top of page
Search

என்னும் செருக்கு ... 180, 201, 598, 613, 860, 1193, 844, 346

18/11/2023 (987)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

புறங்கூறாமைக்கு அடுத்துப் பயனில சொல்லாமை. இந்த அதிகாரத்தில் உள்ள குறள்களை நாம் முன்பே சிந்தித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து தீவினை அச்சம்.

 

இல்லறத்தில் இருப்பவர்கள் முதலில் மனம், மொழி, மெய்களைச் செம்மைப் படுத்த வேண்டும் என்பதால் இல்வாழ்க்கை (5), வாழ்க்கைத் துனை நலம்(6), புதல்வரைப் பெறுதல் (7), அன்புடைமை (8), விருந்தோம்பல் (9), இனியவைக் கூறல் (10), செய் நன்றியறிதல் (11), நடுவு நிலைமை (12), அடக்கமுடைமை (13), ஒழுக்கமுடைமை (14) முடிய பல அறக் கருத்துகளை நேர்முகமாகச் சொன்னார்.

 

அதனைத் தொடர்ந்து இல்லறத்தையே சீர் குலைக்கும் மனப் பிறழ்வைத் தவிர்க்க பிறனில் விழையாமையை (15) மிகத் தெளிவாக அழுத்திச் சொன்னார்.

 

மனம் ஒரு நிலையில் இருக்காது. கொதி நிலைக்குத் தள்ளும் நிகழ்வுகள் நிகழத்தான் செய்யும். எந்த ஒரு நிலையிலும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்பதால் பொறையுடைமை (16) என்றார்.

 

அடுத்து மனம் மொழி, மெய்யால் விலக்க வேண்டியனவாகிய அழுக்காறாமை (17), வெஃகாமை (18), புறங்கூறாமை (19), பயனில சொல்லாமை (20) உள்ளிட்டவற்றைச் சொன்னார்.

 

முதலில் “அறம் செய்ய விரும்பு” என்று நம் ஔவைப் பெருந்தகைச் சொன்னாற் போல முதலில் விரும்ப வேண்டும். “அறம் செய்” என்று சொல்லவில்லை. அதற்கான வித்தை விதை. அது உன்னை அடுத்த அடுத்த நிலைகளுக்கு இட்டுச் செல்லும் என்பது பொருள்.

 

அதே போல “பழிக்கு அஞ்சு”. முதலில் தீயச் செயல்களைச் செய்யப் பயப்படுங்கள். இது ஒன்றே நம்மைக் காக்கும் ஆயுதம் என்பதால் தீ வினை அச்சம் (21) என்ற அதிகாரத்தை வைக்கிறார்.

 

நம்மினும் கீழோரை நோக்கி அம்மா பெரிதென்று அக மகிழ்க! என்று ஒரு சொலவடை உண்டு. நாம் எப்போதும் மேல் நோக்கியே கை ஏந்திக் கொண்டு இருக்கிறோம்.   நம்மை நோக்கி நீளும் கைகளும் இருக்கின்றன. அவற்றைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லார்க்கும் உண்டு. இதனால் ஒப்புரவு அறிதல் (22). கொடுத்துப் பழக வேண்டும் என்பதால் ஈகை (23). கொடுத்தவர்கள் என்றும் வாழ்வார்கள். ஆகையால், புகழ் (24) என்று வைத்து நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக் கொண்டே வருகிறார். அடுத்து பற்றுகளை விலக்கி மேலும் உயர துறவறவியல் ஆரம்பமாகிறது.

  

நம் பேராசான் ஏழு குறள்களில் “என்னும் செருக்கு” என்று முடிக்கிறார். அதில் ஆறு குறள்களில் ஒருவர்க்கு இருக்க வேண்டிய ஆறு செருக்குகளைச் சொல்கிறார். அஃதாவது, அப் பண்புகள் அமைவது பெருமை என்கிறார்.

ஒரு குறளில் மட்டும் புல்லறிவாண்மை என்னும் தவிர்க்க வேண்டிய வீண் பெருமையச் சொல்கிறார்.

இவை ஏழும்தாம் நம் பேராசானின் ஏழு கட்டளைகள் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

 

1.     பிறர் பொருள் வேண்டாமை என்னும் செருக்கு

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு.”  குறள் 180; அதிகாரம் - வெஃகாமை

2.     தீவினைகளைக்கு அஞ்சுவது என்னும் செருக்கு

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை யென்னுஞ் செருக்கு.” --- குறள் 201; அதிகாரம் – தீவினையச்சம்

3.     இந்த உலகத்திற்கு நாமும் ஒரு பயனுள்ளவன் என்னும் செருக்கு

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு.” --- குறள் 598; அதிகாரம் – ஊக்கம் உடைமை

4.     பிறரை உயர்த்த உழைக்கும் செருக்கு

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னும் செருக்கு.” --- குறள் 613; அதிகாரம் – ஆள்வினை உடைமை

5.     நட்பினால் உயர்வு எனும் பெருமை வரும் என்னும் செருக்கு

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்

நன்னயம் என்னும் செருக்கு.” --- குறள் 860; அதிகாரம் – இகல்

6.     நாம் விரும்புபவர்கள் நம்மை விரும்புதலால் வாழ்கிறோம் என்னும் செருக்கு

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே

வாழுநம் என்னும் செருக்கு.” --- குறள் 1193; அதிகாரம் - தனிப்படர் மிகுதி

7.     தவிர்க்க வேண்டியது: எனக்கு எல்லாம் தெரியும் என்னும் செருக்கு

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு.” --- குறள் 844; அதிகாரம் – புல்லறிவாண்மை

 

இன்னுமொரு குறளில் “என்னும் செருக்கு” என்றத் தொடரை முதல் அடியில் பயன்படுத்துகிறார். அது துறவறவியலில். எல்லாச் செருக்கையும் விட்டுவிடுங்கள் என்னும் பொருளில்!

 

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.” --- குறள் 346; அதிகாரம் – துறவு


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page