top of page
Beautiful Nature

அணங்குகொல் ... 1081

25/08/2022 (544)

மீள்பார்வை:

அறத்துப் பாலில் மொத்தம் நான்கு இயல்கள்: பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்.


பொருட்பாலில் மூன்று இயல்கள்: அரசியல், அங்கவியல், ஒழிபியல்.


இன்பத்துப் பாலில் இரண்டு இயல்கள்: களவியல், கற்பியல்.


பண்டை தமிழ் இலக்கியங்கள் “களவின் வழியது கற்பு” என்றே வலியுறுத்துகின்றன. அஃதாவது, காதலித்து திருமணம் புரிவது!


களவியலில், முதல் அதிகாரம் ‘தகை அணங்கு உறுத்தல்’. அணங்குன்னா தேவதை; தகை என்றால் சிறப்பு அல்லது அழகு என்று பொருள். உறுத்தல் என்றால் வருத்தத்தைக் கொடுப்பது.


கன்னியரின் கட்டழகு கண்ணை உறுத்துவதுதான் தகை அணங்கு உறுத்தல்.


தகை அணங்கு உறுத்தல் அதிகாரத்தின் முதல் குறள், நாம் ஏற்கனவே பார்த்ததுதான்.


அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.” --- குறள் 1081; அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் அணங்குகொல் = இவள் தேவதையோ?; ஆய்மயில் = மயில்களிலே ஆகச்சிறந்த மயிலா?; கனங்குழை மாதர் கொல் = பருத்த குந்தலை உடைய மானுடப் பெண்ணோ? மாலும்என் நெஞ்சு = (என்னன்னு தெரியலையே) என் நெஞ்சு கிடந்து அடிச்சுக்குதே. நகீ மாலும்!


“ஆரம்பமே இனிக்கும்” என்பது போல நம் வள்ளுவப் பெருமான் இவ்வாறு ஆரம்பித்திருக்கிறார்.


“எல்லோரும் வாழ வேண்டும்” என்ற ஒரு திரைப்படம் 1962ல் வெளிவந்தது. அதில் தமிழ் இசை சித்தர் என்று அழைக்கப்பெற்ற C.S. ஜெயராமன் அவர்களின் வெங்கலக் குரலில் வில்லிபுத்தன் எனும் கவிஞரின் வரிகளில் ஒரு பாடல்:


“ஆரம்பமே இனிக்கும்.. மனதில் அடிக்கடி துயர் கொடுக்கும் – காதல் ஆரம்பமே இனிக்கும்.. மனதில் அடிக்கடி துயர் கொடுக்கும்....


சீறும் சிறப்பும் இருக்கும் - மீதி சிரிப்பும் அழுகையும் கலந்திருக்கும் காதல்.. ஆரம்பமே..


காதலென்றாலே நிலவு.. தேன் நிலவு.. குணம் வாய்ந்தது காதல் கலைதானது நம் கருத்தைக் கவரும் பொதுப்பாதை காதலானது ஆரம்பமே.. ” --- கவிஞர் வில்லிபுத்தன், திரைப்படம் – எல்லோரும் வாழ வேண்டும்


(எவ்வளவு நாளைக்குத்தான் பெருமையே பேசிட்டு இருப்பது. அருமையையும், இல்லற இன்ப அருமையையும் கொஞ்சம் பேசுவோம் இனி)


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்



ree

 
 
 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page