top of page
Search

குழல் இனிது யாழ் இனிது ... 66

05/09/2023 (913)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

செவிக்கு இனிமை கொடுக்கும் தொனி நாதம்; நாதத்திலிருந்து உருவாவது பண். பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது தாளம்.

பண்ணும் (சுருதி) தாளமும் (லயம்) இணைந்தால் இசை பிறக்கிறது. எனவே இவ்விரண்டையும் இசையின் தாயும் தந்தையும் என்பது தமிழ் மரபு.


இசையை மிடற்றிசை என்றும் கருவி இசை என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். மிடறு என்பது தொண்டை. அஃதாவது ஓசையெழுப்பும் கண்ட உருப்பு. மிடற்றிசை என்றால் குரலிசை. கருவி இசை என்றால் கருவிகளைக் கொண்டு இசையை உருவாக்குவது.


இசைக் கருவிகளையும் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாள இசைக் கருவிகள் என்றும் பகுக்கிறார்கள். அஃதாவது, ஒன்று இசையையே உருவாக்கும்; மற்றொன்று அந்த இசையை மேலும் செறிவூட்டும்.


இசை எழுப்பும் வாயில்களை வைத்து இசைக் கருவிகளை நான்கு விதமாகப் பகுக்கிறார்கள். அவையாவன: 1. துளைக் கருவி; 2. நரம்பிசைக் கருவி; 3. தோற் கருவி; 4. கஞ்சகக் கருவி.


துளைக் கருவியும் நரம்பிசைக் கருவியும் இசையையும் உருவாக்கும், அதனை செறிவூட்டவும் பயன்படும். தோற்கருவியும் கஞ்சகக் கருவியும் இசையை மெருகூட்டப் பயன்படும்.


அஃதாவது முதல் இரண்டு கருவிகளை இசை முதல் கருவிகள் என்றால் அடுத்த இரண்டு துணைக் கருவிகளாகும்.


துளைகள் மூலம் காற்று வெளியேறுவதைக் கொண்டு இசைக்கும் கருவிகள் துளைக் கருவிகளாகும். நரம்பிசைக் கருவிகள் கை விரல்களின் இயக்கத்தினால் புறக் காற்றினை அசைத்து இசையை உருவாக்கும்.


சரி, என்ன இன்றைக்கு ஒரே இசையாக இருக்கிறது என்கிறீர்களா?


“இசையால் வசமாக இதயம் எது

இறைவனே இசை வடிவம் எனும்போது - தமிழ்

இசையால் வசமாகா இதயமெது ...”


இப்படி அனைவரும் சொல்லும்போது, நம் பேராசான் என்ன சொல்கிறார் என்றால் இவர்கள் எல்லாம் தம் மக்கள் சொல்லைக் கேட்கவில்லையோ என்கிறார்!


குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.” --- குறள் 66; அதிகாரம் – புதல்வரைப் பெறுதல்


குழல் இனிது யாழ் இனிது என்ப = குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்லுவார்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் = தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர்.


குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்லுவார், தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேளாதவர்.


இசைக்கு இலக்கணங்கள் உண்டு. பண்ணுடன் தாளம் இருக்க வேண்டும். அது மட்டுமா அதனுடன் பாவம் இருக்க வேண்டும் பொருள் விளங்க!


ஆனால், இதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல தம் மக்களின் குதலைச் சொற்களைக் கேட்கும் போது!


தம் மக்களின் குதலைச் சொற்கள் எக்காலத்திலும் நினைந்து மகிழத் தக்கன! இசையளிக்கும் அனைத்து இன்பங்களும் தருவது அது. இது தொடரட்டும் என்கிறார்.


தமிழில் பண்ணும் தாளமும் பாவமும் இயைந்து காலம் கடந்து நிற்கும் பாடல்கள் பன்னெடுங்காலமாகவே இருப்பது என்பது சிறப்பு. ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக் கணக்கான நெஞ்சை நெக்குருகச் செய்யும் பாடல்கள் ஏராளமாக அமைந்த ஒரு மொழி தமிழ் என்பது ஒரு தனித்துவம்.


தேவார மூவர் தொடங்கி, மாணிக்கவாசகப் பெருமான் வழி வந்து, அருணகிரிநாதப் பெருமான் பொழிந்து, வடலூர் வள்ளல் பிரான் விரித்து, கம்ப பெருமான் காப்பியமாக்கி, இளங்கோவடிகள் இலக்கியம் சமைத்து, மகாகவி பாரதி காலத்திற்கேற்றார் போல் பகுத்து, அவரின் அடியொற்றிவந்த பாவேந்தர் முதல் இன்றைய கவிஞர்கள் வரை நீள்வதுதாம் தமிழிசையின் தொன்மையும் தொடர்ச்சியும்! இது ஒரு நீண்ட நெடிய பயணமல்லவா?


அதற்கேற்றார்போல் பல இசைக் கருவிகள்! வகையினை விரித்தால் விரியும்!


உதாரணத்திற்கு, யாழ் என்ற இசைக் கருவியை பல்லாண்டுகள் ஆராய்ந்து தண்டமிழின் தவப் புதல்வர் அருள்திரு விபுலானந்த சுவாமிகள் யாழ் நூல் என்னும் இசைத் தமிழ் ஆராய்ச்சி நூலை 1947 இல் வெளியுட்டுள்ளார். அந்த நூல் 550 பக்கங்களுக்கும் மேல் அடங்கிய ஒரு ஆராய்ச்சி நூல். எப்படித்தான் இவர்களுக்கு இயல்கிறதோ தெரியவில்லை! பல பிறப்பு எடுத்து இந்த தமிழ் நிலத்தில் பிறந்துதான் இவையெல்லாம் கற்க முடியுமோ?


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page