top of page
Beautiful Nature

இன்னா தினன்இல்லூர் ... 1158, 1159, 1160

19/02/2024 (1080)

அன்பிற்கினியவர்களுக்கு:

அவர் செல்வது உறுதி. அவர் சென்றபின்? ஓஒ… அந்தத் தனிமையை எப்படிப் போக்குவேன் என்று எண்ணிப் பார்க்கத் தொடங்குகிறாள். நான் இங்கு வந்து சில நாள்களே ஆகின்றன. இந்த ஊரில் உள்ளவரகளிடம் இன்னும் சரியாகப் பழகிக் கொள்ளவில்லை. நல் வாய்ப்பாக அந்த ஒரு தோழி மட்டும் இருக்கிறாள் … அவளைப் பிடித்துப் போட வேண்டும்… இப்படி அவளின் எண்ண ஓட்டங்கள்.

 

இயக்குநராகிய நம் பேராசான் தன் எழுத்தாணியை எடுத்தார், தீட்டீனார் வரும் குறள்களை!

 

இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்

இன்னா தினியார்ப் பிரிவு. – 1158; - பிரிவு ஆற்றாமை

 

இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது = நம்மோடு பழகியவர்கள் இல்லாத ஊரில் வாழ்வது கொடுமை; அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு = அதனிலும் துன்பம் என்னவர் என்னைப் பிரிந்து செல்வது.

 

நம்மோடு பழகியவர்கள் இல்லாத ஊரில் வாழ்வது கொடுமை. அதனிலும் துன்பம் என்னவர் என்னைப் பிரிந்து செல்வது.

 

இந்தக் குறளைச் சொன்னதன் மூலம் தோழிக்கு வேறு வழியில்லை. அவன் திரும்பி வரும்வரை துணைக்குத் தோழி இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறாள்.

 

தோழியின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புதிர் ஒன்றைப் போடுகிறாள். நெருப்பை நெருங்க நெருங்க வெப்பம் அதிகமாகும். நெருங்கித் தொட்டால் சுடும். ஆனால், அதற்கு மாறாக, பக்கத்தில் இருந்தாலும் சுடும். விலக, விலக மிக அதிகமாகச் சுடும் பொருள் ஒன்று உள்ளது. அது என்னவென்று உனக்குத் தெரியுமா? என்கிறாள்.

 

அவளே மீண்டும் தொடர்கிறாள்: நீ வாயை முடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால் உனக்குப் பதில் தெரியாது என்றே நினைக்கிறேன். அதுவும் சரிதான். அனுபவம்தானே பேசும். நானே சொல்கிறேன்.

 

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடின்சுடல் ஆற்றுமோ தீ. – 1159; - பிரிவு ஆற்றாமை

 

 

தீ தொடிற் சுடின் = தீயானது தொட்டால் சுடும், விலகினால் சுடாது; அல்லது காம நோய் போல விடின் சுடும் ஆற்றுமோ தீ? = அவ்வாறில்லாமல், காம நோயானது அவர் அருகில் இருந்தாலும் சுடுகிறது. அவர் விலகிச் செல்லச் செல்ல உடலெல்லாம் இன்னும் அதிகமாகத் தகிக்கிறது. இதைப் போன்று அந்தத் தீயினால் இயலுமோ? இயலாது.

 

தீயானது தொட்டால் சுடும், விலகினால் சுடாது. அவ்வாறில்லாமல், காம நோயானது அவர் அருகில் இருந்தாலும் சுடுகிறது. அவர் விலகிச் செல்லச் செல்ல உடலெல்லாம் இன்னும் அதிகமாகத் தகிக்கிறது. இதைப் போன்று அந்தத் தீயினால் இயலுமோ? இயலாது. தீயைவிடக் கொடுமையானது காம நோய்.

 

தோழி: ஏதோ நீ மட்டும்தான் இந்த உலகில் தனித்து விடப்பட்டாற்போல் புலம்புகிறாய்.

 

அவள்: அப்படிப் பலரும் இருக்கலாம். நான் அவ்வாறு இருக்கமுடியும் என்று நினைக்கிறாயா?

 

அரிதாற்றி அல்லல் நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்இருந்து வாழ்வார் பலர். – 1160; - பிரிவு ஆற்றாமை

 

அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி = பிரிந்து இருப்பது இயலாது. என்றாலும் அந்த அரிய செயலுக்கு உடன்பட்டு, மேலும், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு; பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர் = அந்தப் பிரிவுத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு,

பிரிந்து சென்றவர் வருவார் என்று வாயிலில் கண்  வைத்துக் காத்திருப்பவர் பலர். அப்படி என்னால் இருக்க இயலுமா?

 

பிரிந்து இருப்பது இயலாது. என்றாலும் அந்த அரிய செயலுக்கு உடன்பட்டு, மேலும், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, அந்தப் பிரிவுத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு, பிரிந்து சென்றவர் வருவார் என்று வாயிலில் கண்  வைத்துக் காத்திருப்பவர் பலர். அப்படி என்னால் இருக்க இயலுமா?

 

மேலும் பேசுவோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.



ree

                                          

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page