் நன்மை பயக்கும்” என்பதாகும்.
குறளைப் பார்ப்போம்:
“முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவும் தரும்.” --- குறள் 492; அதிகாரம் – இடனறிதல்
அறிஞர் பெருமக்களிடம் பெரு மதிப்பும், மரியாதையோடும் எனக்குத் தோன்றும் கருத்தினை எடுத்து வைக்கிறேன்:
தற்காலத்தில், நாம் “differently abled”, அதாவது “மாற்றுத்திறனாளிகள்” என்று சொல்கிறோமே, அதைத்தான் நம் பேராசான் “முரண் சேர்ந்த மொய்ம்பினவர்” என்று சொல்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது.
முரண் சேர்ந்த மொய்ம்பினவர் = differently abled
அதாவது, “நமக்கு போர் திறன் சற்று வேறு மாதிரியாக அமைந்து இருந்தாலும், நல்ல அரணை, இடத்தை அமைத்துக் கொண்டால், அதுவே, வெல்வதற்கான வாசலைத் திறக்கும்.” என்பது போலத் தோன்றுகிறது.
‘உம்மை’ முற்று உம்மையாகத் தோன்றுகிறது. அதாவது, முடியாதவர்களும் வென்று விடலாம்.
இது நிற்க.
'முப்பது கோடி முகமுடையாள் –
உயிர் மொய்ம்புறமொன்றுடையாள் –
இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் –
எனிற் சிந்தனை ஒன்றுடையாள்” --- மகாகவி பாரதி
“மொய்ம்பு” என்ற சொல்லை நம் மகாகவி பயன்படுத்தி உள்ளார். நாம் பல கோடி பேர்கள் ஆனாலும் நமது உயிர்களின் வலிமை ஒன்றாகவே இருக்கும் என்கிறார்.
முதலில் நமது அரண்களைச் சரி செய்வோம்.
பி.கு: இந்தக் குறள் குறித்தான உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள ஆவல்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments