top of page
Beautiful Nature

அழல்போலும் மாலைக்கு ... 1228, 1227, 24/03/2024

24/03/2024 (1114)

அன்பிற்கினியவர்களுக்கு:

காமமாகிய இந்த நோய், விடியலிலேயே அரும்பிவிட்டது. பகல் பொழுது எல்லாம், அந்த அரும்பு பேரரும்பாய் முதிர்ந்து, மாலைப் பொழுதில் முழுதாக மலர்ந்துவிடுகிறது. என்னை வாட்டுகிறது என்று அவள் சொன்னதை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 18/02/2022. மீள்பார்வைக்காக:

 

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலருமிந் நோய். - 1227; - பொழுதுகண்டு இரங்கல்.

 

அவள்: குழலோசை மிகவும் இனிமையானதுதான். மறுப்பதற்கில்லை. காற்று அதனுள் புகுந்து வெளிப்படும்போது இனிய இசை பிறக்கின்றது. நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்!

 

ஆனால், உனக்குத் தெரியுமா தோழி, நான் அவரைப் பிரிந்திருக்கும் இந்த மாலைப் பொழுதில் என் காதுகளில் விழும் குழலோசை அழலைப் போலத் தகிக்கிறது.

 

தோழி: அழலா? அப்படியென்றால்?

 

அவள்: அழல் என்றால் நெருப்பு என்று பொருள் என்னவளே! அழல் என்றால் நரகம் என்றும் சொல்லலாம். குழலின் இசையும் என் காதுகளில் நெருப்பாறாகப் பாய்கின்றது. மாலைப் பொழுது இதோ வரப்போகிறது என்று தூது சொல்ல வருகிறதோ? என்ன செய்வேன்?

 

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல் போலும் கொல்லும் படை. – 1228; - பொழுது கண்டு இரங்கல்

 

ஆயன் குழல் = அதோ, பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது. மாடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள் மாடுகளை ஒன்று சேர்க்க குழலினை ஊதுகிறார்கள். மாடு மேய்ப்பவர்களின் அந்த இனிமையான குழலோசை;

மாலைக்குத் தூதாகி அழல்போலும் கொல்லும் படை = வரப் போகும் அந்தக் கொடுமையான மாலைப் பொழுதிற்கு முன்கூட்டியே கட்டியம் கூறுவதனைப் போல நெருப்பாக என் காதுகளில் பாய்கின்றன. இஃதே என்னை கொல்லும் படையாகவும் மாறுமோ?

 

அதோ பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது. மாடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள் மாடுகளை ஒன்று சேர்க்க குழலினை ஊதுகிறார்கள். மாடு மேய்ப்பவர்களின் அந்த இனிமையான குழலோசை, வரப் போகும் அந்தக் கொடுமையான மாலைப் பொழுதிற்கு முன்கூட்டியே கட்டியம் கூறுவதனைப் போல நெருப்பாக என் காதுகளில் பாய்கின்றன. இந்தக் குழலோசையே என்னை கொல்லும் படையாகவும் மாறுமோ?

 

குறிப்பு: இரண்டாம் அடியில் வரும் போலும் என்ற சொல் உரையசை – பொருள் இல்லை.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.



ree

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page