top of page
Search

அழுக்கா றுடையான்கண் 135, 35, 661

17/10/2023 (955)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

ஒழுக்கத்தைப் பேண முயலும்போது சோதனைகள் எந்தவடிவில் வரும்?

ஒழுக்கத்திற்கும் அழுக்காற்றிற்கும் (பொறாமைக்கும்) தொடர்பு இருப்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.


அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்று வகைப்படுத்தும்போது (குறள் 35)அழுக்காற்றை முதலிலேயே சொல்லிவிடுகிறார். அழுக்காறு அஃதாவது, பொறாமை மனத்தில் விதைக்கப்பட்டுவிட்டால் அதனைத் தொடர்ந்து ஏனைய மூன்றும் ஒவ்வொன்றாக முளைத்துக் கிளைவிடும். அப்போது, ஆங்கே நல்ல ஆக்கங்களுக்கு ஏது வழி?


அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்ற தறம்” ---குறள் 35; அதிகாரம் – அறன் வலியுறுத்தல்

(அழுக்காறு = பொறாமை; அவா = பேராசை; வெகுளி = கோபம், சினம்; இன்னாச்சொல் = கடுஞ்சொல்; இழுக்கா = இழுக்கி, தவிர்த்து, நீக்கி; இயன்றது = செய்வது; ஒழுக்கம் –ன்ற சொல்லுக்கு எதிர்மறை ‘இழுக்கம்’; ஒழுக்கம் = இடையறாது கடை பிடிக்க வேண்டியது; இழுக்கம் = எப்பவுமே கடை பிடிக்க கூடாதது).


சரி, இதற்கு என்ன வழி? மனத்திட்பம்தான் வழி. மனத்தைப் போற்றி பாதுகாக்க வேண்டும்.


“வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம் மற்றவை எல்லாம் பிற” ---குறள் 661; அதிகாரம் – வினைத்திட்பம்


அழுக்காறு உடையவனுக்கு நல்ல செயல்கள் செய்ய வாய்ப்பில்லை; அதுபோது, அவனிடம் ஒழுக்கமும் இல்லாமல் போகும். எனவே, அவனுக்கு உயர்வு ஏது? என்கிறார்.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.” --- குறள் – 135; அதிகாரம் – ஒழுக்கமுடைமை


அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை = பொறாமை கொண்டவனிடம் நல்ல செயல்களுக்கு வாய்ப்பில்லை. ஒழுக்கத்திற்கும் வாய்ப்பில்லை; ஒழுக்கம் இலான்கண் உயர்வு = ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இல்லை.


விலக்கப்பட வேண்டிய அழுகாற்றைத் தொலைத்து, விதிக்கப்பட்ட ஒழுக்காற்றைப் பேணுவோம் என்கிறார்.


விதித்தன செய்தல்; விலக்கியன ஒழித்தல். அஃதே அறம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page