top of page
Search

கெடுவல்யான் ... 116, 117

29/09/2023 (937)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

நடுவுநிலைமை தவறும் எண்ணம் தோன்றுவது என்பது நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. பாதை மாறுகிறோம்; வழுக்குப் பாறையில் காலை வைக்கிறோம் என்பதுதான் அந்த எச்சரிக்கை.


உடனே பின்வாங்க வேண்டும். அதனைச் சரி செய்ய வேண்டும்.

நூலறுந்தக் காற்றாடி போல மனம் நம்மைவிட்டு விலகும். கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும் போதே அதனை ஒரே தாவாகத் தாவிப் பிடித்துவிட வேண்டும் என்கிறார் நம் பேராசான்.


கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.” --- குறள் 116; அதிகாரம் – நடுவுநிலைமை


தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் = தன் நெஞ்சம் நடுவு நிலைமைத் தவறிச் சிந்திக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக = தாம் அழிந்துவிடுவோம் என்பதற்கு அது ஒரு எச்சரிக்கை மணி என்பதை அறிக.


தன் நெஞ்சம் நடுவு நிலைமைத் தவறிச் சிந்திக்குமாயின் தாம் அழிந்துவிடுவோம் என்பதற்கு அது ஒரு எச்சரிக்கை மணி என்பதை அறிக.


“செயின்” என்பது மனத்தால் நினைப்பதைக் குறிக்கும்.


நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் என்கிறார் பரிமேலழகப் பெருமான்.


எதையுமே நாம் இருமுறை செய்கிறோம். ஒரு முறை மனத்தில்; அதனைத் தொடர்ந்து செயலில். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றார் குறள் 34இல். காண்க 15/02/2021 (29). அங்கேயே பிடித்துவிட வேண்டும்.


நடுவுநிலைமையைக் கைக்கொள்வதால் தாழ்வு சிலபோது வரலாம். ஏச்சுகளும் பேச்சுகளும் நம்மைச் சுற்றி எழலாம். கையால் ஆகாதவன் என்றும் ஏளனம் எழலாம். இருப்பினும் வரலாறு நம்மை கனிவோடுதான் பார்க்கும்.


" History will be kinder to me than contemporary media and opposition" – மன்மோகன் சிங் (Manmohan Singh).


“History will be kind to me for I intend to write it” என்றார் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill).


நடுவுநிலைமைத் தவறாமல் இருப்பதால் எழும் கண்டங்களைக் காலம் கருணையுடன் கவனித்துக் கழித்துவிடும்.


கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.” --- குறள் 117; அதிகாரம் – நடுவுநிலைமை


நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு = நடுவுநிலைமையோடு நண்மை எது என்று அறிந்து அதன் வழி நின்றவனின் தாழ்ச்சி(யை); கெடுவாக வையாது உலகம் = ஒரு தாழ்வாகப் பார்க்காது இவ் உலகம்.


நடுவுநிலைமையோடு நண்மை எது என்று அறிந்து அதன் வழி நின்றவனின் தாழ்ச்சியை ஒரு தாழ்வாகப் பார்க்காது இவ் உலகம்.


வரலாற்றின் பக்கங்கள் நம்மை வருடிக் கொடுக்கட்டும்!


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.






Post: Blog2_Post
bottom of page