top of page
Beautiful Nature

ஏந்திய கொள்கையார் ... குறள் 899

26/05/2022 (454)

குணமென்னும் கொள்கை குன்றேறி நின்றது மட்டுமல்லாமல், அந்த கொள்கைகளை, விரதங்களை, தவங்களை எப்போதும் கைவிடாமல் ஏந்தி நிற்கும் பெரியார்கள் மேலும் சிறப்பானவர்கள்.


சிலர், அரும்பெரும் தவத்தினால் உயர்ந்த நிலை அடைந்து விடுவார்கள். அவ்வாறு, அடைந்தபின் பிறவிக் குணமாகிய காமம், கோபம் தலைதூக்க தடுமாறி விடுவார்கள். அவ்வுயர்ந்த நிலையில் இருந்து இறங்கிவிடுவார்கள்.


உலகியல் வழக்கிலேகூட, கடுமையாக பயின்று ஒரு உயர் பதவியை அடைந்தபின், அங்கே அவர்கள் செய்யும் சிறு தவறுகள் அவர்களை அந்தப் பதவியில் இருந்து இறக்கிவிடும்.


அவ்வாறில்லாமல், ஏந்திய கொள்கையில் எப்போதும் சமரசமில்லா அருந்தவம் இயற்றிக் கொண்டிருக்கும் பெரியார்கள் சீறினால், எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கும் வேந்தர்களும் அவர்களின் பதவி இடையிலேயே பறிக்கப்பட்டு கெடுவார்கள் என்கிறார் நம் பேராசான்.


ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

வேந்தனும் வேந்து கெடும்.” --- குறள் 899; அதிகாரம் – பெரியாரைப் பிழையாமை


ஏந்திய கொள்கையார் சீறின் = குணக்குன்றுகளாகவே எப்போதும் ஏந்திய கொள்கையோடு இருக்கும் பெரியார்களின் மனம் மாறுபட்டால்;

வேந்தனும் இடை வேந்து முறிந்து கெடும் = பெரிய வேந்தர்கள் ஆயினும் அவர்களின் பதவி இடையிலேயே பறிக்கப் பட்டு கெடுவார்கள்.


இந்தக் குறளில் கவனிக்க வேண்டிய ஒரு நயம் இருக்கிறது. நம் பேராசான் போட்டிருக்கும் வார்த்தை “சீறின்”. வெகுளி, கோபம் என்றெல்லாம் போடாமல் “சீறின்” என்று போட்டிருக்கிறார்.


உங்களுக்கெல்லாம் தெரிந்தக் கதைதான். ராமகிருஷ்ண முனிவரிடம் ஒரு பாம்பு கேட்டதாம். ஏன் என்னை எல்லோரும் வெறுக்கிறார்கள், அடிக்கிறார்கள் என்று. அதற்கு பரமஹம்ச பெருமான், நீ அவர்களைத் தீண்டுவதால், தீண்டிவிடுவாய் என்ற பயத்தினால் உன்னைக் கண்டவுடன் கம்பெடுத்து அடிக்கிறார்கள். நீ அவ்வாறு செய்யாமல் இருந்தால் உன்னை யாரும் அடிக்க மாட்டார்கள் என்றாராம்.


சரியென்று, அந்த பாம்பும் அவ்வாறே யாரையும் தீண்டுவதில்லை என்ற முடிவோடு இருந்ததாம். இதைக் கவனித்த மக்கள், இப்போது அதனை கம்பெடுத்து அடிப்பதை விட்டு விட்டு, அதன் வாலையே பிடித்து சுழற்றி சுழற்றி விளையாட ஆரம்பித்து விட்டார்களாம். அந்தப் பாம்பு மிகவும் நொந்துப் போய் மீண்டும் ராமகிருஷ்ண முனிவரிடம் முறையிட்டதாம். அதற்கு அவர், உன்னைத் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன். சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே என்றாராம்!


பெரியார்கள் சீறுவதற்கே வேந்து கெடும் என்றால் உண்மையில் வெகுண்டால் என்ன ஆகும்?


மேற்கண்ட நான்கு பாடல்கள் மூலம் நம் பேராசான், தவத்தால் உயர்ந்த பெரியார்களைப் பிழையாமைக் கூறியுள்ளார். முடிவுரையாக என்ன சொல்லப் போகிறார் என்று நாளை பார்க்கலாம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )



ree



 
 
 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page