top of page
Search

கற்றறிந்தார் கல்வி விளங்கும் ... 717

29/05/2023 (816)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

ஒத்தவர்களிடம் நமது கருத்துகளை விவாதிப்பது நம்மை மேலும் வளர்க்க உதவும். அது, நாம் பாத்தி கட்டி வளர்க்கும் செடிக்குத் தேவையான நீரினைப் பெறுவது போன்றது என்றார் குறள் 718 இல்.


மேலும், நாம் சொல்லும் கருத்துகளைக் கவனமுடன் ஆராய்ந்து, அதில் இருக்கும் குற்றம் குறைகளை நீக்கும் வகையில், ஆர்வமுடன் விவாதிக்கும் ஒத்தவர்கள் அவையில், நாம் நமது தரத்தையும் உணரலாம், உணர்த்தலாம், உயர்த்தலாம்.


கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொல்தெரிதல் வல்லார் அகத்து.” --- குறள் 717; அதிகாரம் – அவையறிதல்


கசடறச் சொல் தெரிதல் வல்லார் அகத்து (சொல்லின்) = குற்றம் குறைகளை நீக்கும் ஆர்வத்துடன் இருக்கும் ஒத்தவர்கள் அவையில், ஒருவர், தம் கருத்துகளைச் சொன்னால்; கற்று அறிந்தார் கல்வி விளங்கும் = அவரின் அறிவு மேம்படும். அவரின் அறிவு அனைவருக்கும் வெளிப்பட்டு அவரையும் உயர்த்தும்.

குற்றம் குறைகளை நீக்கும் ஆர்வத்துடன் இருக்கும் ஒத்தவர்கள் அவையில், ஒருவர், தம் கருத்துகளைச் சொன்னால், அவரின் அறிவு மேம்படும். அவரின் அறிவு அனைவருக்கும் வெளிப்பட்டு அவரையும் உயர்த்தும்.


கருத்தரங்குகளின் (Seminars) நோக்கமும் அதுதான். நாம் ஒரு துறையில் உயர வேண்டுமென்றால் அந்தத் துறை சார்ந்தக் கருத்தரங்கங்களில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும்.


என்ன அழகாகக் கருத்துகளை எடுத்து வைக்கிறார் நம் பேராசான். அதனால்தான், அவையறிதல் என்னும் அதிகாரம் எனக்கு மிக முக்கியமானதோர் அதிகாரமாகத் தோன்றுகிறது.


ஒத்தாருக்கும் இரு சொற்றொடர்களைப் பயன்படுத்துவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவையாவன: கற்றிந்தார், உணர்வது உடையார். அதாவது, படிப்பறிவு, பட்டறிவு உடையார்.


இவர்களின் அடுத்த உயர்நிலைதான் மிக்கார். அதாவது, முதுவர், வியன்புலம் ஏற்றுணர்வார்.


அடுத்துவரும் இரு குறள்கள் மூலம் வளர்ந்து கொண்டு வருபவர்களின் அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லப் போகிறார்.


வளர்ந்து கொண்டு வருபவர்கள் என்று மேற்பூச்சிட்டு சொல்கிறேன்.

நம் பேராசான் பயன்படுத்தும் சொல் ‘புல்லர்கள்’. அவருக்குத்தான் கல்லாதவர்களைக் கண்டாலே ஆகாது என்பது நமக்குத் தெரியும்.


அவர்களுக்கு இருப்பது கண்ணில்லை அது வெறும் புண் என்று கடுமையாகச் சாடுவார்.


நாளைத் தொடருவோம்.

மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page