top of page
Search

அருளொடும் அன்பொடும் ... 755

07/07/2023 (855)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

பொருளின் பெருமதிகள்: 1. பொருள் ஒருவரைப் பொருளாகச் செய்யும். அதாவது மரியாதையைப் பெற்றுத்தரும்; 2. செல்வர்களை எல்லாரும் சிறப்பு செய்வார்கள்; 3. பொருள் என்பது ஒரு பொய்யா விளக்கு. நினைத்த இடத்திற்குச் சென்று நமது வேலைகளை முடிக்கும் திறன் வாய்ந்தது.


மேற்கண்ட மூன்று பெருமதிகளையும் முறையே முதல் மூன்று குறள்களின் (751, 752, 753) மூலம் சொன்னார்.


சரி, அதற்காக பொருளை எப்படி வேண்டுமானாலும் ஈட்டலாமா என்றால் அது எப்படி? கண்டபடியெல்லாம் பொருளை ஈட்டுவதை நம் பேராசன் அனுமதிப்பதில்லை. பொருள் ஈட்டும் நெறியை அடுத்து வரும் மூன்று குறள்களில் சொல்கிறார்.


பொருள் அறம் செய்யவும் இன்பத்தை நுகரவும் பயன்பட வேண்டும். சரி, எப்படி பொருள் ஈட்ட வேண்டும் என்றால் அதுவேதான் வழி.


அது என்ன அதுவேதான்? பொருள் அற வழியில் வர வேண்டும். தீய செயல்களால் பொருள் வரவேக்கூடாது. அது மட்டுமல்ல மற்றவரை வருத்தியும் நாம் பொருள் சேர்க்கக் கூடாது.


பொருள் அளிப்பவருக்கு மதிப்பு கூட்டுதலை அவர் செலவிடும் பொருள் அளித்து, மகிழ்சியையும் தர வேண்டும். அதன் மூலம் நாம் பொருள் ஈட்ட வேண்டும்.

ஈட்டிக் காரன் போல பொருள் ஈட்டல் கூடாது!

கீழ் காணும் குறளை நாம் முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 11/01/2023 (678). மீள்பார்வைக்காக:


அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.” --- குறள் 754; அதிகாரம் – பொருள் செயல்வகை


திறன் அறிந்து தீதின்றி வந்த பொருள் = அற வழியில் பொருள் செய்யும் திறன் அறிந்து, மக்களை உருட்டி மிரட்டி பொருளைப் பிடுங்காமல் வந்த பொருள்;

அறன் ஈனும் இன்பமும் ஈனும் = அறத்தையும் வளர்க்கும், இன்பத்தையும் கொடுக்கும்.


அற வழியில் பொருள் செய்யும் திறன் அறிந்து, மக்களை உருட்டி மிரட்டி பொருளைப் பிடுங்காமல் வந்த பொருள்அறத்தையும் வளர்க்கும், இன்பத்தையும் கொடுக்கும்.


அற வழியாக இருந்தாலுமேகூட அதிலும் கடுமை இருக்கக் கூடாது இதுதான் முக்கியம்.


ஒரு பொருளை செலவு செய்யும்போது அதில் அன்பும் இருக்கணும்; அருளும் இருக்கணும். அன்பு என்பது நம்மைச் சார்ந்து இருப்பவரிடம் நாம் செய்வது, அருள் என்பது எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துவது. காண்க 30/01/2021 (13).

அதேபோன்று, பொருள் வரும்போதும் அதிலும் அன்பும் இருக்க வேண்டும் அருளும் இருக்க வேண்டும்!


எந்தப் பரிமாற்றத்திலும் இது முக்கியம். நமக்கு ஒருவர் ஒரு பொருளைக் கொடுக்கிறார் என்றால் அவர் மனம் நிறைந்திருக்க வேண்டும். இதனை இவருக்கு கொடுப்பதால் இவருக்கும், பொதுவாக சமுதாயத்திற்கும் பயன் இருக்கும் என்று நினைக்க வேண்டும்.


நமக்கு தானாகவே ஒரு பொருள் வந்து சேர்கிறது என்றால் அதில்கூட கவனம் இருக்கணும். அது அன்போடும், அருளோடும் வந்துள்ளதா என்பதை அறிந்து அவ்வாறு இல்லையெனில் அதை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும்.

சிலருக்கு பரம்பரை சொத்து என்று வரும். அந்தச் சொத்தின் அடிப்படையில் குற்றமில்லை என்றால் ஏற்பதில் தவறில்லை. இல்லையெனில், அதைத் தவிர்த்தல் நல்லது. இதிலும் கவனம் இருக்க வேண்டும்! எல்லாமே ஒரு தொகுப்பாத்தான் (package deal) வரும்.


அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்” --- குறள் 755; அதிகாரம் – பொருள் செயல்வகை


அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் = அருளும் அன்பும் இல்லாமல் வந்த செல்வம்; புல்லார் = அதைத் தழுவாமல்; புரள விடல் = நழுவவிட வேண்டும்.


அருளும் அன்பும் இல்லாமல் வந்த செல்வத்தைத் தழுவாமல் நழுவவிட வேண்டும்.


புல்லுதல் என்றால் தழுவுதல் என்று பொருள். புல்லார் என்றால் தழுவாமல் நிற்பவர். நம்மைத் தழுவாமல் நிற்பவரும் புல்லார்தான். புல்லார் என்றால் பகைவர் என்று பொருள்.


அன்பும் அருளும் இல்லாப் பொருளைத் தழுவாமல் நின்றால் நாமும் அந்தப் பொருளுக்குப் பகைவர்தானே! அது மட்டுமல்ல, அந்தப் பொருளை உதறிவிட (புரளவிடல்) வேண்டும் என்கிறார். இதுதான் கவனிக்கத் தக்கது.


ஆகையினால் அன்பொடும் அருளொடும் செய்க பொருளை!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.








Post: Blog2_Post
bottom of page