top of page
Beautiful Nature

செயிரின் தலைப்பிரிந்த ... 258

19/12/2023 (1018)

அன்பிற்கினியவர்களுக்கு:

“தலையே போனாலும் இதை நான் செய்யமாட்டேன்” என்பர். என்ன பொருள்? அஃதாவது, உயிரே போனாலும் பண்ணமாட்டேன் என்று பொருள்.

 

புலாலை மறுக்க வேண்டுமா இறைச்சிக் கூடத்திற்குச் (slaughterhouse/ abattoir) சென்று பாருங்கள் என்பர். என்ன ஒரு கொடுமை! இறைச்சி உருவாகும் விதத்தைப் பார்ப்பவர்கள் அந்த இறைச்சியின் மேல் உள்ள மயக்கத்தில் இருந்து விடுபடுவர். தலையைப் பிரிந்த உடல்களைப் பார்த்தவர்கள், அந்த ஊனை உண்ண மாட்டார்கள்.

 

செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன். – 258; புலால் மறுத்தல்


செயிர் = மயக்கம், பாவம், குற்றம், அசுத்தம்;

காட்சியார் = இறைச்சி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று பார்த்தவர்கள்; செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் = இறைச்சியின் மேலுள்ள மயக்கம் முற்றாக நீங்கி தெளிவு பெறுவார். அவர்கள்; உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் = ஓர் உயிரை முற்றாக நீக்கி அதனால் வரும் ஊனினை உண்ணமாடார்கள்.

 

இறைச்சி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று பார்த்தவர்கள், இறைச்சியின் மேலுள்ள மயக்கம் முற்றாக நீங்கி தெளிவு பெறுவர். அவர்கள், ஓர் உயிரை முற்றாக நீக்கி அதனால் வரும் ஊனினை உண்ணமாடார்கள்.

 

பார்வைக்குக் கொடுரமாக இருக்கும் முறைகளை நாங்கள் மாற்றிவிட்டோம் என்கிறார்கள். இப்போது, மேலை நாடுகளில் பன்றிகளை வெட்டுவது இல்லை. முச்சுத் திணறடித்துக் கத்தியின்றி இரத்தமின்றிக் கொல்கிறார்கள். எப்படி? நம் ஹிட்லரின் முறைதான்.  Gas chamber! கரியமில வாயு அறை! விலங்குகளைச் செயலிழக்கச் செய்ய 20 நொடிகள்தாம் தேவை! இன்னும் சில மணித்துளிகள், அவை மூச்சுத் திணறி உயிரைவிட! அகிம்சை முறையில் கொலை என்று மார் தட்டுகிறார்கள்.

 

ஓர் உயிர் இயற்கை முறையில் அல்லாமல் செயற்கை முறையில் போக வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவு துன்பப்பட்டப் பிறகே போகும். Energy can neither be created nor be destroyed. ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. ஆற்றலை முடக்க அதற்கு ஈடான ஆற்றல் செலவாகும். இதுதான் ஆற்றல் கோட்பாடு. அந்த உயிரின் வாதை நம் கண்ணுக்குத் தெரியாது அவ்வளவே!

 

இது உணவுச் சங்கிலி (food chain) என்று விளக்கமளிக்கலாம். இயற்கையாகத் தேவைக்கு நடப்பது உணவுச் சங்கிலி; நாம் செய்வது பேராசைக்குச் செய்வது.

 

அது இயற்கை; நாம் செய்வது செயற்கை. நாளைக்குத் தேவை என்று எந்த உயிரினமும் மற்றோர் உயிரை வளர்த்து உண்ணுவதில்லை!

 

செயற்கையாக உயிரினங்களை வளர்க்கும்போது நீர் ஆதாரம் முதலான அனைத்து வளங்களும் இயற்கையிலிருந்து திசைத் திருப்பப்படுகின்றன. அதிக உற்பத்தி வேண்டும் என்று பல ஊக்கிகளைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ஊக்கிகளைப் பயன்படுத்தி உருவான இறைச்சிகளைத்தாம் நாம் உண்கிறோம்.

 

இதெல்லாம் எப்படி உணவுச் சங்கிலியில் வரும்? வரும்! எப்படியென்றால் அந்தச் சங்கிலியில் சிக்கலாகத்தான் வரும். அதைச் சரி செய்ய முடியாவிட்டாலும் (cure) நாங்கள் அவற்றை நிருவாகம் (manage) செய்வோம் என்று மருத்துவ உலகம் பின்னாலே வரும்.

 

“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்” என்பதை “விழுந்தும் மருத்துவத்தின் பின்னது உலகம்” என்று மாற்றுகிறோம். இதுதான் இயற்கை என்று ஏமாற்றுகிறோம்.

 

இதைத்தான் நம் பேராசான் படம் பிடித்துக் காட்டுகிறார். நாம் எங்கேயும் நேரடியாகச் சென்று பார்க்கத் தேவையில்லை. மயக்கதில் இருந்து வெளியே வாருங்கள். மேலும் தொடர்கிறார்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.



ree


Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page