top of page
Search

அறனாக்கம் ... 163

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

பொறாமை இல்லாத மனமே பெரும் பேறு என்றார். வெற்றி என்பது மகிழ்ச்சி தருவது; நம்பிக்கையைத் தருவது; நம்மை முன்னேறச் செய்வது.


நாம் பெறும் வெற்றியாயின் நாம் மகிழ்வோம் என்பது உண்மைதான்.


மற்றவர்கள் பெறும் வெற்றியும் நமக்கு மகிழ்ச்சியைத் தரும், நம்பிக்கையையும் தரும், நமக்குப் பாதையையும் காட்டும். எப்போது என்றால் நமது மனத்தில் பொறாமை என்னும் வித்து விழாமல் இருந்தால்!


ஆகையினால், நம் பேராசான் என்ன சொல்கின்றார் என்றால் நீங்கள் செய்யும் நல்ல செயல்கள் அனைத்தும் கைகூடி வரவேண்டுமா மற்றவர்களின் வெற்றியைப் பாராட்டுங்கள். அதனைக் கூர்ந்து கவனியுங்கள் என்கிறார்.


உங்களுக்கு வளர்ச்சித் தேவையில்லையென்று நினைத்தால் வெற்றியாளர்கள் மீது பொறாமை கொள்ளுங்கள்! அவ்வளவே.


அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணா தழுக்கறுப் பான்.” --- குறள் 163; அதிகாரம் – அழுக்காறாமை


அறனாக்கம் வேண்டாதான் என்பான் = தாம் நன்மையை நாடி செய்யும் நல்ல செயல்கள் அனைத்தும் பயனளிக்க வேண்டாம் என்று நினைப்பவன்; பிறனாக்கம் பேணாது அழுக்கறுப்பான் = பிறருடைய உண்மையான உழைப்பால் பெறும் நல்ல பல வெற்றிகளைப் பாராட்டாமல் அவற்றை உள்வாங்காமல் பொறாமையில் ஆழ்வான்.


தாம் நன்மையை நாடி செய்யும் நல்ல செயல்கள் அனைத்தும் பயனளிக்க வேண்டாம் என்று நினைப்பவன் யார் எனில் பிறருடைய உண்மையான உழைப்பால் அவர்கள் பெறும் நல்ல பல வெற்றிகளைப் பாராட்டாமல் அவற்றை உள்வாங்காமல் பொறாமையில் ஆழ்வான்.


அழுக்கறுப்பான் = பொறாமையினால் உந்துதலால் தன் எண்ணங்களைச் செயல்களைச் செய்பவன். அவன், மற்றவர்களையும் அறுப்பான்; தன்னைத் தானேயும் அறுத்துக் கொள்வான்.


ஈசோப் என்பார் கிரேக்க நாட்டு கதை சொல்லி. அவரின் கதைகள், ஈசோப்பின் கட்டுக்கதைகள் (Esop’s fables) என்று வழங்கப்படுகின்றன.


ஒரு சிறிய குளம். அதில் ஒரு தவளை குடும்பமாக வாழ்ந்து வருகின்றது. அந்தத் தவளைகளுக்கு வெளி உலகத் தொடர்பு அதுவரை இல்லை. அந்தத் தவளைக் குடும்பத்திலேயே ஒரு பெரிய அண்ணன் தவளை பெரும் உடல்கட்டோடு இருந்தது. இருக்கக்கூடாதா என்ன? அதற்குத் தன்னைவிடப் பெரியவன் இந்த உலகத்தில் இல்லை என்ற நினைப்பு! மற்றத் தவளைகளும் அவ்வாறே நினைத்தன.


ஒரு நாள் அந்தக் குளத்தில் நீர் அருந்த ஒரு சிறிய கன்றுக் குட்டி வந்தது. இது என்ன? மிகப் பெரிய உருவம் என்று அதனைக் கண்டச் சிறு தவளைகள் பயந்துவிட்டன. நாம் நமது அண்ணன்தான் இந்த உலகில் மிகப் பெரியவன் என்று இருந்தோம். அப்படியில்லையா என்று நினைத்து மிகுந்த பயத்துடன் உடனே ஓடிச்சென்று அவர்களின் அண்ணனிடம் சென்று தாங்கள் கண்டதைக் கூறின. சரி வாங்க பார்க்கலாம் என்று பெரிய தவளையாரும் தாவித் தாவி வருவதற்குள் அந்தக் கன்றுக்குட்டி அங்கே இருந்து சென்றுவிட்டிருந்தது.


நீங்கள் சொல்வது உண்மையாக இருக்க முடியாது. என்னைவிடப் பெரியவன் இல்லவே இல்லை என்றது. அந்தச் சிறியத் தவளைகளோ, அண்ணா, நாங்கள் எங்கள் கண்களால் பார்த்தோம். கொஞ்சம் நம்பு என்றன.


அதற்கு, அந்தப் பெரும் தவளையார் நன்றாக மூச்சை உள்ளே இழுத்து தன் உடலைப் பெரிதாக்கிக் காண்பித்தது. இந்த அளவு இருக்குமா என்றது?


ம்ம்.. இல்லை இதைவிட மிகப் பெரியது அது என்றன மற்றத் தவளைகள்.


மீண்டும் மிக் நன்றாக மூச்சை இழுத்து தன் உடலை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கிக் காண்பித்தது. இப்போது?


இல்லை அண்ணா, இல்லை. அது மிக மிகப் பெரியது என்றன அந்தக் குட்டித் தவளைகள்.


நம் பெரியண்ணனுக்கோ பொறுக்கவில்லை. இன்னும் கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடிக்க முயன்றது. முடியாமல் வெடித்துச் சிதறியது!


மற்றவர்களின் வெற்றிகளை, தனித் தன்மைகளைக் கண்டு நாம் பொறாமை கொள்வதால் நாம் சிறிதளவும் வளரமுடியாது. ஆனால், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள உயர்த்திக் கொள்ள வழி பிறக்கும். அதற்குப் பொறாமை என்னும் கண்ணாடியை நாம் கழற்றி வைத்துவிட வேண்டும்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page