top of page
Search

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் ... குறள் 921

19/06/2022 (478)

‘வெட்கம்’ என்றால் என்னன்னு நமக்குத் தெரியும். ஒரு தயக்கம். தயக்கம் எதனாலும் வரலாம். ஒருவர் முன் செல்ல, பழக தயக்கம் வரலாம், பாலின வேறுபாட்டால் வரலாம்! அல்லது, இவ்வாறன ஒரு இழி செயலைச் செய்துவிட்டோமே என்று எண்ணி வெட்கப்படலாம்.


நமக்குள்ளே நிகழும் ஒரு செயலின் வெளிப்பாடுதான் வெட்கம்.


‘உட்கம்’ என்றால் என்ன? இதுவும் உள்ளே நிகழ்வதுதான். ஒருவித அச்ச உணர்வு. அறியாத ஒன்றை, அல்லது ஒருவரைப் பார்க்கும் போது ஏற்படுவது.

இவன் பெரிய ஆளா இருப்பானா? பெரிய மீசை வைத்திருக்கிறான். பார்வையே சரியில்லைன்னு நமக்குள் ஒரு தயக்கம், பய உணர்வு வரலாம்.


அவனே, அடுத்த நொடி, ‘உவ்வே’ன்னு ஒரு வாந்தி எடுத்தால்? நமக்கு புரிஞ்சிடும். இது ஒரு தண்ணி வண்டி, தண்ணிப் பார்ட்டி (party).

இவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்னு தோணிடும். நாமளே, அவனைப் பார்த்து ஓரமாப் போய் வாந்தி எடுய்யான்னு ஒரு மிரட்டல் போட்டுட்டு நடையைக் கட்டுவோம்.


இதை நம்பேராசான் பார்த்திருப்பார் போல. அதை அப்படியே ஒரு குறளாக மாற்றிவிட்டார்.


எப்போதும் தண்ணிவண்டியாக இருந்தால் உன்னைப் பார்த்து யாரும் பயப்படவும் மாட்டாங்க, மரியாதையும் கொடுக்க மாட்டாங்க என்கிறார்.


உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.” --- குறள் 921; அதிகாரம் – கள்ளுண்ணாமை


எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டு ஒழுகுவார் = எப்போதும் போதையிலேயே இருப்பவர்க(ளை); எஞ்ஞான்றும் உட்கப்படார், ஒளியிழப்பர் =எந்த காலத்திலும், யாரும் பார்த்து அஞ்சமாட்டார்கள், மேலும் அவர்களுக்கு இருக்கும் பெருமையையும் இழப்பர்.


எப்போதும் போதையிலேயே இருப்பவர்களைப் பார்த்து யாரும் அஞ்சமாட்டார்கள், மேலும் அவர்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்சப் பெருமையையும் காலியாயிடும்.


‘குடிகாரன் பேச்சு பொழுதுவிடிஞ்சாப் போச்சுன்னு’ நடையைக் கட்டிடுவாங்க.

ஆதலினால் மானிடர்களே, தண்ணி வண்டியாக இருக்காதீங்க என்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)






7 views0 comments
Post: Blog2_Post
bottom of page