top of page
Search

இணர் எரி தோய்வன்ன ... குறள் 308

14/04/2022 (412)

கோபம் வராம இருக்க ஒரு அளவு இருக்கா இல்லையா? ரொம்பத்தான் ஓவராப் போனா என்ன பண்றது?


அப்பவும், நம்மால் இயலுமானால், வெகுளாமை நன்று என்று நம் பேராசான் சொல்கிறார்.


அதாவது நமது breaking point / tolerance level ஐ (எல்லைப் புள்ளி/ தாங்குகின்ற எல்லையை) முடியுமானால் தள்ளிவைக்கனும் என்கிறார்.


நம் பேராசானுக்குத் தெரியாதா என்ன கோபம் என்பது ஒரு பிறவிக்குணம். அது அப்ப, அப்பத் தலைத்தூக்கும். அது எப்பத் தலைத்தூக்கும் என்பதுதான் பிரச்சனையே. அதைக் கண்டு பிடிச்சுட்டால் ஓரளவுக்கு சமாளிக்கலாம்.


அதை எப்படிக் கண்டு பிடிப்பது? அதுதான் ஒரு கலையாம். கோபம் சட்டுன்னு வருதுன்னு நாம சொல்கிறோம். ஆனால், அது அப்படி இல்லையாம்.


‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ங்கிற மாதிரி சில மாற்றங்கள் நம்ம உடம்பிலே ஏற்படுமாம். மூச்சு மாறும், உடலிலே ஒரு பதட்டம், நடுக்கம்… இப்படி ஒவ்வொருவருக்கு சில மாறுதல்கள் நடக்கும் கோபம் வருவதற்கு முன்னால். அந்தச் சமயம் அதைக் கண்டு பிடிச்சுட்டாப் போதும். உடனே, நாம ஒரு நிலைக்கு வந்துவிடலாம்.


“Being aware”, “mindfulness” ன்னு ஆங்கிலத்தில் சொல்றாங்க. பசித்திரு, தனித்திரு, விழித்திரு ன்னு ரொம்ப அழகா, நம்ம பெரியவங்க சொல்லி வைத்திருக்காங்க. நல்லப் பதவி வேண்டுமா? இந்த மூன்றும்தான் முக்கியம்ன்னு சொல்றாங்க. அந்த மூன்று சொற்களின் முதல் எழுத்துகளைப் பாருங்க. ப- த -வி.


பசித்திருன்னா சாப்பிடாமல் இருப்பதில்லை; தேடலில் பசியோட இருப்பது.

தனித்திரு என்றால் காட்டில் போய் இருப்பதில்லை; நடப்புகளில் அதீத பற்றில்லாமல் இருப்பது.

விழித்திரு என்றால் கண்ணை முழிச்சு முழிச்சு பார்பதில்லை; உள்ளுக்குள்ளே விழிப்பு நிலையில் இருப்பது.


நாம குறளுக்கு வருவோம். இப்பல்லாம், இந்த challenge, அந்த challenge ன்னு ஏதேதோ வைக்கிறார்கள். ஒரு சவால் (Challenge) வைக்கிறார் வள்ளுவப் பெருமான்.


எல்லாப் பக்கமும் கொத்து கொத்தாக தீயை வைப்பது போல துண்பங்களை நம்மைச் சுற்றி சுற்றி யாராவது செய்தாலும், முடியுமானால், கோபம் கொள்ளாமை நன்று, இதைச் செய்ய முடியுமான்னு சவால் விடுகிறார் நம் பேராசான்.


இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று.” --- குறள் 308; அதிகாரம் - வெகுளாமை


இணர் = கொத்து கொத்தாக; எரி = தீ(யை வைத்து); தோய் அன்ன = மூழ்குவதைப் போல; இன்னா செயினும் = தீங்குகளைச் செய்த்தாலும்; புணரின் = கூடுமானால், முடியுமானால்; வெகுளாமை நன்று = கோபம் கொள்ளாமை நன்று.


சவாலுக்கு ரெடியான்னு ஆசிரியர் கேட்டார். முயற்சி பண்றேன்னு சொல்லியிருக்கேன்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




11 views2 comments
Post: Blog2_Post
bottom of page