top of page
Search

இறலீனும் எண்ணாது ... 180, 341, 181, 182

13/11/2023 (982)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

வெஃகாமை அதிகாரத்தின் இறுதிக் குறளில் வெஃகினால் இது; வெஃகாவிட்டல் அது என்று சொல்லி முடிக்கிறார்.


அது என்ன இது? அது?


இது: யோசிக்காமல் பிறர் பொருளை விரும்பினால் அழிவு;

அது: பிறர் பொருளை விரும்பாவிட்டால் வெற்றி.


இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு. - 180; வெஃகாமை


இறல் = இறுதி, அழிவு; எண்ணாது வெஃகின் இறல் ஈனும் = பின் விளைவுகளைப்பற்றி எண்ணாது பிறர் பொருளை விரும்பினால் அழிவைத்தரும்; விறல் = வெற்றி; செருக்கு = பண்பு, களிப்பு, பெருமை, செல்வம் (ஆகு பெயர்); வேண்டாமை என்னுஞ் செருக்கு விறல் ஈனும் = பிறர் பொருள் நமக்கெதற்கு என்று விலக்கும் பண்பு வெற்றியைத் தரும்.


பின் விளைவுகளைப்பற்றி எண்ணாது பிறர் பொருளை விரும்பினால் அழிவைத்தரும்; பிறர் பொருள் நமக்கெதற்கு என்று விலக்கும் பண்பு வெற்றியைத் தரும்.


வேண்டாம் என்றாலே இன்பம்தான். பற்று வைத்தால் துன்பம்தான்.


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். - 341; துறவு


எந்த எந்தப் பொருள்களிலிருந்து ஆசையை நீக்குகிறோமோ அந்த அந்தப் பொருள்களால் வரும் துன்பம் இல்லை. காண்க 28/02/2021 (42).

வெஃகாமை அதிகாரத்தைத் தொடர்ந்து புறங்கூறாமையை வைக்கிறார்.

ஒருவர் இல்லாத போது அவரைப்பற்றித் தாழ்வாகப் பேசுவதுதான் புறம்கூறுதல். இந்த அதிகாரத்தில் உள்ள சில குறள்களை முன்னரே பார்த்துள்ளோம்.


அஃதாவது, அறம் என்ற சொல்லை வாயால் கூடச் சொல்லாதவன்; பல அல்லவைகளைச் செய்பவன்; இவன்கூட நல்லவன்தான் என்கிறார். எப்போது என்றால் அவன் புறம் மட்டும் பேசுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டால்! காண்க 15/06/2021 (113).


அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறம்கூறான் என்றல் இனிது. - 181; புறங்கூறாமை

அறம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று அறங்களை அழித்து அதையே உரக்கச் சொல்லி மேலும் தொடர்ந்து அறமல்லாதவற்றைச் செய்வதை விட தீமையானது எது என்று கேட்டால் ஒருவர் இல்லாதபோது அவரைப் பழித்துச் சொல்லி அவரை நேரில் கண்டவுடன் பொய்யாகச் சிரித்து நட்பு பாராட்டி நடிப்பது. காண்க 16/06/2021 (114).


அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. - 182; - புறங்கூறாமை

நாளைத் தொடர்வோம்.

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





Post: Blog2_Post
bottom of page