top of page
Search

இலமென்று அசைஇ ... 1040

Updated: Mar 20, 2023

15/01/2023 (682)

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

ஆசிரியர் தமிழர் திருநாளைக் கொண்டாட சென்றிருப்பதால் இன்று 24/01/2022 (333) மீள்பதிவு:


உழவு என்ற அதிகாரத்தின் பத்தாவது குறள்:

உழவு என்பது ஒரு தொழில் அல்ல. உழவு என்றால் முயற்சி. எதையுமே முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று நம் பேராசான் சொல்லியிருக்கிறார். ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற 616 ஆவது குறளில்.

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம்!

கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன் கைகளில் பூமி சுழன்றுவரும்! …”

“விழிவிழி உன்விழி நெருப்புவிழி -உன் விழிமுன் சூரியன் சின்னப்பொறி! எழுஎழு தோழா! உன்எழுச்சி -இனி இயற்கை மடியில் பெரும்புரட்சி!”


என்றார் கவிஞாயிறு தாராபாரதி. இவர் ஒரு நல்லாசிரியர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் குவளை எனும் ஊர்தான் இவர் பிறப்பிடம். இயற்பெயர் இராதாகிருஷ்ணன். ஐம்பத்து மூன்று ஆண்டுகளிலே மறைந்த கவிஞர். சும்மா தெரிந்து வைப்போம்.


விவசாயம் என்கிற சொல்லைவிட உழவு என்ற சொல்தான் சிறப்பு என்று அறிஞர் பெருமக்கள் சொல்கிறார்கள். கவனிக்க வேண்டியது இது. சொல்தான் மந்திரம். இது நிற்க.


என் கையில் ஒன்றும் இல்லையே நான் என்ன செய்வேன் என்று கேட்பதுபோல் ஒரு கேள்வி. அதற்கு பதில் சொல்லவில்லை நம் பேராசான். அதற்கு பதிலாக அந்தப் பெண் கிண்டலாகச் சிரிப்பாள் என்கிறார். என்ன கொடுமை சரவனா இது? இல்லைன்னு கேட்டால் சிரிப்பதா?


ஆமாம், நிச்சயமாக சிரிப்பாள் என்று மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறார்.

எந்தப் பெண் சிரிப்பாள். நிலம் எனும் நல்லாள் என்கிறார். பரந்துபட்ட இவ்உலகில் ஆயிரம் வாய்ப்புகள். திரையைப் போட்டுவிட்டதால் உனக்குப் புலப்படவில்லை. நீ எதைப் பார்க்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ இல்லாததைப் பார்த்தால் இல்லாதவன் ஆகிறாய். எந்தப் பக்கம் பார்க்கிறாயோ உன் வண்டி அந்தப் பக்கம்தான் போகும். மாற்றி யோசி தம்பி என்கிறார்.


இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலம் என்னும் நல்லாள் நகும்.” --- குறள் 1040; அதிகாரம் – உழவு


குறள் எண்ணை கவனீத்தீர்களா? 1040. 10 வயதிலிருந்து 40 வயதுவரை பயிர் செய்யும் பருவம். பருவத்தே பயிர் செய் என்பது போல இருக்கிறது. இதைத்தான் அமெரிக்க வாரன் பஃபெட் (Warren Buffet) கூட சொல்கிறார்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




Post: Blog2_Post
bottom of page