top of page
Search

இருபுனலும் வாய்ந்த ... 737, 20

15/06/2023 (833)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

முதல் ஆறு பாடல்கள் மூலம் நாட்டினது இலக்கணம் சொன்னவர், நாட்டின் உறுப்புகளைச் சொல்கிறார். முதலாவதாகச் சொல்வது “நீர்”.

நீர் இல்லை என்றால் எப்படிப்பட்டவர்களுக்கும், இந்த உலகத்திலே வாய்ப்பு இல்லை; அந்த நீர் வேண்டும் என்றால் மழை இல்லாமல் கிடைக்காது என்றார் 20 ஆவது குறளில். காண்க 11/08/2021 (159). மீள்பார்வைக்காக:


நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வான்இன் றமையா தொழுக்கு.” --- குறள் 20; அதிகாரம் – வான் சிறப்பு


நீரைக் குறித்து, அதற்கு ஆதாரமாக இருக்கும் மழையைக் குறித்து வான் சிறப்பு என்னும் அதிகாரத்தை கடவுள் வாழ்த்திற்கு அடுத்து இரண்டாவது அதிகாரமாக அமைத்தவர் நம் பேராசான்.


நீர் ஆதாரங்கள் ஒரு நாட்டிற்கு மிகவும் இன்றியமையாது என்றவர், அதைக் காக்கும் பொருட்டு அரண்களும் தேவை என்றார். அரண்கள் என்றால் அந்த நீர் ஆதாரங்களைச் சுற்றி மதில் எழுப்பிக் காப்பதல்ல!


இயற்கையை, சுற்றுச் சூழலை நாம் பாதுகாத்தால் அதுதான் நீருக்கு அரண்.

கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில் ஆய்ந்தறிந்த சான்றோர்கள் சொல்வது என்னவென்றால் எதிர்காலப் போர்கள் நீரைக் குறித்தே இருக்கும் என்கிறார்கள். நாம் அதைக் கவனிக்காமல் பல் குழுவாகப் பிரிந்து அடித்துக் கொண்டுள்ளோம்.


ஐக்கிய நாடுகளின் இந்நாள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) என்ன சொல்கிறார் என்றால்:

“அனைவருக்கும் சுத்தமான நீர் என்பது அடிப்படை மனித உரிமை (Basic Human Right). ஆனால், அந்த நீர் அனைவருக்கும் கிடைப்பது என்பது பெரும் சிக்கலாக மாறிக் கொண்டுள்ளது, நீர் ஆதாரங்கள் வரும் தலைமுறைகளுக்கு நீடிக்குமா, நிலைக்குமா என்றெல்லாம் எந்தச் சிந்தனையும் இல்லாமல் இரத்தக் காட்டேரிகள் போல மனிதகுல உயிர்நாடியான நீரினை நாம் அளவுக்கதிமாக உறிஞ்சிக் கொண்டுள்ளோம். உலகம் வெப்பமயமாவதையோ அதனால் நீர் ஆதாரங்கள் சுருங்குவதையோ குறித்து நமக்கு சிறிதும் கவலை இல்லை” என்று கவலைப் படுகிறார்.


வரும் காலங்களில் போர்கள் நீருக்காக இருக்கும் என்று பல அறிஞர் பெருமக்கள் கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக நமக்குச் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.


வெறும் ஒரு குவளை (tumbler) நீரினை ஒரு நெகிழிப் பொத்தலில் (Plastic bottle) அடைத்து சுகாதாரம் என்ற போர்வையில் வாங்கிக் குடித்து வழியெங்கும் வீசிக் கொண்டுள்ளோம். நமது திருமண விழாக்களிலும், இல்ல நிகழ்வுகளிலும் இது தவிர்க்க முடியாத நிகழ்வாக மாறிப்போனது எப்படி?


நீரைக் குறித்துப் பேசினால் கண்களில் நீர்தான் வருகிறது. எங்கே சென்று கொண்டுள்ளோம்? வணிக மயமாக்கும் வல்லுநர்கள், சுகாதாரப் பூதத்தை நன்றாக நமது மனத்தில் ஆழ விதைத்து விட்டார்கள். இது நிற்க.

நாம் குறளுக்கு வருவோம்.


இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.” --- குறள் 737; அதிகாரம் - நாடு


புனல் என்ற சொல்லின் பொருள் குறித்து நாம் விரிவாகவே முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 06/10/2022 (584). புனல் என்றால் நீர் ஓடும் பாதை, ஆறு, வயல், கொல்லை இப்படி பல பொருள்கள்.


இந்தக் குறளில் புனல் என்பது கீழிருந்து நீர் சுரக்கும் கேணிகளையும், மேலே நீரினைச் சேர்த்து வைக்கும் ஏரிகளையும், வரும் புனலான ஆறுகளையும் குறிக்கும்.


இரு புனலும் = கீழ் நிர் (கேணி, கிணறு), மேல் நீர் (ஏரிகள், குளங்கள்) என்ற இரு வழி நீர் ஆதாரங்களும்; வரு புனல் = ஆறு; வாய்ந்த மலையும் வருபுனலும் = நீரை உண்டாக்கக் கூடிய மலைகளும் அதிலிருந்து உற்பத்தியாகி வரும் ஆற்று நீரும்; வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு = இந்த மூன்று நீர் ஆதாரங்களைக் காக்கும் விதத்தில் வலிமையானக் கட்டமைப்புகளும் ஒரு நாட்டிற்கு உறுப்புகளாகும்.


கீழ் நீர் (கேணி, கிணறு), மேல் நீர் (ஏரிகள், குளங்கள்) என்ற இரு வழி நீர் ஆதாரங்களும்; நீரை உண்டாக்கக் கூடிய மலைகளும் அதிலிருந்து உற்பத்தியாகி வரும் ஆற்று நீரும், இந்த மூன்று நீர் ஆதாரங்களைக் காக்கும் விதத்தில் வலிமையானக் கட்டமைப்புகளும் ஒரு நாட்டிற்கு உறுப்புகளாகும்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






Post: Blog2_Post
bottom of page