top of page
Search

அறனறிந்து ஆன்றமைந்த ... 635

03/04/2023 (760)

அமைச்சராக இருக்க நினைப்பவரின் குணங்கள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்று முதல் ஐந்து குறள்களில் எடுத்துச் சொல்கிறார்.


முதல் நான்கு குறள்கள் மூலம் சொன்னவை சிறு தொகுப்பாக:


1) அசைவின்மை (சோம்பலின்மை); 2) குடிகளைக் காத்தல்; 3) நூல்களைக் கற்றுஅறிதல்; 4) முயற்சி; 5) கருவி; காலம்; செய்கை; செய்யும்

அருவினை (ஒரு தொகையாக கருதுங்கள்), 6) பகைவர்களின் துணைகளைப் பிரித்தல்; 7) நம் துணைகளைப் பேணிக் கொளல்; 8) நம்மிடம் இருந்து பிரிந்தாரைச் சேர்த்துக் கொளல்; 9) ஒரு தடையை/பகையை எப்படி உடைப்பது என்று ஆய்ந்து ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தல்; 10) தேர்ந்தெடுத்த வழியில் எப்படி சிறப்பாகச் செய்தல்; 11) அதை எப்படி குழப்பம் இல்லாமல் தலைமைக்கு எடுத்துச் சொல்லல் ஆகியன.


(நம்ம வைகைப் புயல் வடிவேலு: லிஸ்ட் ரொம்ப பெருசாதான் போயிட்டேயிருக்கு! ...)


நம்மாளு: மேலும், அமைச்சனுக்கு அமைய வேண்டியன எதாவது இருக்கா ஐயா?


ஆசிரியர்: இருக்கு. இன்னும் ஒரு குறளில் முடிக்கிறார். மிக முக்கியமானதைச் சொல்லப் போகிறார்.


மேலே சொன்னதெல்லாம், அறவழியில் இருக்கான்னு பார்க்கனுமாம். யாருக்குண்டான அறமென்றால் அரசனுக்கு உண்டான அறவழிதானா என்று பார்க்கனுமாம்.


நம்மாளு: ஐயா, அது என்ன அரசனுக்கு உண்டான அறம்? அது என்ன தனியாக இருக்கா?


ஆசிரியர்: நினைத்தேன், நீங்க கேட்ப்பீங்கன்னு. நாம் இது வரை பார்த்தோம் அல்லவா, அதாவது, இறை மாட்சி (39வது அதிகாரம்) தொடங்கி இடுக்கணழியாமை (63 வது அதிகாரம்) வரை உள்ள அரசு இயலில் உள்ள இருபத்தி ஐந்து அதிகாரங்கள்தான் அவை!


நம்மாளு: ஐயா, அதானே, அதுதான் எனக்குத் தெரியுமே. வேறு எதாவது தனியாக இருக்கான்னு ஒரு ஐயம் வந்துட்டுது அதான் கேட்டே(ஏ)ன்!


ஆசிரியர் ஏதும் சொல்லாமல் தொடர்ந்தார்.


12) அரசனுக்கு விதிக்கப்பட்ட அறங்களை அமைச்சர் நன்றாக அறிந்து இருக்கனுமாம்; 13) சொல்லவரும் கருத்துகளை, படிப்பறிவு, பட்டறிவு முதலியவைத் துணைக்கொண்டு தெளிவாகச் சொல்லும் சொல் வன்மை இருக்கனுமாம்; அதுமட்டுமில்லாமல், 14) அரசனானவன் சுருங்கியிருந்தாலும், விரிந்து இருந்தாலும், இரண்டிற்கும் இடைப்பட்டு இருந்தாலும், அதாவது,எந்த நிலையில் இருந்தாலும் எப்படி வெற்றியை நோக்கிச் செல்வது என்பதை அறிந்த அமைச்சர் என்பவர்தான் சரியானத் துணையாக இருக்க முடியும் என்கிறார்.

சரி நாம் குறளுக்கு வருவோம்.


அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.” --- குறள் 635; அதிகாரம் – அமைச்சு


அறனறிந்து = அரசன் செய்ய வேண்டிய அறங்களை அறிந்து; ஆன்றமைந்த சொல்லான் = கல்வி கேள்விகளால் அமைந்த சொல்வன்மையுடன்; எஞ்ஞான்றும் = அரசன் இருக்கும் எந்த நிலையிலும்; திறனறிந்தான் = வெற்றியை எப்படி பெறுவது என்ற வழிகளை அறிந்தவன்; தேர்ச்சித் துணை = தேர்ந்தெடுத்த துணையாவான்.


அரசன் செய்ய வேண்டிய அறங்களை அறிந்து, கல்வி கேள்விகளால் அமைந்த சொல்வன்மையுடன், அரசன் எந்த நிலையில் இருந்தாலும் வெற்றியை எப்படி பெறுவது என்ற வழிகளை அறிந்தவன்தான் தேர்ந்தெடுத்த துணையாவான்.


நம்மாளு: அப்பாடி, ஒரு வழியாக முடித்தாரா ஐயா?


ஆசிரியர்: பொறுமை அவசியம். நாளை சந்திப்போம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)




Post: Blog2_Post
bottom of page