top of page
Search

ஊழி பெயரினும் ... 989, 990, 09/05/2024

09/05/2024 (1160)

அன்பிற்கினியவர்களுக்கு:

 

ஊழி என்பது ஒரு கால அளவை.

 

‘ஒரு கால’ அளவையா? வெகு நீண்ட காலம் என்கின்றனர். அஃதாவது, இவ்வளவு, அவ்வளவு என்று சொல்ல முடியாத கால அளவு. அவ்வாறு இருக்கும் கால அளவைச் சொல்லும் முறைமைக்கு “அல்பெயர் எண்” என்கிறார்கள். ஆங்கிலத்தில் eon or aeon என்று சொன்னால் கொஞ்சம் நெருங்கி வரலாம்.

 

கோடிக்கு மேல் உள்ள எண்களைத் தொல்காப்பியப் பெருமான் அல்பெயர் எண்கள் என்கிறார்.

 

எண்கள் பத்தின் அடுக்காக: ஒன்று (1), பத்து (101), நூறு (102) , ஆயிரம்(103) , பத்தாயிரம் (104), நூறாயிரம் (105), பத்து நூறாயிரம் (106), கோடி (107), தாமரை – கோடி கோடி (1014); வெள்ளம் – கோடி தாமரை (1021); ஆம்பல் – கோடி வெள்ளம் (1028) … இப்படிச் செல்கின்றன.

 

தாமரை – ஐ; வெள்ளம் – அம்; ஆம்பல் – பல்

 

ஐ அம் பல் என வரூஉம் இறுதி அல் பெயர் எண்ணும் ஆயியல் நிலையும். – பாடல் 393; தொல்காப்பியம் – எழுத்ததிகாரம்,  புலவர் வெற்றியழகனார் உரை.

 

சரி, இந்தக் கதையெல்லாம் எதற்கு?

 

அதாங்க, ஊழி என்று ஆரம்பித்தோமே அதைக் கவனத்தில் வைக்க.

இந்த உலகம் பல ஊழிக்களைக் கண்டது, இன்னும் காணும்!

 

அப்படி, அந்த ஊழிகள் தொடர்ந்து பெயர்ந்து கொண்டிருந்தாலும் சான்றாண்மைக் கடல்கள், அஃதாவது, சான்றாண்மையில் உயர்ந்து நிற்போர் தங்கள் குணங்களை ஒரு போதும் மாற்றிக் கொள்ளமாட்டார்களாம்.

 

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்

காழி யெனப்படு வார். – 989; - சான்றாண்மை

 

ஊழி பெயரினும் சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் தாம் பெயரார் = ஊழி என்று சொல்லப்படும் நீண்ட காலங்கள் பெயர்ந்து கொண்டிருந்தாலும், அவற்றால் ஏற்படும் கால நிலை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், சான்றாண்மைக் கடல்கள், அஃதாவது, சான்றாண்மையில் உயர்ந்து நிற்போர், தங்கள் குணங்களை ஒரு போதும் மாற்றிக் கொள்ளமாட்டார்களாம்.

 

ஊழி என்று சொல்லப்படும் நீண்ட காலங்கள் பெயர்ந்து கொண்டிருந்தாலும், அவற்றால் ஏற்படும் கால நிலை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், சான்றாண்மைக் கடல்கள், அஃதாவது, சான்றாண்மையில் உயர்ந்து நிற்போர், தங்கள் குணங்களை ஒரு போதும் மாற்றிக் கொள்ளமாட்டார்களாம்.

 

சரி, அப்படிச் சான்றாண்மைக் கடல்கள் கொஞ்சம் மாறிவிட்டால்?

 

இந்த உலகம் அழிந்து போகுமாம்! ஏதோ, அவர்களில் சிலர் இருப்பதனால் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார்.

 

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை. – 990; - சான்றாண்மை

 

சான்றாண்மை குன்றின் = சான்றாண்மைக்கு இலக்கணமாக இருப்பவர்களிடம் அந்தத் தன்மை சற்றே குறையுமாயின்; இரு நிலம் தான் = நாம் இருந்து கொண்டிருக்கும் இந்த நிலம்தான்; பொறை தாங்காது = அந்தக் கொடுமையென்னும் பாரம் தாங்காது அழியும்; சான்று அவர் = அது அழியாமல் இருக்கிறது என்றால் இன்னும் அவர்களில் சிலர் இந்தப் பூலகில் எங்கேயோ இருந்து கொண்டு இந்த உலகத்தினைக் காக்கிறார்கள்.

 

மன் – ஒழியிசை; ஓ – அசை.

 

சான்றாண்மைக்கு இலக்கணமாக இருப்பவர்களிடம் அந்தத் தன்மை சற்றே குறையுமாயின், நாம் இருந்து கொண்டிருக்கும் இந்த நிலம்தான், அந்தக் கொடுமையென்னும் பாரம் தாங்காது அழியும். அது அழியாமல் இருக்கிறது என்றால் இன்னும் அவர்களில் சிலர் இந்தப் பூலகில் எங்கேயோ இருந்து கொண்டு இந்த உலகத்தினைக் காக்கிறார்கள்.

 

பொறை என்றால் பொறுமை, பாரம் தாங்கும் தன்மை. பொறையைக் குறித்து நாம் பலமுறை சிந்தித்துள்ளோம். காண்க 18/12/2022.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page