top of page
Search

சால்பிற்குக் கட்டளை ... 986, 985, 06/05/2024

06/05/2024 (1157)

அன்பிற்கினியவர்களுக்கு:

சான்றோர்களுக்கும் பணிவு வேண்டும் என்றார்.

நம்மாளு: யாரிடம்? எவரிடம்?

ஆசிரியர்: செய்து முடிக்கும் வல்லமை உடையவர்களின் ஆற்றலைப் பணிந்து போற்றி ஏற்றுக் கொள்ளுதல் தேவை.

நம்மாளு: அப்படிப் பணிந்து ஏற்றுக் கொண்டால்?

ஆசிரியர்: அது ஒன்றே, எதிரிகளை நண்பனாக மாற்றும் அல்லது அழிக்கும் கருவியும் ஆகும். நாம் இந்தக் குறளைப் பார்த்துள்ளோம். காண்க 06/07/2021. மீள்பார்வைக்காக:


ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை. - 985; - சான்றான்மை


சான்றாண்மையை நாம் கடைபிடிக்கிறோமா?

இதனை எப்படிக் கண்டறிவது? சான்றாண்மைக்கு உரைகல் வேண்டுமா?

 

ஆசிரியர்: இருக்கிறது. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் என்றவர், ஆற்றுவார் யார் என்று விரிக்கிறார்.

 

ஆற்றுவார் என்பவர் தமக்கு ஒத்தத் தகுதியானவராகவோ அல்லது உயர்ந்தவராகவோதான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. 

 

தமக்கு ஒத்தவராக இல்லாமல், வளர்ந்து வருபவராகவும் இருக்கலாம். கருத்து மோதலில் அவரின் கருத்து வெல்லுமானால் அந்தத்  தோல்வியை மன மகிழ்வோடு ஏற்றுக் கொள்வதும் சான்றாண்மையில் அடங்கும். இதுவே, சான்றாண்மைக்கு உரைகல் என்கிறார்.

 

துலாக்கோல் (Balance) என்றால் இரு பக்கமும் சரியான எடை இருக்கிறதா என்பதனை அளக்கும் ஒரு கருவி. தராசுக்குத் துலா என்பர்.

துலை என்றால் ஒத்தது என்று பொருள். துலையல்லார் என்றால் தம்முடன் ஒப்பிட்டு நோக்க அவர்கள் ஒத்தவர்கள் இல்லை. அவர்கள் இப்பொழுதுதான் வளர்ந்து வருபவர்கள் என்று பொருள்.

 

கட்டளை என்றால் கட்டளைக் கல். அஃதாவது, உரைகல்.

 

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல். – 986; - சான்றாண்மை

 

சால்பிற்குக் கட்டளை யாது எனின் = சான்றாண்மைக்கு உரைகல் எது எனின்; தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் = கருத்து மோதலில் வளர்ந்து வருபவர்களுடன் தோல்வியடைய நேர்ந்தால் அதனையும் மன மகிழ்வோடு ஏற்றுத் தம் கருத்தை மாற்றிக் கொள்வது

 

சான்றாண்மைக்கு உரைகல் எது எனின் கருத்து மோதலில் வளர்ந்து வருபவர்களுடன் தோல்வியடைய நேர்ந்தால் அதனையும் மன மகிழ்வோடு ஏற்றுத் தம் கருத்தை மாற்றிக் கொள்வது. 

 

அஃதாவது, திறந்த மனத்தோடு இருப்பது, முன் முடிவில்லாமல் இருப்பது சான்றாண்மைக்குச் சாட்சியாக அமையும்.

 

திருவிவிலியத்தில் (Holy Bible) ஒரு வசனம்:

 

“Judge not, and you will not be judged; condemn not, and you will not be condemned; forgive, and you will be forgiven;” – Luke 6:37

 

“மற்றவர்களை நியாயம் தீர்க்காதிருங்கள். இதனால் நீங்கள் நியாயம் தீர்க்கப்படமாட்டீர்கள். மற்றவர்களைப் பழிக்காதீர்கள். இதனால் நீங்களும் பழிக்கு ஆளாகமாட்டீர்கள். பிறரை மன்னியுங்கள். இதனால் நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்.” – லூக்கா 6:37

 

இவற்றையே சாக்கரட்டீசு பெருமான் “உன்னையே நீ அறிவாய்” என்றார். இதுதான் சான்றாண்மைக்கு உரைகல்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page