top of page
Search

கறுத்தின்னா செய்தவ ...312, 646

09/01/2024 (1039)

அன்பிற்கினியவர்களுக்கு:

கருப்பு, கறுப்பு என்ற இரு சொல்களுக்குள் உள்ள வேறுபாட்டினை தொல்காப்பியச் செம்மல் புலவர் வெற்றியழகனார் “வழக்கமும் விளக்கமும்” என்ற நூலில் விளக்குகிறார்.

 

கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள – தொல்காப்பியம்; சொல்லதிகாரம் 855

நிறத்துரு உணர்த்தற்கு முரிய என்ப - தொல்காப்பியம்; சொல்லதிகாரம் 856

 

கறுப்பு, சிவப்பு என்னும் சொல்கள் சினம், நிறம் என்று இருவகையாக உணர்த்தும் என்கிறார் தொல்காப்பியப் பெருமான்.

 

நிறத்தைக் குறிக்க “கறுப்பு” சரியான சொல் என்பதில் ஐயம் இல்லை.

 

ஆனால், நிறத்தைக் குறிக்க “கருப்பு” என்று பயன்படுத்தலாமா என்பதுதான் வினா?

 

கருப்பு என்றால் “கரும்பு” அல்லது “பஞ்சம்” என்ற பொருளை உணர்த்தலாமாம்!

கருப்பு வில்லோன் காமன் என்று மன்மதனைக் குறிக்கிறார்களாம். கரும்பு என்பது வலித்தல் விகாரமாகி கருப்பு என்று ஆகியதாம்.

 

கருப்பட்டி என்றால் கரிய கட்டி என்று பொருள் எடுக்கக் கூடாதாம். கருப்பட்டி என்கிறோமோ அதனைக் கரும்புக் கட்டி என்றுதான் சொல்ல வேண்டுமாம். கரும்புக் கட்டி திரிந்து இப்போது கருப்பட்டியாக இனிக்கிறது.

 

ஆகையினால், நிறத்தைக் குறிப்பிட்டு எழுதும்போது  “கறுப்பு” என்று எழுதுவது சிறப்பு. கருப்பைத் தவிர்க்க! பாருங்க, “கருப்பை” என்றால் கரு கொண்டிருக்கும் பை (Uterus) என்ற பொருளினைத் தருகிறது. ஆதலாலும், நிறத்திற்குக் “கருப்பு” என்பதைத் தவிர்க்க.

 

சரி, கருத்த மச்சானா? கறுத்த மச்சானா? இங்கேதான் சிக்கல் வருகிறது!

 

“கருத்த மச்சான்” என்றால் கரு நிறத்தில் இருப்பவன் என்றும் பொருள். கரும்பைப் போல் இனிப்பவன் என்றும் பொருள்.

 

ஆனால், “கறுத்த மச்சான்” என்றால் கோபம் கொண்டு இருப்பவன் என்று பொருளாகிவிடும்.

 

கறுத்த மச்சான் வேண்டாம். கருத்த மச்சான்தான் வேண்டும்.

 

“மேகம் கருக்குது; மழை வரப்பார்க்குது” என்று பாடலாம். இங்கே, கரு என்பது நீராவியைப் பெற்று சூல் கொள்கிறது என்றும் பொருள்படுகிறது. வெண்மையான மேகங்கள் கருநிறம் கொள்கிறது என்றும் பொருள்படுகிறது.

 

இப்போது தமிழ் நாடு இருக்கும் நிலைமையில், மேகம் கறுக்குது போல! அதாங்க, மேகம் கறுக்குது என்றால்  கோபப்பட்டு அள்ளிக் கொட்டுது என்று பொருள்படும்.

 

“கறுத்து” என்றால் கோபப்பட்டு, வெகுண்டு, சினந்து என்று பொருள். இங்கே, நிறம் என்ற பொருள் வராதாம்.

 

கருநிறம், கரும்பலகை இதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய பயன்பாடுகளே.

 

முடிவாக: வண்ணத்தைக் குறிக்க “று” வைப் (வல்லினம்) பயன்படுத்தினால் “கறுப்பு, கறுத்த நிறம் அல்லது கறுமை நிறம் என்று எழுதலாம்.

 

“ரு” வைப் (இடையினம்)  பயன்படுத்தினால், தெளிவாகக் “கருநிறம்” அல்லது “கருமை நிறம்” என்று எழுதல் வேண்டும்.

 

சுருக்கமாக:- நிறத்தைக் குறிக்க:

கருப்பு – தவறு; கறுப்பு – சரி; கருநிறம் – சரி; கருமை நிறம் – சரி; கறுமை நிறம் – சரி; கருத்த – சரி; கறுத்த – தவறு.

 

ஆசிரியர் சொன்னதை எனக்குப் புரிந்தவரையில் விளக்கியுள்ளேன். சரி, இந்தக் “கரு – கறு” ஏன் இப்போது என்கிறீர்களா? காரணம் இருக்கு. இதோ வருகிறேன்.

 

இந்தக் கரு – கறு வேறுபாட்டிற்கு நம் பேராசானின் உதாரணங்களைப் பார்க்கலாம்.

 

கருமணி என்று ஓரிடத்திலும் (குறள் 1123), கறுத்த என்று ஓரிடத்திலும் (குறள் 312) நம் பேராசான் பயன்படுத்தியுள்ளார். கருமணி – நிறம்; கறுத்த – சினம்.

 

நம் பேராசான் கருமணியிற் பாவாய் என்கிறார் குறள் 1123 இல். அஃதாவது, கண்ணில் உள்ள கண் பாவையைக் குறிக்கிறார் (Pupil). இது கரிய நிறத்தில் வட்டவடிவில் ஒளி ஊடுருவக் கூடிய துளையாகும். ஒளி சூல் கொண்டு பிம்பங்களைக் குவிப்பதானால் கரு மணி என்றாரா? எப்படியிருப்பினும் “கறுமணி” என்று பயன்படுத்தவில்லை.

 

கொஞ்சம் இந்தக் கண் பாவையைக் குறித்தச் செய்திகளைப் பார்க்கலாம்.

 

மனிதர்களுக்குதான் வட்ட வடிவத்தில் கண் பாவை இருக்குமாம்.

 

பூனைகளுக்குச் செங்குத்து வடிவப் பிளவாகவும் (perpendicular), ஆட்டிற்கு கிடைமட்டப் பிளவாகவும் (horizontal) இப்படிப் பல வகைகளில் கண் பாவை இருக்குமாம். தெரிந்து வைத்துக் கொள்வோம். கருமணியிற் பாவாய் என்று நம்மாளுங்களைத் தவிர வேறு எந்த உயிரையும் குறிப்பிடமுடியுமா என்று தெரியவில்லை. இது நிற்க.

 

கறுத்து என்றால் சினம் என்று குறிக்கிறார் கீழ்காணும் குறளில்:

 

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள். – 312; - இன்னா செய்யாமை

 

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் = பிறர் நம் மீது கோபப்பட்டுத் தீமைகள் பல செய்தாலும்; மறுத்து இன்னா செய்யாமை மாசற்றார் கோள் = அதற்கு இன்னா செய்து மறு பதிலடி தராமல் பொறுத்துச் செல்வதும் மனத்துக்கண் மாசற்றாரின் கோட்பாடு.

 

பிறர் நம் மீது கோபப்பட்டுத் தீமைகள் பல செய்தாலும், அதற்கு இன்னா செய்து மறு பதிலடி தராமல் பொறுத்துச் செல்வதும் மனத்துக்கண் மாசற்றாரின் கோட்பாடாகும்.

 

“மாசற்றாரின் கோட்பாடு” என்று குறிக்கும் குறள்கள் மூன்று என்றும் அதில் மிதமுள்ள இரண்டினை இன்று பார்க்கலாம் என்று ஆசிரியர் சொன்னாரல்லவா அதில் இரண்டாவது குறள்தான் நாம் மேலே கண்ட குறள்.  

 

மூன்றாவது குறளை நாம் ஏற்கெனவே சிந்தித்துள்ளோம். காண்க 07/04/2023. மீள்பார்வைக்காக:

 

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள். - 646; - சொல்வன்மை

 

இன்று கொஞ்சம் நீண்ட பதிவாகிவிட்டது. குறள்களைத் தொடர்புபடுத்தும் பொழுது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. இதுவரை நீங்கள் படித்துக் கொண்டிருந்தால் நீங்கள் மிகவும் பொறுமைசாலி என்று உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்!

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page