top of page
Search

எனைத்து நினைப்பினும் ... 1208, 1209, 15/03/2024

15/03/2024 (1105)

அன்பிற்கினியவர்களுக்கு:

ஒரு ராஜா, இவர் இருபத்தி நானூறாம் புலிகேசி!

அவர் தினம் தோறும் ஏதாவது ஒரு நீச்சல் குளத்திற்குப் போய் குளிப்பார். அதற்காக அந்த நாட்டில் எங்கு திரும்பினாலும் அவருக்குக் குளம் வெட்டி வைத்திருப்பார்கள்.

 

ஒரு நாள் ஒரு குளத்திற்குச் சென்ற போது அந்தக் குளத்தின் அருகே ஒரு பிச்சைக் காரன் அமர்ந்து நன்றாக வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான். நம்ம புலிகேசிக்கு யாராவது மகிழ்ச்சியாக இருந்தால் பிடிக்காது.

 

அவனை அழைத்தார். எதற்காக இப்படிச் சிரிக்கிறாய்? என்று வினவினார்.

 

ஐயா, எனக்கு ஒரு கணவு. அந்தக் கணவில் நான் ஒரு வணிகன். என் வணிகம் என்னவென்றால் இந்த நீச்சல் குளங்களில் குளிப்பவர்களிடம் பயணர் கட்டணம் வசூலிப்பது. வருவாயோ பல மடங்கு. கணக்குப் பார்த்தபோது அஃது பல கோடியைத் தாண்டிவிட்டது. அதைப் பாதுகாக்க ஒரு பெரிய குளம்தான் வெட்ட வேண்டும் என நினைத்தேன். சிரித்தேன் என்றானாம்.

 

அதைக் கேட்ட புலிகேசிக்குக் கோபம் தலைக்கேறியது. நீ சம்பாதித்தப் பணத்தை அரசுக்குச் செலுத்தவில்லையா? என்றார்.

 

அவனுக்குத் தலை சுற்றியது. இல்லைங்க ராஜா என்றான் பரிதாபமாக.

 

இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள். என்ன ஒரு ஊழல்! கணவில்கூட என்னால் ஊழலைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது!

 

இது நிற்க.

 

அவள்: நல்ல வேளை, இந்த இருபத்தி நானூறாம் புலிகேசி மாதிரி இல்லை என்னவர். நான் அவரை எவ்வளவு நினைத்தாலும் என்னைத் தண்டிக்க மாட்டார். இதுவே ஒரு சிறப்புதானே!

  

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு. – 1208; - நினைந்தவர் புலம்பல்

 

எனைத்து நினைப்பினும் காயார் = என்னவர், அவரைக் குறித்து என்ன நான் கணவு கண்டாலும் என்னைத் தண்டிக்க மாட்டார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ? = என்னவர் எனக்குச் செய்யும் உதவி அந்த அளைவிற்குப் பெரியது இல்லையா?

 

என்னவர், அவரைக் குறித்து என்ன நான் கணவு கண்டாலும் என்னைத் தண்டிக்க மாட்டார். என்னவர் எனக்குச் செய்யும் உதவி அந்த அளைவிற்குப் பெரியது இல்லையா?

 

கிண்டலாகத் தாக்குகிறாள்.

 

இணைந்திருந்தபோது சொல்லிய ஆசை வார்த்தைகளை நினைவு கூறுகிறாள்…

 

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது

வேதம் ஓது… கவிஞர் கங்கை அமரன், சூரசம்ஹாராம், 1988

 

இவற்றையெல்லாம் பேசிவிட்டு 

இப்போது எங்கோ சென்றுள்ளார் என்னைத் தவிக்கவிட்டு …

 

விளியும் இன்னுயிர் வேறல்லம் என்பார்

அளியின்மை ஆற்ற நினைந்து. – 1209; - நினைந்தவர் புலம்பல்

 

அளி = அன்பு, இரக்கம், காதல்; அளியின்மை = இரக்கமில்லாத் தன்மை; விளியும் = சாகும், நிங்கும்; ஆற்ற = அதிகமாக, பெரிதாக

அளி இன்மை ஆற்ற நினைந்து = பிரியப் போகிறேன் என்ற அந்த இரக்கமில்லாச் செயலை மனத்திற்குள் அதிகமாக நினைத்துக் கொண்டே; விளியும் இன்னுயிர் வேறு அல்லம் என்பார் = இதோ இந்த உடலைவிட்டு நீங்கிக் கொண்டேயிருக்கும் என் இன்னுயிரும்  அவர் உயிரும் வேறல்ல என்பார்.

 

பிரியப் போகிறேன் என்ற அந்த இரக்கமில்லாச் செயலை மனத்திற்குள் அதிகமாக நினைத்துக் கொண்டே, இதோ இந்த உடலைவிட்டு நீங்கிக் கொண்டேயிருக்கும் என் இன்னுயிரும்  அவர் உயிரும் வேறல்ல என்பார்.

 

என்றார் என்று கடந்தகால வினை முற்றைக்கூட பயன்படுத்த மனம் வரவில்லை அவளுக்கு! பிரிவு நிரந்தரமில்லை என்ற உண்மையும் அவளுக்கு அடிமனத்தில் இருக்கத்தானே செய்யும்.

 

ஆதலினால் என்பார் என்கிறாளோ? அவர் திரும்பி வந்தவுடன் அவ்வாறு மீண்டும் சொல்வாரோ? இதோ, வந்து கொண்டே இருப்பார் என்று நினைக்கிறாளோ?

 

இலக்கணக் குறிப்பு:

 

பாடலில் இடம்பெறும் சொல்களை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் சில சமயம் பொருள் சரியாக அமையாது. அப்போது, சொல்களை இங்கும் அங்குமாக மாற்றிப் பொருள் கொள்ள வேண்டியிருக்கும். இதற்குப் பொருள்கோள் முறை என்கிறார்கள். இது பல வகையாம். நேரம் வாய்க்கும்போது விரிக்கலாம் என்றார் ஆசிரியர்.

 

மேலே கண்ட உரைக்கு எனது பொருள்கோள் முறை:

அளி இன்மை ஆற்ற நினைந்து விளியும் இன்னுயிர் வேறு அல்லம் என்பார்.

 

இந்தக் குறளுக்கு அறிஞர் பெருமக்கள் பொருள்கோள் முறை:

வேறு அல்லம் என்பார் அளி இன்மை ஆற்ற நினைந்து என் இன்னுயிர் விளியும். 

 

புலவர் குழந்தை: முன்பு நாம் இருவரும் வேறல்லேம் என்று சொன்னவருடைய அருளின்மையை மிகவும் நினைந்து எனது இனிய உயிர் கழிகின்றது.

 

புலவர் புலியூர்க் கேசிகன்: ‘நாம் இருவரும் வேறானவர் அல்லேம்’ என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என் இனிய உயிரும் அழிகின்றதே.

 

பேராசிரியர் சாலமன் பாப்பையா: நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.

 

உங்களின் கருத்து என்ன?

 

நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




 

Post: Blog2_Post
bottom of page