top of page
Search

உள்ளத்தால் உள்ளலுந் தீதே ... 282, 595

31/12/2023 (1030)

அன்பிற்கினியவர்களுக்கு:

எள்ளாமை வேண்டுவான் கள்ளாமை வேண்டும் என்றார். எதுவொன்றும் உள்ளத்தில் தோன்றி உருப்பெறுவதால் உள்ளத்தைக் காக்க வேண்டும் என்கிறார். எண்ணங்களில் ஏற்றம் வாழ்வினில் மாற்றம். அவ்வளவே.

காண்க 02/02/2021.

 

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 

உள்ளத் தனைய துயர்வு. - 595; - ஊக்கம் உடைமை

 

நம் ஒளவைப் பெருந்தகை மூதுரையில்

 

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்

தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்

குலத்தளவே ஆகுமாம் குணம். – பாடல் 7; மூதுரை

 

ஏன் அருளாளர்கள் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார்கள் என்றால் நாம் வழுக்கி விழுவது தெரியாமலே விழுந்து வைப்பது மனத்தில்தான். மனமானது நாம் எந்தக் கருத்தைப் போட்டாலும், ஓஒ.. இதைத்தான் நம்மாளு எதிர்பார்க்கிறார் என்று அது தொடர்பான அனைத்து நியாயங்களையும் அது எடுத்து வைக்கும். சரி, தவறு என்பது அதற்குக் கிடையாது. அந்தத் தருணத்தில் நம்மை மகிழ்ச்சிக்கு ஆளாக்கும்.

 

பீர்பாலும் அரசரும் ஒரு நாள் வெளியூரில் நடந்த ஒரு விருந்துக்குப் போனார்களாம். அங்கே அவர்களுக்கு நன்றாகப் பொறித்த நெய் கத்தரிக்காயை வைத்தார்களாம். அரசரோ, கத்தரிக்காயை அதுவரை சாப்பிட்டவர் இல்லை. அதன் ருசியில் மதி மயங்கிப் போனாராம்.

 

இந்தக் கத்தரிக்காய் என்ன ருசி, என்ன ருசி என்றாராம்.

 

இதைக் கவனித்த பீர்பால், ஆமாம், அரசே, இது ஒரு சிறப்பு வாய்ந்த காய். இல்லையென்றால் இதற்கு ஆண்டவர், மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பாக ஒரு தொப்பியைப் போட்டிருப்பானா? என்றாராம்.

 

சரி, இன்று முதல் இது எமக்குத் தினமும் பரிமாறப்படட்டும் என்றாராம். அன்றிலிருந்து தினமும் கத்தரிக்காய்தான் அரசருக்கு!

 

முதல் நாள் நன்றாக இருந்ததாம். இப்படி நாள்கள் ஓட ஓட அரசருக்கு இந்தக் கத்தரியின் மேல் சலிப்புத் தோன்றியதாம். அதைப் பார்த்தாலே இப்போதெல்லாம் குமட்டல்வர ஆரம்பித்துவிட்தாம்.

 

பீர்பாலைப் பார்த்தாராம்.

 

அரசே, ஒன்றை கவனித்தீர்களா என்றாராம் பீர்பால்.

 

அரசர் எதைக் கவனித்தார். அவர்தான் குமட்டிக் கொண்டு இருக்கிறாரே!

என்ன என்பதுபோல் பார்த்தாராம்.

 

அரசே, ஆண்டவர் அந்த கத்தரிக்குத் தொப்பியை அணிவித்த உடன் அதற்குத் தலைக்கணம் வந்துவிட்டது. அதை உணர்ந்து ஆண்டவர் அதன் தலையில் ஆணியைப் போல் அந்தக் காம்பையும் அறைந்து வைத்துள்ளார் என்றாராம்.

 

அடடா, மிகச் சரி. நாளை முதல் எனது அரசாங்கத்தில் எங்குமே கத்தரிக்காய் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டாராம்.

 

உத்தரவிட்டுவிட்டு அவருக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டதாம். பிர்பாலைப் பார்த்து நீர் ஏன் இதனை முன்பே சொல்லவில்லை என்றாராம்.

 

அரசே, நீங்கள்தான் எனக்கு அரசர். கத்தரிக்காய் அல்லவே என்றாராம்!

 

பீர்பாலைப் போலத்தான் நம் மனது.

 

சரி, நாம் குறளுக்கு வருவோம்.

 

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வே மெனல். – 282; - கள்ளாமை

 

உள்ளத்தால் உள்ளலும் தீதே = தீய எண்ணங்களை, கீழ்த்தரமான எண்ணங்களை உள்ளத்தால் கருதுதலும் குற்றமே; பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் = எனவே, பிறர் பொருளைக் கள்ளத்தால் கவர்ந்துவிடலாம் என்று எண்ணுதலும் ஒரு குற்றமே.

 

தீய எண்ணங்களை, கீழ்த்தரமான எண்ணங்களை உள்ளத்தால் கருதுதலும் குற்றமே. எனவே, பிறர் பொருளைக் கள்ளத்தால் கவர்ந்துவிடலாம் என்று எண்ணுதலும் ஒரு குற்றமே.

 

அதுவும் துறவு நோக்கி இருப்பவர்களுக்கு உள்ளத்தில் தெளிவு முக்கியம். அதில் கல்லெறிந்து விளையாடிக் கொண்டு இருக்கக் கூடாது.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page