top of page
Search

இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் ...

04/01/2024 (1034)

அன்பிற்கினியவர்களுக்கு:

எச்சரிக்கை: நீண்ட பதிவு! பொறுமையாக படிக்கவும்!

கள்ளத்தனத்தை ஒழித்துவிட்டால் அங்கு இட்டு நிரப்பப்பட வேண்டியது வாய்மை. எனவே,  வாய்மையை அடுத்த அதிகாரமாக அமைத்துள்ளார். வாய்மை என்பது வேறு ஒன்றுமல்ல “யாதொன்றும் தீமை இலாத சொலல்” என்றார் குறள் 291 இல். காண்க - 25/01/2021.

 

வாக்கு மிக முக்கியம் என்பதனை ஆங்காங்கே குறிப்பிடுவார். வாழ்வின் தொடக்கமும் வாக்கு; இடையிலும் வாக்கு; நீங்கிய பின்னும் வாக்கு. வாக்குதான் என்றும் எப்போதும் நிலைத்து நிற்கும். காற்றில் தூவிய வாக்கிற்கு அழிவில்லை. இந்தப் பரந்த அண்ட வெளியில் அது எப்போதும் இருக்கும்.

 

வேற்று கிரகங்களில் மக்கள் வசிக்கிறார்களா என்று அறிய விஞ்ஞானிகள் முயலும் ஓர் உத்தி என்னவென்றால் பல விதமான மொழிகளின் ஒலியலைகளை அண்டத்தில் பரப்புகிறார்கள். ஏன்?

அந்த ஒலியலைகளை இனம் கண்டு யாராவது தொடர்பு கொள்ளமாட்டார்களா என்று ஆராய்கிறார்கள். ஆனால், இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. ஏன்?

 

நாம் தற்காலத்தில் பேசும் மொழிகளைக் கொண்டு ஒலியலைகளை உருவாக்குவதால் இருக்கலாம். நமது அலைவரிசை வேறாக இருக்கலாம். ஒரு நாள் இல்லை, ஒரு நாள் இந்த ஆராய்ச்சி நிச்சயம் வெற்றி பெறும்.

 

பால்வெளியை (milky way) எப்படி கி.பி. 1610 இல் கலிலியோ கலிலி (Galileo Galilei) பெருமானார் கண்டறிந்து சொன்னாரோ அவ்வாறு ஒருவர் கண்டறிவார்கள். சரியான கருவிகள்தாம் தேவை. கலிலியோ பெருமானார்க்கு உதவியது அந்தக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டத் தொலைநோக்கி (telescope).

 

இந்தத் தொலைநோக்கியின் வளர்ச்சிதான் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி, 1990 (Hubble Space Telescope). இந்தக் கண்டுபிடிப்பின் மூலமாகத்தான் பால்வெளிக்கும் அப்பால் உள்ள விண்மீன் திரள்களைக் (Galaxies) காண முடிகிறது. வான்வெளியின் இரகசியங்கள் புலப்படத் தொடங்கியுள்ளன. இதற்கு விதை போட்ட விஞ்ஞான வித்தகர்தான் எட்வின் பவல் ஹப்பிள். (Edwin Powell Hubble, 1889 – 1953). தெரிந்து வைத்துக் கொள்வோம்.

 

நம் இலக்கியத்தில் இது இருக்கிறது, அது இருக்கிறது. இதை அப்போதே பயன்படுத்தினார்கள் என்று பழங்கதைகள் பேசுவதால் பயனில்லை.

 

… மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்லை

திறமான புலமையெனில் வெளி நாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்… மகாகவி பாரதி

 

பிற நாட்டு இலக்கியங்களை வெளிநாட்டார் வனக்கஞ்செய்து ஆராய்கிறார்கள். தெளிவு பெறுகிறார்கள். பலவற்றைக் கண்டுபிடிக்கிறார்கள். அறிவியல் உலகம் விரிகிறது. பழங்கதைகள் மட்டுமே வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லா.

 

… எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்;

இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும் … பாவேந்தர் பாரதிதாசன்

 

தமிழிலும் புதிய இலக்கண நூல்கள் வரவேண்டும். புதிய உலகிற்கு ஏற்றவாறு அமைதலும் வேண்டும். பண்டைய காலத்தில் உருவான இலக்கண நூல்களை மறுபார்வை செய்து மாற்றம் செய்தல் வேண்டும்.

 

இலக்கியம் கண்டு இலக்கணம் வகுப்பதுதான் இலக்கணத்தின் இலக்கணம் என்பர். தற்கால இலக்கியங்களை உள்வாங்கி இலக்கண நூல்கள் செய்தல் வேண்டும். பண்டைய இலக்கண நூல்களில் உள்ள வேறுபாடுகளைக் களைதல் வேண்டும். தமிழ் அறிஞர்கள் அவற்றைச் செய்தால் வரும் காலத்தில் தமிழ் தங்குத் தடையின்றி வளர வழி வகுக்கும்.

 

தமிழில் பிழை நீக்கி எழுதவே நம் காலம் முடிந்துவிடும் போல இருக்கிறது! ஒரு அறிஞர் இதுதான் சரி என்கிறார். வேறொரு புலவர் இது தவறு என்கிறார். ஏன் ஒரு கருத்தொற்றுமை உருவாகக்  கூடாது? அதை விடுத்துக் கட்சி பிரித்துக் கொண்டு நாங்கள் இவ்வாறுதான்; அவர்கள் அவ்வாறுதான் என்றால் மக்களின் நிலை வேறாகிவிடுகிறது! அனைவரும் ஓங்கி “வாழ்க” கோஷமிட்டு பிரிகிறார்கள்.


இதோ, “கோஷம்” என்பது நம் சொல்லல்ல என்பர்.

 

“விஷயம்” என்பதை “விடயம்” என்று சொன்னால் தமிழாகி விடுகிறது. அப்போது, “கோஷம்” என்பதைக் “கோடம்” என்று சொல்லலாமா? “சந்தோஷம்” என்பதைச் “சந்தோடம்” என்று மாற்றலாமா? பாமரனான எனக்குத் தெரியவில்லை. தமிழறிஞர்கள்தாம் பதில் சொல்ல வேண்டும்.

 

ஒருவர் தாம் கண்டுபிடித்தச் செயலிக்குப் பெயர் இடுகிறார், அது அவரின் குழந்தை. அவருக்குப் பிடித்தார்போல் பெயர் வைக்கிறார். அதைத் தமிழ் படுத்தும்போது தமிழும் அங்கே படாதபாடு படுகிறது. அந்தப் பெயரும் உருமாறுகிறது. சரி, அப்படி பெயர் மாற்றுகிறோமா, அதன் அருகிலேயே மூல மொழியில் எழுதி வைத்தாலும் பரவாயில்லை. உதாரணமாக “வலைகுழாய் (YouTube)” என்று எழுதலாம்.  அப்படி எழுதினால்தான் அதனைக் கண்டுபிடித்தவர்க்கும் மதிப்பு; அந்தக் கண்டுபிடிப்பிற்கும் உயர்வு.

 

சிலர் யூ ட்யூபை (YouTube)  “வலை ஒலி” என்கிறார்கள். சிலர் “உன்குழாய்” என்றுகூட அழைக்கலாம்!

 

அண்மையில் ஒரு செய்தித் தாளில் ஒரு செய்தி. அதை முழுமையாக மூன்று முறை படித்தாலும் பொருள் விளங்கவில்லை.

 

தலைப்பு: பிப்ரவரியில் நிரலாக்க போட்டி.

சென்னை, நவ 23: பிப்ரவரி மாதம் நடைபெறும் கணித்தமிழ் 24 பன்னாட்டு மாநாட்டின் ஒரு பகுதியாக நிரலாக்க போட்டி நடத்தப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. …

 

இப்படி இந்தச் செய்தி தொடர்கிறது, இறுதிவரை நிரலாக்க போட்டி என்றால் என்ன என்பதனைச் சொல்லவேயில்லை. இதனைப் படிப்பவர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்பதும் தெரியவில்லை.

 

கணித்தமிழா? கணினித்தமிழா? இது ஒரு ஐயம்.

 

பார்த்தீர்களா எனக்கு இதிலும் இரு சிக்கல். ஐயமா? அய்யமா? இதிலும் ஒரு சந்தேகம்! என்ன சந்தேகம் வேற்று மொழியா? ஓஒ… நான் என்ன செய்வேன்? ஒரு நாள் தெளிவு பிறக்கும். நிற்க.

 

அந்தச் செய்தியில் எனக்கு இன்னுமொரு _____. (ஐயம், அய்யம், சந்தேகம் என்று எது சரியோ அதைக் கோடிட்டப் பகுதியில் இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்.)

 

ஆனால், ஒற்று மிகுமா, மிகாதா என்பதை மட்டும் சொல்லுங்கள்! மகரஈறு கெடுமா? நிரலாக்கம் + போட்டி = நிரலாக்கப் போட்டியா? நிரலாக்க போட்டியா?

 

அந்தக் காலத்தில் ஓலைகளில் எழுதியதால் அவர்களுக்கு நிறுத்தக் குறிகள் இடுவது இயலாததாக இருந்திருக்கலாம். அது மட்டுமல்லாமல் அனைத்து இலக்கியங்களும் பாடல் வடிவில் இருந்தன. தற்கால இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடை வடிவிலே உள்ளன. இதற்கு ஏற்றார்போல் இலக்கண நூல்கள் படைக்க வேண்டும்.

 

பாடல்களுக்காக எழுதிய இலக்கண நூல்களைக் கற்று உரைநடை எழுதுவது எங்ஙனம்? அதிலும், பாடல்களில் இலக்கண வழு இருந்தால் அதனை படிப்பாளியின் தனி உரிமை என்று ஏற்றுக் கொள்ளும் நாம், அதே உரிமையை உரைநடைப் படைப்பாளிக்கு வழங்குவதில்லை!

 

சொல்லவரும் பொருளில் குற்றம்வராமல் எழுதச் சொல்லித் தர வேண்டும். இதுதான் மிக முக்கியம்.

 

புனையப்போகா இலக்கியத்திற்கு, இலக்கணங்களைப் பள்ளிப் பருவம் முழுவதும் “கடனே” என்று கற்கிறார்கள். ஆசிரியப்பா, கலிப்பா, குறள் வெண்பா, இணைக் குறள் ஆசிரியப்பா… என்கிறோம்.

 

“அப்பப்பா முடியலையப்பா” என்று மாணவர்கள் கதறுவது நம் காதுகளில் கேட்பதில்லை. இந்தப் பாவிற்கு இது சிற்றெல்லை, அது பேரெல்லை என்று ஆது ஒரு தனித் தொல்லை. இருப்பினும் மனப்பாடம் செய்கிறார்கள். 

 

சரி, பெரிய கவிஞர்கள் ஆகிவிடுவார்களா என்றால் அதுதான் இல்லை.

 

வெற்றிபெற என்ன மதிப்பெண்கள் வேண்டும் என்றால் 100 க்கு 35 இருந்தால் போதும்! அஃதாவது, 65% படிக்கவே வேண்டாம்!

 

பின்னர், நாம் அவர்களை “என்ன படிச்சே நீ, ஓரு தப்பில்லாமல் எழுத முடியுதா?” என்கிறோம். இது ஒரு பெரும் முரண்.

 

“கொட்டைப் பாக்கு” என்று எழுதச் சொன்னால் “கேட்ட பாகு” என்று எழுதி “கோட்டவி” விடுகிறார்கள். என்னப்பா இது என்றால், “தமிழ்லாம் வராது அங்கிள் (uncle)” என்கிறார்கள்!

 

மொழியைக் கற்பது என்பது வேறு. மொழியைக் குறித்துக் கற்பது என்பது வேறு. நாம் செய்வதெல்லாம் மொழியைக் குறித்துக் கற்பதுதான்.

 

மொழிப் பாடங்கள் நன்றாக மாணவர்களது  சிந்தனையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைதல் வேண்டும்.

 

நமது அரசு ஆணைகள், ஆய்வு அறிக்கைகள், அறிவியல் பாடங்கள் உள்ளிட்டவை எண்சீர் கழி நெடிலடி விருத்தத்திலோ, கொச்சுக் கலிப்பாவிலோ வெளியாகிறதா என்ன?

 

ஒரு “பா”வையும் இயற்றிப் பார்த்திராத  தமிழ் ஆசிரியப் பெருமக்கள்தாம் பாவம். அவர்களும் மனனம் செய்கிறார்கள். எளிதாக கவனத்தில் வைத்து எழுதும் வழிகளைத்தாம் (short cuts) கற்றுக் கொடுக்க முடிகிறது. ஆசிரியர்களின் பொன்னான நேரம் வீணாகிறது.

 

35% வாங்கினால் போதும் ராசா! கொஞ்சம் பாஸ் பண்ணிடுப்பா. இல்லை என்றால் நம்ம ஸ்கூல் (பள்ளி) மானம் போயிடும் என்று கெஞ்சும் நிலைமையில்தாம் இருக்கிறார்கள்.

 

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதால் பயன் இல்லை. மாற வேண்டும். மாற்றம் வேண்டும்.

 

… எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்;

இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும் … பாவேந்தர் பாரதிதாசன்

 

வாய்மையை ஆரம்பித்து என் வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதியுள்ளேன். ஏற்றுக் கொள்ளக் கூடியனவற்றை ஏற்க. மற்றவற்றைத் தள்ளுக. எவ்வாறாயினும் உங்கள் கருத்துகளைப் பகிர்க. நாளைத் தொடர்வோம்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

 

பி.கு: கணித்தமிழ் என்றால் தமிழ் கம்ப்யூட்டிங் (Tamil Computing)  என்று பொருளாம்.  இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 8,9,10 ஆகிய நாள்களில் “கணித்தமிழ் 24” என்னும் பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு, தமிழ்நாடு அரசின் சார்பில் நடைப்பெறப் போகிறது. கலந்து கொண்டு அறிந்து கொள்வோம்.




Post: Blog2_Post
bottom of page