09/05/2022 (437)
“தொழுத கையுள்ளும் பகை ஒடுங்கும் …” என்ற குறளை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 26/09/2021 (215). தேடிப் படிக்கவும்.
மீள்பார்வைக்காக:
“தொழுதகையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து.” --- குறள் 828; அதிகாரம் – கூடா நட்பு
பகைவரின் தொழுத கையுள்ளும் தாக்கும் படைக்கருவி மறைந்திருக்கலாம்; அழுத கண்ணீரும், அதே போலத்தான், நெஞ்சத்தில் வஞ்சத்தை மறைத்திருக்கும்.
1977 ல் காயத்ரி எனும் திரைப்படம் வந்தது. எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதையைத் தழுவி பஞ்சு அருணாசலம் அவர்கள் திரைக் கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என்று எல்லாவற்றையும் ஆண்டிருப்பார். இசைஞானி இளையராஜாதான் அதற்கு இசை. BS சசிரேகா என்பவர் பாடிய பாடல்
“வாழ்வே மாயமா, வெறும் கதையா
கடும் புயலா, வெறும் கனவா, நிஜமா …
சிரிப்பது போலே முகம் இருக்கும்
சிரிப்புக்குப் பின்னால் நெருப்பிருக்கும்
அணைப்பது போலே கரம் இருக்கும்
அங்கே கொடுவாள் மறைந்திருக்கும் …” பஞ்சு அருணாசலம்; திரைப்படம் – காயத்ரி (1977)
இது நிற்க.
வெளிப்பட்டு நிற்கும் பகைக்காக அஞ்சத் தேவையில்லை. எதற்கு அஞ்சவேண்டும் தெரியுங்களா? நம் சுற்றம் போலவே நம்மைச் சூழ்ந்திருப்பார்கள்; உள்ளே பொறாமை என்ற நெருப்பு கனன்று கொண்டிருக்கும்; அதற்குத் தாய் இயலாமை.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்படி காலை வாருவது, எப்படி சாய்ப்பது, இழிவு படுத்துவது என்று செயல் பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் செய்யும் குழிபறிக்கும் காரியங்களை நம்மிடமே நல்லவர்கள் போல மறைவாக குறிப்பிட்டுப் பேசி மகிழ்ச்சி கொள்வார்கள். குறிப்பறிதல் எனும் கலை ரொம்ப அவசியம் அவர்களை இனம் காண!
என்ன பண்ணனும்? கடந்து போகனும் அவ்வளவுதான். சரி, நாம் குறளுக்கு வருவோம்.
“வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.” --- குறள் 882; அதிகாரம் – உட்பகை
கேள் = கேளிர் = சுற்றம்; வாள்போல் பகைவரை அஞ்சற்க = தாக்கப் போவது வாள் என்பது போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை; கேள்போல் பகைவர் தொடர்பு அஞ்சுக = நமது சுற்றம் போலவே வேடமிடும் உட்பகைகளைக்குத்தான் நாம் அஞ்சவேண்டும்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments