top of page
Search

விருப்புஅறா உள்ளக் களித்தலும் ... 522, 1281

25/02/2022 (364)

‘விருப்பு’ என்றால் ஆசைன்னு நமக்குத் தெரியும். ‘விரும்பு’ என்றால் ஆசைப்படு. ‘விரும்புதல்’ என்றால் ஆசைப்படுதல்.


நம் பேராசான், விரும்பு என்ற சொல்லையும், விரும்புதல் என்ற சொல்லையும் பயன்படுத்தவில்லை. அவர் பயன்படுத்தும் சொற்கள் ‘விருப்பு’ மற்றம் ‘விதும்பல்’.


விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்பறா

ஆக்கம் பலவும் தரும்.” --- குறள் 522; அதிகாரம் – சுற்றந்தழால்


விருப்புஅறாச் சுற்றம் இயையின் = தொய்வில்லா அன்பு கொண்டச் சுற்றம் ஒருவனுக்கு அமைந்துவிட்டால்; அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் = தடையில்லா வளர்ச்சி பலவும் தரும்.


விதும்பல் என்றால் விரும்புதல். இந்த விதும்பல் இருக்கே இது உடலில் ஒரு நடுக்கத்தைக் கொடுக்கும். இது சாதாரண விரும்புதல் இல்லை. இது விருப்பின் உச்சம்.


இந்தச் சொல்லை இரு இடங்களில் பயன்படுத்தியுள்ளார். அதுவும், அதிகாரத்திற்கு தலைப்பிடும்போது. 1. அவர்வயின் விதும்பல், 2. புணர்ச்சி விதும்பல்


குறிப்பு அறிவுறுத்தல் (128 ஆவது) அதிகாரத்தைத் தொடர்ந்து புணர்ச்சி விதும்பல் (129 ஆவது) அதிகாரத்தை அமைத்துள்ளார்.


‘அவன்’ தோழி சொன்னக் குறிப்புகளில் இருந்தும் தானே உணர்ந்த குறிப்புகளில் இருந்தும் அவளின் மனநிலையை உணர்ந்த அவன் விரைகிறான். என்ன ஆச்சர்யம் அவளும் இவனை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறாள்.


அப்போது, அந்தத் தோழி கேலி பேசுகிறாள். இதுவரைக்கும் புலம்பிக் கொண்டிருந்த நீ, ஏன் இப்போது ஓடுகிறாய்? என்று கேட்கிறாள்.


அதற்கு பதிலாக, அடி போடி, உனக்கு ஒன்றும் தெரியாது. உனக்கு கள்ளுன்னு ஒன்று இருக்கே அதைப் பற்றித் தெரியுமா?


ஏன்? தெரியுமே. அந்த குடிபோதையால்தானே என் தந்தை இறந்தார்.

சரியாகச் சொன்னாய். அது குடித்தால் மட்டும்தான் போதை. வேறு ஒன்று இருக்கு. இந்தக் குறளைப் படி.


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு.” --- குறள் 1281; அதிகாரம் – புணர்ச்சி விதும்பல்


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் = (அவரை/அவளை) நினைத்தாலே இனிக்கும், பார்த்தாலே போதைதான்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு = (அது) கள்ளுக்கு இல்லை, அன்பிற்கு உண்டு.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




16 views2 comments
Post: Blog2_Post
bottom of page