top of page
Search

அறிவிலான் அறிவிலார் ... 842, 843

13/08/2023 (891)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

புல்லறிவாண்மை அதிகாரத்தின் இரண்டாவது குறளில் அறிவில்லாதவர்களின் ஒரு முக்கியமானப் பண்பைச் சொல்கிறார்.

“எச்சில் கையால் காக்கையை ஓட்ட மாட்டான்” என்று ஒரு சொலவடை உண்டல்லவா அதற்கு உதாரணமாக இருப்பவர் திரு. புல்லறிவாளர்.


ஆமாம், அப்படித்தான் நம்ம பேராசான் சொல்கிறார். திரு. புல்லறிவாளர் காக்கையை ஓட்டும்போது தப்பித் தவறி ஒன்றிரண்டு சோற்றுப் பருக்கைகள் விழுந்துவிட்டால், அது அந்தக் காக்கை செய்த நல்ல பயனால்தானாம்!


அறிவிலான் நெஞ்சு உவந்து ஒருவனுக்குக் கொடுப்பதில்லை. அப்படி ஏதாகிலும் அவன் கொடுப்பானாயின் அதனை வாங்கிக் கொள்பவன் முன்பு ஏதோ கொடுத்து வைத்தவன் என்று பொருள். அது வாங்கியவரின் நற்பேறு (luck) என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிறார்.


அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்

இல்லை பெறுவான் தவம்.” --- குறள் 842; அதிகாரம் – புல்லறிவாண்மை


அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் = புல்லறிவாளன் தன் மனம் உவந்து ஒருவனுக்கு கொடுப்பானாயின்; பெறுவான் தவம் = அஃது, பெறுபவனின் நற்பேறு; பிறிது யாதும் இல்லை = அதுவன்றி வேறு ஏதுவும் கிடையாது.

புல்லறிவாளன் தன் மனம் உவந்து ஒருவனுக்கு கொடுப்பானாயின், அஃது, பெறுபவனின் நற்பேறு. அதுவன்றி வேறு ஏதுவும் கிடையாது.


நல்லன செய்தல் நலமென்று அறியாதவர்தாம் திரு. புல்லறிவாளர்.

மேலும் தொடர்கிறார். அஃதாவது, ஒருவரை அழிக்க செறுவார்கள் படாதபாடு படுவாங்களாம். அதாங்க, செறுவார்கள் என்றால் மாற்றார்கள், பகைவர்கள், நமக்கு ஆகாதவர்கள். அவர்கள் தமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போகணும்ன்னு கடினமான முயற்சிகளைச் செய்வாங்களாம். ஆனால், இந்த முயற்சியெல்லாம் நம்ம கணம் புல்லறிவாளர் கிட்ட பலிக்காதாம்! ஏன்னு சொல்லுங்க பார்க்கலாம்!


சரியாச் சொன்னீங்க. கணம் புல்லறிவாளர் தம் செறுவார்க்கு அந்தச் சிரமம் எல்லாம் கொடுக்காமல் அவரே சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வாராம். என்ன ஒரு கிண்டல் பாருங்க நம் பேராசானுக்கு.


அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது.” --- குறள் 843; அதிகாரம் – புல்லறிவாண்மை


பீழை = துன்பம்; அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை = புல்லறிவாளர் தங்களுக்குத் தாமே வருத்தும் வகையில் செய்து கொள்ளும் துன்பம்; செறுவார்க்கும் செய்தல் அரிது = மாற்றார்களால்கூடச் செய்தல் கடினம்.


புல்லறிவாளர் தங்களுக்குத் தாமே வருத்தும் வகையில் செய்து கொள்ளும் துன்பம் மாற்றார்களால்கூடச் செய்தல் கடினம்.


பகைவர்கள் எதிராளிகளுக்குக் காலம் பார்த்துதான் செய்வாங்க. ஆனால், கணம் புல்லறிவாளர் எப்போதும் தனக்குத் தானே குழி பறித்துக் கொண்டிருப்பார்.


ஒருவனை வறுமையிலோ, பழி பாவம் தரும் செயல்களிலோ தள்ளிவிட எதிராளி கடுமையாக முயலவேண்டும். ஆனால், திரு. புல்லறிவாளர், அவரின் அறிவின் திறம் கொண்டு அவரே போய்த் தலையைக் கொடுப்பார் என்கிறார்.


அவரிடமிருந்து கவனமாகத் தள்ளி நிக்கோணும். புரிஞ்சுதுங்களா?


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page