top of page
Search

கொல்லாமை மேற்கொண்டு ... 326

16/01/2024 (1046)

அன்பிற்கினியவர்களுக்கு:

உயிர் என்பது நம் உடல் இயங்கும் வரை நம் உடலில் இருக்கும். நம் உடல் இயங்க மறுக்கும் நிலையில் உயிர் வெளியேறும். உயிர் உள்ளே இருக்கிறதா? அல்லது,  வெளியே இருக்கிறதா என்ற நிலை, சில சமயம், எல்லார்க்கும் வரலாம்.

கர்ணனைக் குறித்துச் சிந்தித்தபோது கண்டோம். காண்க 18/07/2022.

 

ஆவியோ நிலையின் கலங்கியது; யாக்கை அகத்ததோ? புறத்ததோ? அறியேன் --- பாடல் 240, பதினேழாம் போர்ச்சருக்கம், வில்லி பாரதம்

 

கர்ணன் செய்த அறச் செயல்கள், உயிரை நீக்கவிடாமல் தடுத்தன.

 

இப்படியெல்லாம் நிகழ்ந்திருக்குமா? இது பகுத்தறிவிற்கு ஏற்றுக் கொள்ளும்படி இல்லையே என்ற கேள்விகளெல்லாம் எழலாம். இவற்றைக் குறிப்புகள் என்று பாருங்கள். கர்ணனின் உயிர், புகழ் உடலில் நீடித்து இருக்கும் என்பது குறிப்பு.

 

திரையில் “ஒரு அடி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா” என்று சொன்னால் நமக்குத் தெரியும் அது மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட வசனம் என்று! அதுபோலதான். கர்ணனின் கொடையை காட்சிப்படுத்துகிறார்கள். நாம் அந்தக் கொடைக் குணத்தைக் கடைபிடிக்க வேண்டும். அவ்வளவே.

 

நாமும் கர்ணன் போல ஆகலாமாம். கொல்லாமையைக் கொண்டு ஒழுகுவார்க்கு உயிர் பாதுகாப்பு உண்டாம்!

 

வாழ்நாள் என்பது இருவகை. ஒன்று நாம் நம் உடலோடு இருக்கும் காலம்; மற்றொன்று நாம் மறைந்த பின்னும் புகழோடு இருக்கும் காலம். மறைந்தபின் மறக்கப்பட்டோம் என்றால் நாம் இந்த உடம்போடு வாழ்ந்துதான் என்ன பயன்?

 

வாழ்நாள் என்பது வினைத்தொகையுமாம்.

 

கொல்லாமையைக் கடைபிடித்தால் என்றும் நீடித்து நிலைப்பர் என்கிறார். அது எப்படி என்று கேட்டால், கடைபிடித்துப் பாருங்கள் உங்களுக்கே அது விரைவில் புரியும்.

 

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லா துயிருண்ணுங் கூற்று. – 326; - கொல்லாமை

 

கூற்று = முடிவு; கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் = பிற உயிர்களைக் கொல்லாமை என்னும் நெறியை மேற்கொண்டு வாழ்பவரின்; உயிர் உண்ணும் கூற்று வாழ்நாள் மேல் செல்லாது = உயிரை மறக்கச் செய்யும் செயல் அவரிடம் செல்லாது.

 

பிற உயிர்களைக் கொல்லாமை என்னும் நெறியை மேற்கொண்டு வாழ்பவரின் உயிரை மறக்கச் செய்யும் செயல் அவரிடம் செல்லாது.

 

தேடிச் சோறு நிதம் தின்று

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

கொடுங் கூற்றுக்கு இரையெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே -

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? --- மகாகவி பாரதி

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page