top of page
Search

ஊறொரால் உற்றபின் ...662, 652

30/04/2023 (787)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

கோள் என்றால் முடிபு, துணிவு, கோட்பாடு என்றெல்லாம் பொருள் இருப்பதை நாம் சிந்தித்தோம்.

ஆய்ந்தவர், அதாவது, பலவாறு, ஆராய்ந்து தெளிந்தவர்களின் கோட்பாடு, முடிபு என்ன என்பதை நம் பேராசான் இப்போது நமக்குத் தெரிவிக்கப் போகிறார்.


அதாவது, வினைத்திட்பத்திற்கு இரண்டு வழிகள் என்கிறார். இவை இரண்டும்தான் மாறி மாறி வரவேண்டும் என்கிறார்.

அவை என்னென்ன?


ஒன்று, ஊறொரால் என்கிறார். அதன் பொருள், ஊறு ஒருவுதல். ஒருவுதல் என்பது விலக்குதல் என்று நமக்குத் தெரியும். ஒருவுதல் சுருங்கி ஒரால் என்று வந்துள்ளது. தழுவுதல் என்பது தழால் என்று வருவதைப் போல!


ஊறு என்பது பழுதுபடும் வினைகளைக் குறிக்கும். அது என்ன பழுதுபடும் வினைகள் என்றால் அதற்கு நம் பேராசான், முன்பே நமக்கு எடுத்துச் சொல்லியுள்ளார். காண்க 20/04/2023 (777). மீள்பார்வைக்காக:


என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு

நன்றி பயவா விணை.” --- குறள் 652; அதிகாரம் – வினைத்தூய்மை


எந்தக் காலத்திலும், ஒரு செயலானது புகழொடு நல்லப் பயன்களைத் தராது என்றால் அந்தச் செயல்களை ஒருவுதல் வேண்டும் என்கிறார் நம் பேராசான். அதாவது, வினையில் பழுது இருக்கக் கூடாது. அதுதான் முதலில் அடியெடுத்து வைக்கக்கூடிய வழி.


சரி, இரண்டாவது?

அவ்வாறு ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும் போது, அந்த வினையானது, நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணிகளால், தவறாகப் போகும் போது வருந்தக்கூடாது. அதனை உள்வாங்கிக் கொண்டு, மீண்டும் முதல் வழியைத் தொடரவேண்டும்.


பாதையில் பள்ளங்கள் வரலாம்; இடறியும் விழலாம். அதற்கு ஒப்பாரி வைக்கக் கூடாது. இலக்கை மறத்தலும் கூடாது. தொடர வேண்டும். இதுதான், வினைத்திட்பம் உடையார்க்கு, இயற்கையாக இருக்க வேண்டும் என்கிறார் நம் பேராசான்.


ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.” --- குறள் 662; அதிகாரம் – வினைத்திட்பம்


ஆய்ந்தவர் கோள் = பலவாறு ஆராய்ந்தவர்களின் முடிவு என்னவென்றால்; ஊறொரால் = புகழொடு நன்றி பயவா வினைகளை விலக்கி நல்ல வினைகளின் வழி செல்லுதல்; உற்றபின் = ஊறு உற்றபின், அதில் தவறு நிகழுமானால்; ஒல்காமை = தளராமை; இவ்விரண்டின் ஆறென்பர் = இந்த இரண்டும்தான் வினைத்திட்பம் உடையாரின் வழியாக இருக்கவேண்டும் என்பது.


பலவாறு ஆராய்ந்தவர்களின் முடிவு என்னவென்றால்:

புகழொடு நன்றி பயவா வினைகளை விலக்குவது; நல்ல வினைகளின் வழி செல்லுதல். அவ்வாறு செல்லுங்கால், நம் கட்டுப்பாட்டில் இல்லாத சில காரணங்களால், தவறு நிகழுமானால் தளராமை. இந்த இரண்டும்தான் வினைத்திட்பம் உடையாரின் வழியாக இருக்கவேண்டும் என்பது.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page