top of page
Search

அன்பிலன் ஆன்ற துணையிலன் ... 862, 12

21/08/2023 (899)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

“எந்த வேலைக்கும் இவன் துப்புக் கெட்டவன்” என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம்.

துப்புக் கெட்டவன் என்றால் யார்? அவனின் இயல்புகள் அல்லது பண்புகள் என்ன?

இது என்ன துப்புக் கெட்ட ஆராய்ச்சி என்கிறீர்களா? பொறுமை. இது என் ஆராய்ச்சி அல்ல நம் பேராசானின் ஆராய்ச்சி!


நம் பேராசான் துப்பு என்ற சொல்லை மூன்று குறளிகளில் பயன்படுத்தியுள்ளார். ஒரே குறளில் மூன்று முறையும் கையாண்டுள்ளார்.

மூன்று முறை பயன்படுத்திய குறள் நமக்கு நன்கு தெரிந்ததே. காண்க 23/07/2021 (150).


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.” – குறள் 12; அதிகாரம் – வான் சிறப்பு


துப்பார்க்கு = துய்ப்பவர்க்கு, உண்பவர்க்கு; துப்பு ஆய = வலிமையை உருவாக்கும்; துப்பு ஆக்கி = உணவை உருவாக்கி; துப்பார்க்கு = தாகத்தில் உள்ளோர்க்கு; துப்பு ஆய = அதுவே உணவு ஆகவும்; தூவும் = பெய்யும், நிற்கும்; மழை = மழை நீர்.


துப்பு என்றால் வலிமை, உணவு, சக்தி என்றெல்லாம் பொருள்படுகிறது.


சரி துப்புக் கெட்டவன் என்று பயன்படுத்தியிருக்கிறா? “ஏதிலான் துப்பு” என்று கூறுகிறார். அஃதாவது, துப்பு ஏதும் இல்லாதவன் என்று நம் பேராசான் சொல்வதாகவே எனக்குப்படுகிறது.


சரி யார் அவன்? அவனுக்கு மூன்று பண்புகளைச் சொல்கிறார். முதலில் அவனிடம் அன்பு இருக்காதாம்; இரண்டாவதாக அவனுக்குத் துணையாக யாரும் இருக்க மாட்டார்களாம். சரி தானே! அன்பில்லாதவனிடம் யார்தான் இருப்பார்கள். மூன்றாவதாகச் சொல்வதுதான் மிக முக்கியம். அவனுக்குத் தன்னளவிலே எந்தத் திறமையும் இருக்காதாம். இந்த மாதிரியுள்ள ஓர் ஆள் எப்படிப் பகையை அழிக்க முடியும் என்று கேட்கிறார்.


அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு.” --- குறள் 862; அதிகாரம் – பகை மாட்சி.


அன்பிலன் = தன் சுற்றத்தின் மேல் அன்பு இல்லாதவன்; ஆன்ற துணையிலன் = நாளும் கை கொடுக்கும் நல்ல துணைகளும் இல்லாதவன்; தான் துவ்வான் = தானும் வலிமையில்லாதவன்; துப்பு ஏதிலான் = துப்பு ஏதும் இல்லாதவன்;

என் பரியும் = எங்கனம் களைவான் பகையை!


தன் சுற்றத்தின் மேல் அன்பு இல்லாதவன்; நாளும் கை கொடுக்கும் நல்ல துணைகளும் இல்லாதவன்; தானும் வலிமையில்லாதவன்; துப்பு ஏதும் இல்லாதவன்; எங்கனம் களைவான் பகையை!


மேலே கண்ட உரை எனது உரை. அந்த உரைக்கு யாரும் பொறுப்பு அல்லர்.


ஏன் சொல்கிறேன் என்றால் இந்தக் குறளுக்கு உரை எழுதிய அனைத்துப் பெருமக்களும் ஏதிலான் என்பதற்குப் பகைவன் என்றே பொருள் கண்டிருக்கிறார்கள்.


அஃதாவது, தன் சுற்றத்தின் மேல் அன்பு இல்லாதவன்; நாளும் கை கொடுக்கும் நல்ல துணைகளும் இல்லாதவன்; தானும் வலிமையில்லாதவன்; எங்கனம் பகையைக் களைவான்! என்கிறார்கள்.


எடுத்துக் காட்டாக மூதறிஞர் மு. வரதராசனார் உரை: ஒருவன் அன்புஇல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதவனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்?


அஃதாவது, ஏதிலான் = பகைவன். ஏன் ஏதிலான் என்றால் நம் மேல் பற்று ஏதும் இல்லாதவன் என்ற பொருளில்! எனவே, அவன் பகைவனாகிறான் என்று எடுத்துச் சொல்கிறார்கள்.


பகையைக் களையாதவன் துப்புக் கெட்டவன்தானே என்கிறீர்களா? அதுவும் சரிதான்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page