top of page
Search

உண்டார்கண் அல்லது ... 1090

04/09/2022 (554)

அவன்: அவளுக்குத் தெரியாது?


நம்மாளு: எது அண்ணே தெரியாது?


அவன்: அவளைப் பார்க்கவே முடியலை…


நம்: என்ன அண்ணே, அவங்களைப் பார்த்தாதான் கலங்குதுன்னு சொன்னீங்க. தகை அணங்கு உறுத்துதுன்னு சொன்னீங்க. இப்ப என்ன?


அவன்: அது இருக்கட்டும் தம்பி. நறவம்ன்னா என்னன்னு தெரியுமா?


நம்: தெரியாது. ஏன் பேச்சை மாத்தறீங்க?


அவன்: நறவம்ன்னா ஒரு வித மலர்கள். உயர்ந்தோங்கி வளரும் தாவரங்களில் பூக்கும் (vascular plants). அதை எடுத்து அடுப்பிலிட்டு காய்ச்சினால் ஒரு கள் வரும். அதை அடுநறான்னு சொல்வாங்க.


நம்: ம்ம்…


அவன்: அதைக் குடித்தால் ஒரு விதமான போதை வரும். அது ஒரு விதமான மகிழ்ச்சியையும் தரும்ன்னு சொல்றாங்க.


நம்: ம்ம்...


அவன்: ஆனால், அதைக் குடித்தால்தான் அந்த மகிழ்ச்சி. ஆனால், அது உடலுக்கு கெடுதல்தான் செய்யும். இருந்தாலும், குடி மகன்கள் அதை தேடிப் போய் குடிக்கறாங்க இல்லையா?


நம்: சரி…


அவன்: எவ்வளவுதான் அவளின் அழகு என்னை வாட்டினாலும் அவளைப் பார்க்கவில்லை என்றால் எனக்கு இன்பம் இல்லை தம்பி அதான்.


நம்: ஓஓ… அவங்களைப் பார்க்காமா இருந்தாலும் உங்களுக்கு துன்பம்ன்னு அவங்களுக்கு தெரியலை அதானே? என்ன அழகா சொல்றீங்க. கவிஞர் ஆயிட்டீங்க


அவன்: இது நம்ம சரக்கு இல்லை, நம்ம பேராசான் சொல்லியிருக்காரு இப்படி:


உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம் போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று.” --- குறள் 1090; அதிகாரம் – தகை அணங்கு உறுத்தல்


கள்ளு குடித்தவர்களுக்கு மட்டும்தான் மகிழ்ச்சியைத் தரும். குடிக்கலைன்னா ஒன்றுமில்லை. ஆனால், காதலில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டாலே ஒரு இன்பம்தான். அது அவளுக்குத் தெரியலையே!


அடுநறா = கள்;

அடுநறா உண்டார்கண் அல்லது மகிழ்செய்தல் இன்று = கள்ளு குடித்தவர்களுக்கு மட்டும்தான் மகிழ்ச்சியைத் தரும். குடிக்கலைன்னா ஒன்றுமில்லை;


காமம் போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று = (ஆனால்,) காதலில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டாலே ஒரு இன்பம்தான். அது அவளுக்குத் தெரியலையே!


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




5 views0 comments
Post: Blog2_Post
bottom of page