top of page
Search

இளைதாக முள்மரம் 879, 674

31/08/2023 (909)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

விளையும் பயிர் முளையிலே;

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது;

முள்ளுச் செடியை முளையிலே பிடுங்கணும்;

நெருப்பு சிறிது என்று முந்தானையில் முடியலாமா?

கடுகத்தனை நெருப்பும் போரைக் கொளுத்திவிடும் ...


கருப்பைபோல் குரங்கு எற்ற, கதிர் சுழல்

பொருப்பை ஒப்பவன்தான் இன்று பொன்றினான்;

அருப்பம் என்று பகையையும், ஆர் அழல்

நெருப்பையும், இகழ்ந்தால், அது நீதியோ?” --- பாடல் 7108; கம்பராமாயணம்


எலியைப் போன்ற குரங்கு தாக்கி சூரியன் சுற்றும்

மலை போன்ற பிரகத்தன் இன்று மாண்டான்;

பகையினையும் அரிய நெருப்பையும் அற்பமென்று இழிவு செய்தால் அது நீதியோ? (ஆகாது).


செய்யத் தொடங்கியச் செயல், களையத் தொடங்கியப் பகை ஆகிய இரண்டையும் முற்றும் முடிக்காமல் மீதம் வைத்தால் அவை நம்மை அழிக்கும் என்றார் குறள் 674 இல். காண்க 10/05/2023 (797). மீள்பார்வைக்காக:


வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும்.” --- குறள் 674; அதிகாரம் – வினை செயல்வகை


சரி, சரி புரியுது. சிறு நெருப்பு என்று அனைக்காமல் விட்டுவிடக் கூடாது அதுதானே?

ஆமாம். பகைத்திறம் தெரிதலில் இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறார்.


இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.” --- குறள் 879; அதிகாரம் – பகைத்திறம் தெரிதல்


முள்மரம் இளைதாகக் கொல்க = முள் மரம் என்று தெரிந்துவிட்டால் சிறிய செடியாக இருக்கும் போதே அகற்றிவிடுங்கள்; காழ்த்த இடத்து களையுநர் கைகொல்லும் = (அப்படிச் செய்யவில்லை என்றால்) அந்தச் செடி வளர்ந்து பெரிய மரமாகிவிட்டால் அதை வெட்ட நினைப்பவரின் கையை அது பதம் பார்க்கும்.


முள் மரம் என்று தெரிந்துவிட்டால் சிறிய செடியாக இருக்கும் போதே அகற்றிவிடுங்கள். அப்படிச் செய்யவில்லை என்றால், அந்தச் செடி வளர்ந்து பெரிய மரமாகிவிட்டால் அதை வெட்ட நினைப்பவரின் கையை அது பதம் பார்க்கும்.


பகை என்பதை முள்செடியாக்கி கருத்தைச் சொல்வதனால் இது பிறிது மொழிதல் அணி.


இந்தக் குறள் அமைந்துள்ள இடம் மிக மிக முக்கியம். இந்தக் குறளைத் தவறாகத் தான் பலரும் பயன்படுத்துகிறார்கள். தங்களை மீறி வளர்ந்துவிடுவார்களோ என்று தம் கீழ் இருப்போரை வெட்டிச் சாய்க்கிறார்கள்.


பகையை நட்பாக்க வேண்டும் என்று முதலில் சொன்னார் (குறள் 871); அதன் பின் எப்படியெல்லாம் ஒருவர் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார் (குறள் 878).


ஒரு செடி முள் செடியா என்பதை அறிந்து செய்ய வேண்டியச் செயல் களைவது.


நம்மைவிட இவன் வளர்ந்துவிடுவானோ என்று சாய்த்தால் அது சகோதர யுத்தம். அதன் அடிப்படை பயம், பொறாமை. அவ்வளவே. இதற்காக நம் பேராசான் இந்தக் குறளைச் சொல்லவில்லை.


எதிரிகளை அழிப்பதைவிட்டு விட்டு நம்மை மீறிவிடுவானோ இவன் என்று அழிப்பதுதான் அதிகமாகித் தாமும் அழிந்துபட்டுச் சமுகத்தையும் யுத்தகளத்தின் தாக்குதல்களுக்கு நடுவில் நிறுத்திப் பெரும் அழிவை ஏற்படுத்துகிறார்கள். இது நிற்க.


எதையாவது சுத்தம் செய்கிறோம் என்றாலே எனக்கு அலர்ஜி. அதாங்க ஒவ்வாமை! நிறைய இருக்கு பேச!


நாளைத் தொடர்வோம்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page