top of page
Search

எப்பொருள் யார்யார்வாய் ...423, 646

29/04/2023 (786)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

“கோள்” என்பது பல்பொருள் ஒரு மொழி. அதாவது, அந்தக் கோள் என்னும் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கின்றன.

கோள் என்றால் கிரகம் (planet), புறம் பேசுவது (குறளை), கோட்பாடு, துணிபு, முடிவு ... இப்படி பல பொருள்கள் இருக்கின்றன.


விடுவது வீடு, படுவது பாடு, கெடுவது கேடு என்பது போல கொள்ளுவது கோள்.


நம் பேராசான் “கோள்” என்னும் சொல்லை எட்டு முறை பயன்படுத்தியுள்ளார். பெரும்பாலும், முடிபு, துணிபு என்ற பொருளிலேயே பயின்று வருகின்றது.

மூன்று குறள்களில் “மாசு அற்றார் கோள்” என்று முடிக்கிறார். அதில் நாம் பார்த்துள்ள ஒரு குறள் மீள்பார்வைக்காக காண்க 14/04/2023 (771).


வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.” --- குறள் 646; அதிகாரம் – சொல்வன்மை


கோள் என்பதே ஆராய்ந்த தெளிவு. இதனை, ஆங்கிலத்தில் Thesis (கோட்பாடு, முடிவு) என்பார்கள். வள்ளுவப் பெருமான் சொல்வது எல்லாமுமே முடிவுகள்தான்!


ஒவ்வொரு கோட்பாட்டிற்கும் (thesis) ஒரு எதிர்க் கோட்பாடு (anti thesis) உருவாகும். அந்தக் கருத்து மோதலில், ஒரு கருத்தொற்றுமை நிகழும். அதனை, ஆங்கிலத்தில் Synthesis (புதியக் கோட்பாடு) என்பார்கள். இந்தப் புதியக் கோட்பாடு, இப்போது thesis (கோட்பாடு) ஆகிவிடும். இவ்வாறுதான் நம் சிந்தனைகளில் தெளிவு நாள்தோறும் நடக்கும். இந்த முறையை Hegellian Dialectics என்று மேலை நாடுகளில் அழைக்கிறார்கள். இந்த முறை ஹெகெல் பெருமானார் (Hegel) என்ற தத்துவ அறிஞரின் பெயரால் வழங்கப்படுகிறது. ஹெகெல் பெருமானார் பதிணெட்டாம் நூற்றாண்டில் செருமானிய நாட்டில் (Germany) பிறந்தவர்.


Dialectical method என்பதை, தமிழில், ‘முரண்தருக்க முறை’ அல்லது ‘நியாயவாதம்’ என்கிறார்கள். அதாவது, வாத எதிர்வாத உரையாடல்களின் மூலம் ஒரு முடிவினை அடைவது.

திருக்குறள்களில் உள்ள அனைத்து அதிகாரங்களுமே இவ்வாறே அமைந்துள்ளதை நாம் சற்று கூர்ந்து நோக்கினால் தெளிவடையலாம்.


சரி, இன்றைக்கு ஏன் இந்தச் செய்திகள் என்கிறீர்களா? இரு காரணங்கள். ஒன்று: அடுத்து நாம் பார்க்கப் போகின்ற குறளை “ஆய்ந்தவர் கோள்” என்று முடிக்கிறார் நம் பேராசான்.

இரண்டு: நாம் தமிழ் இலக்கியங்களை, அது ஏதோ ஒரு மொழி குறித்தன என்று ஒதுக்கிவிட்டதன் விளைவைச் சிந்தித்ததால் எழுந்த எண்ண ஓட்டங்கள்.


சாக்ரடீசு பெருமானார் சிறந்த தத்துவ அறிஞர் என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். அவர் ஏதேனும் நூல்களை இயற்றித் தந்துள்ளாரா என்று பார்த்தால் நமக்கு கிடைப்பது ஒன்றுமில்லை. அதனால், நாம் அவரை குறைத்து மதிப்பிடமுடியாது.

“ஏன் என்று கேள், எதற்கு என்று கேள், எவரிடமும் தயங்காமல் கேள்” என்ற மாபெரும் அறிஞர் அவர்! அவரின் பெயரிலேயே Socratic method of teaching (சாக்ரட்டீசு வழி கற்கும் முறை) என்ற வழிமுறை உருவாகியுள்ளது.


நம் பேராசான் சொல்லியுள்ள ஒரு குறளைப் பார்ப்போம்.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.” --- குறள் 423; அதிகாரம் – அறிவுடைமை


கேட்பது மட்டுமல்ல மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று இறுதிப் படியையே காட்டியுள்ளார் நம் பேராசான்.


இம்மாதிரி கருத்துகள் திருக்குறளில் பல இருப்பினும் ஏன் இது உலகளாவிய அளவில் பயன்பாட்டில் இல்லை என்பது நம் மனத்தை உலுக்கும் கேள்வி.


அதற்கு என்ன பதில் என்றால், நாம் எதைப் பாராட்டுகிறோமோ அது வளர்கிறது என்பதுதான். நாம் நமக்களித்த கொடைகளைப் போற்றி பாராட்டுவதில்லை!


நம் கொடைகள் பறிக்கப்பட்டு, நாம் எல்லா இடத்திலும் ஏங்கிக் கொண்டுள்ளோம்.


ம்ம்...இப்படி நீண்டு கொண்டே போகின்றது என் எண்ண ஓட்டம்.


இது நிற்க. நாளைத் தொடர்வோம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






Post: Blog2_Post
bottom of page