top of page
Search

இறைகாக்கும் வையகம் ... 547

02/01/2023 (669)

ஒரு செயலைச் செய்துமுடிக்க பல வழிகள்(means) இருக்கலாம். விளைவுகளும் (ends) ஒன்று போலத் தெரியலாம். ஆனால் வழிமுறைகளுக்கு ஏற்றார்போல்தான் அந்த விளைவுகளின் தன்மைகள் (character) இருக்கும்.


“எப்படியாவது செய்து முடி” என்பதல்ல வாழ்க்கை. இப்படித்தான் செய்ய வேண்டும் என்பது மிக, மிக முக்கியம். இது இல்லை என்றால் பெற்ற வெற்றிகள் நிலைக்காது, பலருக்கும் மகிழ்ச்சியைத் தராது.


மகாத்மா காந்தி அவர்கள் மிக அழகாகச் சொல்கிறார்: “வழிமுறைகள் மிகவும் முக்கியம். நம்மால் கணிக்கக் கூடியது முடிவுகள் அல்ல! ஆனால், வழிமுறைகளை நாம் தீர்மானிக்கலாம், கட்டுப்படுத்தலாம், நிர்வகிக்கலாம் மற்றும் அதை உறுதியும் செய்யலாம். ஒருவன் வழியைக் கவனித்தால் முடிவு தன்னைத் தானே பார்த்துக்கொள்ளும்” என்கிறார்.


Gandhi said means are foreseeable, but ends are not. Thus, means can be controlled, managed and guaranteed. If one takes care of the means, the end will take care of itself.


வழிமுறைகள்தான் வாழ வைக்கும்! இதுதான் செங்கோன்மை அதிகாரத்தின் மையக் கருத்து.


‘சித்திரப் பாவை’ எனும் நாவல் பாரதிய ஞானபீட பரிசு பெற்றது. அகிலன் அவர்கள் எழுதியது. மனதை உலுக்கும். வாழ்க்கைக்கு வழிமுறைகள் எவ்வளவு அழகு. அவைகள் எவ்வாறு புறந்தள்ளப்பட்டு “எப்படியாவது” வெற்றியைத் தட்டிப்பறி என்ற ஒரு நிலைக்கு நாம் எல்லோரும் தள்ளப் படுகிறோம் என்பதை சித்தரிக்கும் ஒரு அருமையான நாவல். நேரமிருப்பின் வாசிக்கவும்.


அதிலே ஒரு குறிப்பை அகிலன் அவர்கள் காட்டுகிறார். “அழகாக வாழக் கற்றுக் கொள்; முடிந்தால் வாழ்க்கையை அழகு படுத்து; முடியாவிட்டால் அதை அசிங்கப் படுத்தாமலாவது இரு.” என்கிறார்.


சரி, இது எல்லாம் எதற்கு என்றுதானே கேட்கிறீர்கள். நம் பேராசான் இந்தக் கருத்தையே குறளாகச் சமைத்துள்ளார்.


வழிமுறைகளை ஆய்ந்து, நன்மை பயப்பவைகளை மட்டும் பயன்படுத்தி, எந்த தடையும் இல்லாமல் செயல்களைச் செய்தால் அதுவே தலைமையைக் காக்கும் என்கிறார்.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.” --- குறள் 547; அதிகாரம் – செங்கோன்மை


வையகம் எல்லாம் இறைகாக்கும் = இந்த உலகத்தை அரசன் காப்பான்; அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் = அவனை, அவன் பயன் படுத்தும் வழிமுறைகள் காக்கும், அதையும் அவன் தப்பாமல் செய்தால்.


இந்த உலகத்தை அரசன் காப்பான்; அவனை, அவன் பயன் படுத்தும் வழிமுறைகள் காக்கும், அதையும் அவன் தப்பாமல் செய்தால்.


(“முட்டா” என்பது ஈறுகெட்ட எதிர் மறை பெயரெச்சம்.)


மீண்டும் சந்திப்போம்.


நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page