top of page
Search

செய்க பொருளை 759, 381, 385

03/07/2023 (851)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

இறைமாட்சி அதிகாரத்தின் முதல் பாடலில், படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் உடையவன் அரசர்களுள் சிறந்தவன் என்றார்.காண்க 27/06/2023 (845). மீள்பார்வைக்காக:


படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு.” --- குறள் 381; அதிகாரம் – இறைமாட்சி


இதில் கூழ் என்பது பொருட் செல்வம். “ஈட்டி எட்டின மட்டும்தான் பாயும்; ஆனால், பணம் இருக்கே அது பாதாளம் வரை பாயும்” என்பார்கள்.

பணமானது ஒரு விதமான பலம். அது பல வேலைகளை எளிதாக்கும்.


“பாதாளம்” என்பதைக் கவனியுங்கள். பாதாளம் வரை பாய்ந்தால் அவன் தன்னை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்கிறான் என்று பொருள்.


தன் சமுகத்தை வாழ்விக்க பாதாளம் வரை பாய்ச்சத் தேவை இல்லை. இயல்பாகப் பாய்ச்சினாலே போதும்; அனைத்துப் பயிர்களும் செழிக்கும்!


நாம் மறையும் போது எந்தச் செல்வத்தையும் எடுத்துச் செல்வதில்லை என்பார்கள். ஆனால், இறுதிக் காலத்தில் நமக்கு ஒன்று ஆகிவிட்டால், மறைந்துவிட்டால் என்னாகும் என்று எண்ணித்தான் வாழ்நாள் முழுக்க பொருள் சேர்ப்பார்கள். அதுதான் சரியும்கூட.


நாம் என்றால் நாம் தனி ஒருவன் அல்லவே. இல்லறத்தானுக்கு அது ஒரு முக்கியமான வேலை. குறள்கள் 41, 42, 43 இன் மூலம் இல்லறத்தானுக்கு பதினோரு கடமைகள் என்பதை நம் பேராசான் ஏற்கெனவே நமக்குச் சொல்லியுள்ளார். காண்க 29/04/2021 (102). ஒரு எட்டு எட்டிப் போய் அதைப் பார்த்துவிட்டு வந்துடுங்க.


இது நிற்க. இங்கே தலைவர்களுக்கும் அதே கதைதான். அவர்களின் வேலை மக்கள் பொருள் செய்வதற்காக இயற்றல், ஈட்டல், காத்தல், காத்த வகுத்தல் என்ற நான்கினைச் சொன்னார் குறள் 385 இல். காண்க 30/06/2023 (848). மீள்பார்வைக்காக:


இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு.” --- குறள் 385; அதிகாரம் – இறைமாட்சி.


ஆதலினால், நில்லாமை, நிலையாமையெல்லாம் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அதுவெல்லாம் துறவிகளுக்கானது. அதை துறவறவியலில் சொல்லுவார்.


எனவே, பொருள் செயல்வகை என்னும் அதிகாரத்தை அரணுக்கு (75 ஆவது அதிகாரம்) அடுத்து வைக்கிறார்.


திருவள்ளுவப் பெருமான் ஆணையிடுபவர் அல்ல. “தம்பி இது உங்கப்பாடு” என்று எடுத்துத்தான் சொல்லுவார். ஆனால் அவர் ஆணையிடும் ஒரு குறள் என்றால் அதுதான் “செய்க பொருளை” என்ற ஆணை! இந்தக் குறளை நாம் முன்பு சில முறை சிந்தித்துள்ளோம். காண்க 29/01/2021 (12), 11/01/2023 (678). மீள்பார்வைக்காக:


செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.” --- குறள் 759; அதிகாரம் - பொருள் செயல்வகை


பொருள் செயல்வகையைத் தொடர்வோம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page