top of page
Search

கூடிய காமம் ... 1264, 17/04/2024

17/04/2024 (1138)

அன்பிற்கினியவர்களுக்கு:

வரல் நசைஇ இன்னும் உளேன் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் என்றாள் குறள் 1263 இல்.

 

இது இருக்கட்டும். நாம் தேவாரப் பாடல் ஒன்றைப் பார்க்கலாம்.

 

தஞ்சைக்கு மிக அருகில் திருவையாறு என்ற ஓர் ஊர்.  அங்கே, பழமை வாய்ந்த ஐயாரப்பன் கோவில், காவேரிக் கரையில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலின் அருகில் காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வட்டாறு, வடவாறு என்ற ஐந்து ஆறுகள் உள்ளன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி பெருமான் ஆகியோரால் பாடப் பெற்ற கோவில்.

 

இந்தக் கோவில், பரப்பளவில் தஞ்சை பெரிய கோவிலைவிட மூன்று மடங்கு பெரியது. ஐந்து பிரகாரங்கள் கொண்ட மிகப் பெரிய கோவில். இதில் மூன்றாம் பிரிகாரம் சிறப்பு வாய்ந்தது. நெடிய மதில் சுவர்கள் செங்குத்தாகக் கட்டப்பட்டிருக்கும். இங்கே, தென் மேற்கு மூலையில் இருந்து கொண்டு ஒலி எழுப்பினால், அந்த ஒலி ஏழு முறை எதிரொலிக்கும் வகையில் அமைக்கப் பெற்றுள்ளது. வடிவமைத்துக் கட்டிய வல்லவர்களை ஆச்சரியத்துடன்தான் பார்க்க வேண்டும்.

 

‘ஐ’ என்றால் தமிழில் கபம் என்ற பொருளும் உண்டு. மனிதனின் இறுதிக் காலம் இரு வகையில் நிகழும். அவற்றுள், பெரும்பாலும் கபம் என்னும் சளி அடைக்க நிகழும். மற்றொன்றைப் பின்னொரு நாளில் பார்ப்போம்.

 

புலன் ஐந்தும் கலங்கி கபம் சென்று மூச்சுக் குழாயை அடைத்துவிடுமோ என்று பயப்படும் பொழுது “அஞ்சேல் நான் இருக்கிறேன்” என்று சொல்வாராம் இங்கே அமர்ந்து இருக்கும் ஐயாரப்பன்.

 

இந்தக் கோவிலின் பிரகாரத்தில் மங்கையர்கள் நடனமாடுவார்களாம். அந்த நடனத்திற்கு ஏற்றார்ப்போல முழவு என்னும் தோல் இசைக் கருவியைக் கொண்டு அந்த இடம் அதிர ஒலி எழுப்புவார்களாம். அந்த ஒசை இடியோசை போல இருக்குமாம்.

 

அப்பொழுது, ஏதோ பெருமழைதான் வரப் போகிறது; தங்களைக் கொண்டு செல்லப் போகிறது என்று அஞ்சி சில குரங்குகள் பயந்து மரத்தின் நுனிக் கிளைக்கு ஏறிச் சென்று வானத்தை அண்ணாந்து பார்க்குமாம் என்று திருவையாறை வர்ணிக்கிறார் திருஞான சம்பந்தர் பெருமான்.

 

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி

அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்

வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்

சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே. – தேவாரம் முதலாம் திருமுறை, திருஞான சம்பந்தர்

 

அது என்ன சில மந்தி (குரங்கு) என்று சொல்லியிருக்கிறார் என்றால் அந்தக் குரங்குகள் ஊருக்குப் புதிதாம்! அவற்றுக்குத் தெரியாதாம் இது தினமும் நடக்கும் நிகழ்வு என்பது!

 

சரி, இதற்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்?

 

அவர் வர வேண்டுமே என்ற பரபரப்பு. அவளுக்கு நெஞ்சு அடைக்கிறதாம். புதிதாக மணம் முடித்தவள் அல்லவா? இதுதான் முதல் பிரிவு! 

 

“அது எப்பவும் திரும்ப வரும்” என்பது அவளுக்குப் போகப் போகத் தானே தெரியும்! அந்தப் புது குரங்குகள் போல மரத்தின் மேல் ஏறி அவளின் நெஞ்சம் பார்க்கிறதாம்! (போகப் போக பழகிவிடும்.)

 

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்

கோடுகொ டேறுமென் நெஞ்சு. – 1264; - அவர்வயின் விதும்பல்

 

கோடு = கிளை; கொடு = கொண்டு – சுருங்கி வந்துள்ளது;

 

கூடிய காமம் = காதல் மிக்கூற; பிரிந்தார் வரவு உள்ளி = பிரிந்து சென்றவரின் வரவை எதிர்நோக்கி; என் நெஞ்சு கோடு கொடு ஏறும் = மரத்தின் கிளைகளைப் பற்றிக் கொண்டு உச்சிக்குத் தாவி ஏறி நின்று பார்க்கிறதே.

 

காதல் மிக்கூற, பிரிந்து சென்றவரின் வரவை எதிர்நோக்கி, என் நெஞ்சம் மரத்தின் கிளைகளைப் பற்றிக் கொண்டு உச்சிக்கு ஏறி நின்று பார்க்கிறதே.

 

என்ன ஒரு கற்பனை!

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




 

Post: Blog2_Post
bottom of page